You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
செஸ் ஒலிம்பியாட்: "ஏன் கடலுக்குள் செஸ் விளையாடினோம்? விளக்கும் வைரல் டைவர்
- எழுதியவர், ஹேமா ராக்கேஷ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கடலுக்கு அடியில் செஸ் விளையாடி வித்தியாசமான நிகழ்வை நிகழ்த்தி இருக்கிறது சென்னையை சேர்ந்த தருண்ஸ்ரீ மற்றும் அவருடைய நண்பர்கள் குழு.
சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த அர்விந்த் ஒரு ஸ்கூபா டைவர். கடலுக்கு அடியில் திருமணம் நிகழ்த்துவது, போட்டோ ஷீட் நடத்துவது, போன்ற வித்தியாசமான நிகழ்வுகளை நடத்துவதுடன் கடலின் அடியில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகளையும் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறார். இந்த நிலையில்தான் கடலுக்கு அடியில் தன்னுடைய மகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களோடு செஸ் விளையாடி வைரலாகியுள்ளார். இந்த அனுபவம் குறித்து பிபிசி தமிழுக்காக தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் அர்விந்த் தருண்ஸ்ரீ.
சென்னையில் செஸ் ஒலிம்பியாட் நிகழ்வு நடைபெறுவதால் உலக நாடுகளில் இருந்து பல்வேறு சர்வதேச வீரர்கள் சென்னைக்கு வருகை தருவார்கள். செஸ் ஒலிம்பியாட் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த நினைத்தேன். அப்போது தான் இந்த ஐடியா தோன்றியது. ஆனால், இதற்கு பின்னே, ஏராளமான சவால்கள் எங்களுக்கு காத்திருந்தன.
அமாவாசைக்கு அடுத்த நாள்
செஸ் ஒலிம்யாட்டின் துவக்க நாளிலேயே இந்த நிகழ்வை நடத்த திட்டமிட்டு இருந்தோம். ஆனால் அமாவாசைக்கு அடுத்த நாட்கள் என்பதால் கடலின் சீற்றம் மிக அதிகமாக இருந்தது. அதனால் 2 நாட்கள் கழித்து திட்டமிட்டோம்.
எங்களுக்கு இருந்த முதல் சவால் " தம்பி " சின்னத்தை போன்று வடிவமைத்த மாஸ்க் தான். அந்த மாஸ்கை வடிவமைத்தவர் என்னுடைய நண்பர் சரவணன். இவர் ஒரு ஆர்ட் டைரக்டர். இப்போது அரசு சார்பாக வடிவமைக்கப்பட்டு இருக்கும் " தம்பி " சின்னத்தை வடிவமைத்தவர் இவர் தான். இவரை கொண்டே இந்த " தம்பி " மாஸ்கை Fibre Plastic கொண்டு வடிவமைத்தோம்.
கடலுக்குள் அதை அணியும் போது எடை அதிகமாக இருக்க வேண்டும். அதனால் 2 கிலோ எடை வைத்து என்னுடைய தலைக்கும் " தம்பி " முகத்திற்கும் நிறைய இடைவெளி விட்டோம். காரணம் கடலுக்குள் ஸ்கூபா மாஸ்க் மற்றும் உபகரணங்கள் அணியும் போது நாம் வெளிவிடும் காற்று Bubbles ஆக வெளிவரும். ஆனால் " தம்பி " சின்னத்தை அணியும் போது அதற்கு உள்ளேயே என்னுடைய மூச்சு காற்று அதற்கு உள்ளேயே அடைத்துக் கொண்டது. அந்த காற்று வெளியேற இரண்டு ஓட்டைகள் போடப்பட்டன.
எனக்கு இருந்த இரண்டாவது சவால் என்னுடைய கண்களுக்கும் " தம்பி " சின்னத்தின் கண்களுக்கும் அதிக இடைவெளி இருந்தது. நான் தான் டைவிங் குழுவின் தலைவர் என்பதால் என்னுடன் வரும் எல்லோருடைய பாதுகாப்பிற்கும் நான் தான் பொறுப்பு. அதனால் அவர்களை எப்போதும் கண்காணித்தபடி சைகைகள் மூலம் தான் சிக்னல் கொடுத்த முடியும். அதனால் என் கண்களுக்கு அருகே 2 ஓட்டைகளும், தம்பி சின்னத்தில் 2 ஓட்டைகளையும் போட்டோம்.
செஸ் காய்கள் மிதக்காதது ஏன்?
மூன்றாவது சவால் தண்ணீருக்குள் எப்படி செஸ் போர்டை கொண்டு செல்வது என்பது தான். ஏனென்றால் சாதாரண செஸ் போர்டை தண்ணீருக்குள் கொண்டு செல்ல முடியாது. அது மிதக்க தொடங்கிவிடும். அதனால் 7 கிலோ எடையிலான செஸ் போர்டை இதற்காக வடிவமைத்தோம். பின்னர் ஒவ்வொரு செஸ் காய் உள்ளே இரும்பு துகள்களை நிரப்பினோம்.
அனைத்து பொருட்களையும் தயார் செய்து முடித்த பிறகு மொத்தம் 7 பேர் இந்த பயணத்திற்கு தயார் ஆனோம். கடலை பொறுத்தவரை எல்லா இடங்களிலும் டைவ் செய்ய முடியாது. நீரோட்டத்திற்கு தகுந்தாற் போல் தான் இடத்தை தேர்வு செய்து டைவ் அடிக்க முடியும். தகுந்த இடத்தை தேர்வு செய்த பிறகு நான், என்னுடைய மகள், என் தங்கை, என் உறவினர்கள், என் நண்பர்கள் என 7 பேர் குழுவாக புறப்பட்டோம். 5 கிலோ மீட்டர் கடலில் பயணம் செய்து, தேர்வு செய்யப்பட்ட இடத்திற்கு அருகே படகை நிறுத்தினோம். அமாவாசைக்கு பிறகான நாட்கள் என்பதால் கடலின் சீற்றம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருந்தது.
பிறகு நாங்கள் 7 பேரும் கடல் உள்ளே செல்ல தயாரானோம். 12 மீட்டர் அதாவது 60 அடி கடலுக்கு உள்ளே இறங்கினோம். நீரோட்டம் எங்களை இடதும் வலதுமாக மிகவும் இழுத்தது. மொத்தம் 3 செஸ்போர்டுகள்.. 6 பிளேயர்கள் " தம்பி " சின்னத்தோடு நான் என 7 பேர் உற்சாகமாக கடலுக்கு அடியில் செஸ் போர்டை நிலை நிறுத்தினோம்.
முதலில் கடலுக்கு அடியில் இந்த ஏற்பாடுகளை முடிக்க 45 நிமிடங்கள் ஆயிற்று. அதற்கு பிறகு 20 நிமிடங்கள் என 3 முறை கடலுக்கு உள்ளே டைவ் அடித்து செஸ் விளையாட்டை விளையாடி இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்தினோம் என உற்சாகமாக சொல்லி முடித்தார் அரவிந்த் தருண்ஸ்ரீ
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்