குரங்கம்மைக்கு இந்தியாவில் முதல் மரணம்; விசாரணைக்கு உத்தரவு

இன்று (01.08.2022) இந்தியா, இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்

குரங்கம்மையால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த கேரள மாநில இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டத்தில் உள்ள புனியூர் என்ற இடத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த 22ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து நாடு திரும்பினார். வீடு திரும்பியதும், அருகில் இருந்த கால்பந்து மைதானத்தில் கால்பந்து விளையாடினார்.

இந்த நிலையில் அவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. லேசான காய்ச்சல் அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் ரத்த மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இந்த நிலையில், அவருக்கு குரங்கம்மை பாதிப்பு இருப்பது உறுதியானது.

இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்தார்.

அவரது உடல் குரங்கம்மை பாதிப்பாளர்களின் மரணம் தொடர்பான நிலையான வழிகாட்டுதலின் அடிப்படையில் இறுதி அடக்கம் செய்யப்படவுள்ளது.

இந்தத் தகவலை கேரள மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ்-ம் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் இளைஞரின் மரணம் தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குரங்கு அம்மை பாதிப்பு வேகமாக பரவவில்லை, உயிரிழப்பும் பெரிதளவில் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இந்த உயிரிழப்பு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குரங்கம்மைக்கு இந்தியாவில் பலியான முதல் உயிர் இதுதான். ஆப்ரிக்காவுக்கு வெளியே இது 4ஆவது உயிரிழப்பு ஆகும் என்றும் அச்செய்தி தெரிவிக்கிறது.

நடுக்கடலில் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவி

நடுக்கடலில் விசைப்படகு பழுதானதால் தவித்த தமிழக மீனவர்களுக்கு இலங்கை கடற்படையினர் உதவிய சம்பவம் பாராட்டை பெற்று வருகிறது என்று இந்து தமிழ் திசை இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சனிக்கிழமை 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2,500க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த சேகர் பாண்டியன் என்பவருக்கு சொந்தமான மீன்பிடி விசைப் படகில் சரவணன், அலெக்சாண்டர், அந்தோணி, முருகன், சுப்பையா, சசி என 6 பேர் சென்ற விசைப்படகு இன்ஜின் பழுது ஏற்பட்டு தலைமன்னார் அருகே தத்தளித்துக் கொண்டிருந்தது.

ஞாயிற்றுக்கிழமை தலைமன்னார் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படைக்கு சொந்தமான எஸ்.எல்.என்.எஸ் ரணஜெயா என்ற ரோந்து படகு, இன்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த விசைப்படகினை மீட்டனர்.

முதற்கட்டமாக 6 மீனவர்களுக்கும் உணவளித்த இலங்கை கடற்படையினர் பழுதான விசைப்படகின் இன்ஜினையும் பழுதுபார்க்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் இயந்திரக் கோளாறை சரி செய்ய முடியாததால் சர்வதேச கடல் எல்லைக் கோடு வரையிலும் ராமேசுவரம் மீனவர்களின் விசைப்படகை கடற்படையின் ரோந்து படகு மூலம் இழுத்து வந்து ராமேசுவரத்தைச் சேர்ந்த மற்றொரு விசைப் படகிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''இலங்கை கடற்படை எல்லைகளை பாதுகாப்பதுடன் மனிதநேய உதவிகளை செய்வதிலும் முன் நிற்கும்'' என தெரிவித்துள்ளது.

இன்று முதல் பள்ளிகளில் மொபைல் செயலி மூலம் வருகைப்பதிவு

பள்ளி மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இன்று முதல், மொபைல் செயலியில் வருகைப்பதிவு செய்ய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

இன்று முதல், TNSED என்ற கல்வித்துறை செயலியில் மட்டுமே மாணவர்களின் வருகை, ஆசிரியர்களின் வருகை பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவேட்டில் வருகையை பதிவு செய்யக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுப்பு, தற்செயல் விடுப்பு, மருத்துவ விடுப்பு, முன் அனுமதி உள்ளிட்டவற்றையும் ஆசிரியர்கள் இனி இந்த செயலி வழியாகவே மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

அத்துடன், மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் பள்ளித் தரவை உள்ளிடவும், அதைக் கண்காணிக்கவும் ஆசிரியர்கள், பள்ளித் தலைவர்கள் மற்றும் பிற நிர்வாகப் பணியாளர்களால் இந்த செயலி பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.

இலங்கையில் இன்று முதல் QR மூலம் மட்டுமே எரிபொருள் விநியோகம்

தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமை (National Fuel Pass) இன்று முதல் நாடு முழுவதும் அமல்படுத்தப்படவுள்ளது என்று இலங்கையில் வெளியாகும் தினகரன் நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தங்களுக்கான ஒதுக்கப்பட்ட அளவு எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக, ஒரு வார காலம் உள்ளமையினால் நெரிசல் ஏற்படாத வகையில் செயற்படுமாறு வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர பொது மக்களிடம் கோரியுள்ளார். இதேவேளை, தேசிய எரிபொருள் அனுமதிப் பத்திர முறைமை என்ற QR முறைமைக்கு இன்று முதல் வாகன வருமான அனுமதி பத்திரத்தை கொண்டும் பதிவு செய்ய முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருளுக்கான QR முறைமைக்கு செசி இலக்கத்தை கொண்டு பதிவு செய்ய முடியாத வாகனங்களை இவ்வாறு பதிவு செய்ய முடியும். QR முறைமை தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு தீர்வு வழங்கி குறித்த முறைமை முழுமையாக செயற்படுத்துவதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேசிய எரிபொருள் அனுமதி பத்திர முறைமைக்காக, இதுவரையில் 46 இலட்சத்து 91 ஆயிரத்து 149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 41 லட்சத்து 59 ஆயிரத்து 357 வாகனங்கள் பெற்றோலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளதோடு 5 லட்சத்து 32 ஆயிரத்து 571 வாகனங்கள் டீசலுக்காக பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இலங்கை தினகரன் செய்தி தெரிவிக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: