You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பீமா கொரேகான் வழக்கு: கவிஞர் வரவர ராவுக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம் - யார் இவர்?
பீமா கொரேகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 82 வயது தெலுங்கு கவிஞர் மற்றும் எழுத்தாளர் வரவர ராவின் முதுமை மற்றும் உடல்நிலை மோசமடைந்ததை கருத்தில் கொண்டு உச்ச நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு. லலித் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
பீமா கொரேகான் வழக்கு
கடந்த 2018ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ள பீமா கொரேகானில் நடைபெற்ற பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
இந்த வழக்கு தொடர்பாக, செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் மகாராஷ்டிர காவல் துறையினர் சோதனைகள் நடத்தினர். புரட்சிகர எழுத்தாளர் சங்க நிர்வாகி பென்டியலா வரவர ராவ் வீட்டிலும் சோதனை நடந்தது. ஹைதராபாத்தில் வரவர ராவ் கைது செய்யப்பட்டு, அவரை காவல் துறையினர் புனேவுக்கு அழைத்துச் சென்றனர்.
அதே நாள் வழக்கறிஞரும், மனித உரிமை செயல்பாட்டாளருமான சுதா பரத்வாஜ், சிவில் உரிமைகள் செயல்பாட்டாளர் கவுதம் நவ்லங்கா, சுதிரா தவாலேவுக்காக வழக்கில் ஆஜரான வழக்கறிஞர் மற்றும் உரிமைப் போராளி அருண் பெரைரா, எழுத்தாளரும் உரிமை செயல்பாட்டாளருமான வெர்னான் கோன்சால்வ்ஸ் ஆகியோர் வெவ்வேறு இடங்களில் கைது செய்யப்பட்டனர்.
யார் இந்த வரவர ராவ்?
தெலங்கானாவைச் சேர்ந்த பெண்டியாலா வரவர ராவ் இடதுசாரி கருத்துகளை கொண்ட எழுத்தாளர், கவிஞர் மற்றும் 'விப்லவ ரட்சயாட்ல சங்கம்' என்னும் எழுத்தாளர் அமைப்பின் நிறுவனராவார்.
இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது இவர் மீது பல சதி குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும், பின்பு அவை திரும்ப பெறப்பட்டன.
ராம்நகர், செகந்திராபாத் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பகுதிகளில் நடைபெற்ற மோதல் சம்பவங்கள் குறித்த வழக்குகளில் இவர் விசாரிக்கப்பட்டுள்ளார்.
கடந்த 2002ஆம் ஆண்டு ஆந்திரப்பிரதேசத்தில் மாவோயிஸ்டுகளின் வன்முறையை நிறுத்துவதற்காக சந்திரபாபு நாயுடு தலைமையிலான அப்போதைய அரசாங்கம் ஏற்பாடு செய்த இருதரப்பு பேச்சுவார்த்தையில் இவர் பாடகர்-செயற்பாட்டாளரான காத்தாருடன் இணைந்து மத்தியஸ்தராக செயல்பட்டார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்