You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சேலம் பெரியேரியில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் இல்லை; அது புத்தர் சிலை - தொல்லியல் துறையிடம் ஒப்படைக்க உத்தரவு
சேலம் மாவட்டம், பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை என்பது உறுதியாகி உள்ளதால், அந்த இடத்தை தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய புத்த சங்கத்தின் சேலம் மாவட்ட அமைப்பாளர் ரங்கநாதன் 2011ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், "சேலம் மாவட்டம் பெரியேரி கிராமத்தில், அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தில், 'தலைவெட்டி முனியப்பன்' கோயில் உள்ளது. அங்குள்ள சிலைக்கு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கோயிலில் உள்ளது புத்தர் சிலை. அந்த சிலை அமர்ந்த நிலையில் கைகளை மடியில் வைத்தபடி உள்ளது.
அதோடு சிலை மட்டுமின்றி, அங்குள்ள 26 சென்ட் நிலமும், புத்த சங்கத்துக்குச் சொந்தமானது. அந்த இடத்தை மீட்டு, புத்தர் சங்கத்திடம் மீண்டும் ஒப்படைக்க வேண்டும்" என்று கோரியிருந்தார்.
மேலும், இது குறித்து அறநிலையத் துறைக்கும், முதலமைச்சர் தனிப்பிரிவுக்கும் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை சமீபத்தில் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், "சம்பந்தப்பட்ட இடத்தில் இருப்பது தலைவெட்டி முனியப்பன் சிலையா? புத்தர் சிலையா? என ஆய்வு செய்து, தமிழக தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.
அதன்படி, தொல்லியல் துறை அறிக்கை தந்துள்ளது. அதில், "கோயில் கட்டிடம் நவீன தோற்றம் உடையது. அங்குள்ள சிலை கடினமான கல்லாலானது. தாமரை பீடத்தில், 'அர்த்தபத்மாசனம்' எனப்படும் அமர்ந்த நிலையில் சிலை உள்ளது. கைகள், 'தியான முத்ரா' கொண்டு உள்ளன. புத்தருக்கான அடையாளங்கள், சிலையின் தலை பகுதியில் உள்ளன. தொல்பொருள் மற்றும் வரலாற்று சான்றுகளை கவனமாக ஆய்வு செய்ததில், அந்த சிற்பம் மகா லட்சணங்களை கொண்டுள்ள புத்தர் சிலை தான்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "தலைவெட்டி முனியப்பன் சிலை எனக்கருதி, பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வந்துள்ளதால், அறநிலையத் துறை வசமே தொடர அனுமதிக்க வேண்டும்" என வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களுக்குப் பின் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு பிரபித்து உள்ளார் அதில் பெரியேரியில் இருப்பது புத்தர் சிலை தான் என்பதை, தொல்லியல் துறை தெளிவாகவும், திட்டவட்டமாகவும், தன் அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது. அந்த சிற்பம் புத்தர் சிலை என முடிவுக்கு வந்த பிறகு, தவறான அடையாளங்களுடன் தொடர அனுமதிக்க முடியாது. அதாவது, 'தலைவெட்டி முனியப்பன்' சிலை என, அறநிலையத் துறை கருத அனுமதிக்க முடியாது.
எனவே, புத்தர் சிலை உள்ள இடத்தை, தமிழக தொல்லியல் துறை தன் கட்டுப்பாட்டில் எடுக்க வேண்டும். அங்குள்ளது புத்தர் சிலை தான் என, அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும். அந்த இடத்தில் பொதுமக்களை அனுமதிக்கலாம். ஆனால், புத்தர் சிலைக்கு பூஜை உள்ளிட்ட பிற சடங்குகள் செய்ய அனுமதிக்கக் கூடாது. இதை தொல்லியல் துறை உறுதி செய்ய வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது" இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்