சிறுமி கரு முட்டை சர்ச்சை: தனியார் ஸ்கேன் கருவிகளுக்கு சீல் வைத்த அதிகாரிகள்

சிறுமி கரு முட்டையை விற்ற சர்ச்சையில் சிக்கியுள்ள ஈரோடு தனியார் மருத்துவமனையின் 3 ஸ்கேன் சென்டருக்கும் 10 ஸ்கேன் கருவிகளுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அந்த தனியார் மருத்துவமனைக்கு ஞாயிற்றுக்கிழமை சீல் வைக்க உள்ளதாக அரசு தலைமை மருத்துவமனை இணை இயக்குனர் பிரேம குமாரி தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை சரச்சையில் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளானது பிரபல தனியார் மருத்துவமனை. இதையடுத்து இந்த மருத்துவமனைக்கு சீல் வைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

முன்னதாக, இந்த விவகாரத்தை நீதிமன்றத்தில் முறையிட்ட மருத்துவமனை நிர்வாகம், அரசின் நடவடிக்கைக்கு விலக்கு பெற்று மருத்துவமனையை இயக்கி வந்தது. இந்த நிலையில் மருத்துவமனை முழுமைக்கும் சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து வெள்ளிக்கிழமை இரவு மருத்துவமனைக்கு சீல் வைப்பதற்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் பிரேம குமாரி தலைமையிலான அதிகாரிகள் சென்றனர்.

ஆனால், அந்த மருத்துவமனையில் 95க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்ததால், அவர்களை வெளியேற்ற மருத்துவமனை நிர்வாகமும், இந்திய மருத்துவ சங்கமும் கால அவகாசம் கேட்டன. அதன்படி ஒரு நாள் அவகாசம் வழங்கி அதிகாரிகள் திரும்பிச் சென்றனர்.

இதற்கிடையே, தனியார் மருத்துவமனைக்கு சீல் வைப்பதை கண்டித்து இன்று தனியார் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்ணா நடத்திய ஊழியர்கள்

அந்த மருத்துவமனையில் பணியாற்றும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் நீதிமன்ற உத்தரவை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தியும், இதில் முதல்வர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தலையிட்டு, தங்களது வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்றும் கோரி மருத்துவமனையின் வாயிலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் இணை இயக்குநர் பிரேம குமாரி ,சுதா மருத்துவமனையை விட்டு வெளியேற முடியாதபடி இரவு 11 மணி வரை மருத்துவமனைக்கு வெளியே ஊழியர்கள் தர்ணா நடத்தினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மருத்துவமனையில் நோயாளிகள் இருந்ததாலும், அவர்களை எப்படி பாதுகாப்பது என்றும் சீல் வைக்க வந்த அதிகாரிகளுடன் இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு தலைவர் டாக்டர் அபுல் ஹாசன் மற்றும் இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் சி.என்.ராஜா உள்ளிட்ட மருத்துவர்கள் குழுவினரும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியின் பாஜக சட்டமன்ற உறுப்பினரும், மருத்துவருமான சி.கே.சரஸ்வதி ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அப்பகுதியில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, தர்ணாவில் ஈடுபட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்கள் கலைந்து போகும்படி எச்சரித்தனர்.

இதைத்தொடர்ந்து போராட்டக்குழு பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை வெளியேற்றுவதற்காக மருத்துவமனை நிர்வாகத்துக்கு அவகாசம் அளித்துள்ளதாகவும் ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனைக்கு சீல் வைக்க மீண்டும் வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, சுதா மருத்துவமனைக்கு சீல் வைக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக அறிவித்தன.

எதிர்ப்பு தெரிவித்த மருத்துவர்கள்

இது குறித்து இந்திய மருத்துவ சங்கத்தின் தேசிய துணை தலைவர் டாக்டர் சி. என். ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, "இரண்டு நீதிபதிகள் தெரிவித்த கருத்து இன்னும் எங்களுக்கு முழுமையாகத் தெரியவில்லை. தவறுகள் நடந்தால் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் ஒரு தவறுக்கு ஒரு மருத்துவமனையையே சீல் வைப்பது என்பது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாதது," என்று கூறினார்.

சுதா மருத்துவமனையில் 60 மருத்துவர்கள் மற்றும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணி செய்கிறார்கள். ஒரு துறையில் நடந்த தவறுக்காக மருத்துவமனை முழுவதுமே பாதிக்கப்படுவது எங்களால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்தியா முழுவதும் தனியார் மருத்துவமனைகள் அரசுக்கு ஒத்துழைப்பு கொடுத்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா காலத்தில் எங்களுடைய உழைப்பை முழுவதும் கொடுத்தோம். இருந்தாலும் இப்படி மருத்துவர்களை சிறையில் அடைக்கும் நடவடிக்கையால் எதிர்காலத்தில் மருத்துவர்கள் பணி செய்யவே முடியாது என்று அச்சம் அதிகரிக்கும்," என்றார்.

இந்த அறிவிப்பின்படி, ஈரோட்டில் உள்ள 250க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் சனிக்கிழமை இயங்கவில்லை.

இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையின் இணை இயக்குநர் பிரேம குமாரி, "நீதிமன்ற தீர்ப்பு நகல் கிடைப்பதற்காக நள்ளிரவு வரை காத்திருந்தோம். இந்த மருத்துவமனையில் 95 நோயாளிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். இரவு நேரம் என்பதாலும் நோயாளிகள் சிலர் வென்டிலேட்டர் உதவியோடு உள் நோயாளியாக இருப்பதாலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதனால் சனிக்கிழமை பகலில் நோயாளிகளை மாற்றிக் கொள்வதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதனால் ஞாயிற்றுக்கிழமை சீல் வைக்க நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: