You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழக, கேரள எல்லையில் சுகவீனத்துடன் ஒற்றை யானை - வனத்துறைகள் குழம்புவது ஏன்?
உடல்நிலை மிகவும் மோசம் அடைந்த நிலையில் தமிழக, கேரள எல்லைகளில் ஒற்றை யானை ஒன்று கடந்த சில தினங்களாக திரிந்து வருகிறது. ஆனால், அது வனத்துறையினரின் பார்வையில் இதுவரை படாததால், அது கிடைத்தால், அதற்கு எந்த மாநில வனத்துறை சிகிச்சை தரும் பொறுப்பை ஏற்பது என்பதில் இரு தரப்புக்கும் இடையே குழப்பம் நிலவுகிறது.
கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு - கேரளா எல்லை அருகே ஆனைகட்டி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இதில் தமிழ்நாடு எல்லைக்கு உட்பட்ட பகுதியில் பெரியநாயக்கன்பாளையம் வனச் சரகத்திக்கு உட்பட்ட சீங்குளி பழங்குடியின கிராமம் அருகே அமைந்துள்ள கொடுத்துறைப்பள்ளம் ஆற்றங்கரையில் எட்டு வயது மதிக்கக்கத்தக்க ஆண் யானை ஒன்று ஆகஸ்ட் 15ஆம் தேதி தென்பட்டுள்ளது.
அந்த யானை மிகவும் பலவீனமான நிலையில் காணப்படுதவாக தமிழ்நாடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு - கேரளா எல்லைகளில் இரு மாநில வனத்துறையினரும் அந்த யானையை தேடும் பணியில் இறங்கினர். ஆனால் அந்த யானை எந்த மாநில எல்லைக்குள் வரும் என்கிற குழப்பத்தாலும் அப்படியே வந்தாலும் அதற்கு எந்த மாநில வனத்துறை சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பதிலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், யானை தொடர்பான தகவல்களை கேரள வனத்துறையிடம் தொடர்ந்து பகிர்ந்து கண்காணித்து வருவதாக கோவை மாவட்ட வன அலுவலர் அசோக் குமார் தெரிவித்துள்ளார்.
ட்ரோன் மூலம் யானையை தேட முயற்சி
இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலையில் கோவை மண்டல வன பாதுகாவலர் ராம சுப்ரமணியன் தலைமையிலான அதிகாரிகள் யானை முதலில் தென்பட்ட இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அங்கிருந்து ட்ரோன் மூலம் யானையை தேடும் பணியை வனத்துறையினர் முடுக்கி விட்டனர்.
கடைசியில், "களப் பணியாளர்களிடம் விசாரித்ததில் அந்த யானை இதற்கு முன்பு கோவை வனக் கோட்டப் பகுதியில் பார்க்கப்படவில்லை. அந்த யானைக்கு கொய்யா, பலா தென்னை கீற்று உணவாக வழங்கப்பட்டது. பெரிய நாயக்கன்பாளையம் சரக பணியாளர்கள் யானையை கண்காணித்து வந்தனர். கேரளாவை சேர்ந்த ஊழியர்கள் குழுவும் கண்காணித்து வருகிறது," என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை வன கால்நடை அலுவலரிடம் யானை தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டு ஆலோசனை பெறப்பட்டதாகவும் அதிகாரிகள் கூறினர். அந்த யானை சற்று பலவீனமாக காணப்படுகிறது. திங்கள்கிழமை மாலையில் கொடுந்துறைப்பள்ளத்தின் இரு புறமும் யானை சென்றதை கண்டதாக உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை 2 மணியளவில் கேரளா புதூர் பகுதிக்கு உட்பட்ட தாசனூர் மேடு பகுதிக்கு யானை சென்றது. அந்த இடம், கேரளாவில் உள்ள அட்டப்பாடி வனச் சரகத்தின் கீழ் உள்ளது.
இதையடுத்து கேரள வன அலுவலர்களுடன் யானை பற்றிய தகவல்கள் பகிரப்பட்டன. அதன்பேரில் கொடுந்துறைபள்ளம் ஆற்றின் இருபுறமும் கோவை வனக்கோட்டப் பகுதியிலும், மன்னர்காடு கோட்டப் பகுதியிலும் களப் பணியாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதை விவரித்த அதிகாரிகள், "வன பாதுகாவலர் மற்றும் கள இயக்குநர் யானை கண்காணிப்பு பணிகளை ஆய்வு செய்தனர். அவர்களின் அறிவுரைப்படி ஆனைமலை புலிகள் காப்பக கால்நடை மருத்துவர், சத்தியமங்கலம் புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ஆகியோர் இந்த பகுதிக்கு வரவும், பொள்ளாச்சியில் இருந்து 2 கும்கி யானைகள் கொண்டு வரவும் அவற்றின் உதவியுடன் யானை கிடைத்தவுடன் அதற்கு உரிய சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது," என்றும் தெரிவித்தனர்.
இதேவேளை, யானை ஒருவேளை தங்கள் பகுதியிலேயே இருந்தால் அதன் நடமாட்டத்தை உறுதிப்படுத்த கண்காணிப்பு நடவடிக்கை முடுக்கி விடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த விவகாரத்தில் எந்த மாநில எல்லையில் யானை கிடைத்தாலும் அதன் பூர்விகத்தை ஆராயும் முன்பு அதற்கு கூட்டாக இரு மாநில வனத்துறையினரும் சேர்ந்து சிகிச்சை தர வேண்டும் என்று இரு மாநில எல்லைகளிலும் வாழும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே, பலவீனமான நிலையில் ஒற்றையாக அந்த யானை நடமாடி வருவதால், அது ஒருவேளை தென்பட்டால் அதன் அருகே பொதுமக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்