யோகி மாடல்: கர்நாடக முதல்வர் பேசும் அளவுக்கு இதில் என்ன உள்ளது?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி இந்தி
கர்நாடகாவில் பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தலைவர் கொல்லப்பட்ட பிறகு, முதல்வர் பசவராஜ் பொம்மையை, அவரது சொந்த கட்சியும் துணை அமைப்புகளும் கூர்மையான கேள்விகளால் சூழ்ந்துள்ளன. காரணம், ஒரு மாநில முதல்வரான பொம்மை, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் 'மாடலை' பயன்படுத்த நேரிடும் என வெளிப்படுத்திய கருத்து இப்போது பேசுபொருளாகியிருக்கிறது.
தெற்கு கர்நாடகாவில் பாஜக தலைவர் பிரவீண் நெட்டாரு கொலை வழக்கில் ஜாகீர், ஷபீக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் அவரது சொந்த ஊரில் உள்ள கட்சியினர் முதல்வர் பசவராஜ் பொம்மையின் ஆளும் அரசு மீது கோபத்தில் உள்ளனர்.
அரசு முதல்வரின் சொந்தக் கட்சியினரைப் பாதுகாக்கத் தவறிவிட்டதாக உள்ளூர் பாஜகவினர் குற்றம்சாட்டுகின்றனர்.
முன்னதாக, கர்நாடகாவின் வகுப்புவாத உணர்வு அதிகம் காணப்படும் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக யுவ மோர்ச்சா தலைவர் பிரவீண் நெட்டாரு கொல்லப்பட்டார். அதற்கு மறுநாள் இரவு மங்களூருவில் மேலும் சில சந்தேக நபர்களை போலீஸார் கைது செய்தனர்.
தடுத்து வைக்கப்பட்ட 21 சந்தேக நபர்களும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) மற்றும் எஸ்டிபிஐ அமைப்பின் உறுப்பினர்கள். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
அதற்கு பதிலளித்த கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, "பிஎஃப்ஐ மற்றும் எஸ்டிபிஐ கட்சிகளை மத்திய அரசு தடை செய்ய வேண்டும். சில மாநிலங்கள் தடை விதித்துள்ளன. இந்த விவகாரத்தில் குறித்து மத்திய அரசு விரைவில் முடிவெடுக்கும்" என்றார்.
முன்னதாக, பிரவீண் இறந்ததை அடுத்து, வியாழக்கிழமை தனது அரசாங்கத்தின் ஓராண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட பல நிகழ்ச்சிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை ரத்து செய்தார்.
"இந்த கொலையைத் தொடர்ந்து நாங்கள் கோபமாக உள்ளோம். ஷிவமொகாவில் ஹர்ஷா (பஜரங் தள ஆர்வலர்கள்) கொல்லப்பட்ட சில மாதங்களுக்குள் நடந்த இந்த சம்பவம் என்னை வேதனைப்படுத்தியது," என்று பொம்மை கூறினார்.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
மேலும் அவர், "கர்நாடகாவில் நிலவும் சூழ்நிலையை கட்டுப்படுத்த அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி வருகிறோம். தேவைப்பட்டால், இங்கேயும் யோகி மாடல் ஆட்சியை அமல்படுத்துவோம்," என்று தெரிவித்தார்.
மாநிலத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சிக்கும் தேசவிரோத மற்றும் வகுப்புவாத சக்திகளை குறிப்பிட்டு அவர் இவ்வாறு கூறினார்.
அன்று மோதி, இன்று யோகியா?
இந்த ஆண்டு உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக வரலாற்றுபூர்வ வெற்றியைப் பெற்றிருக்கும் நேரத்தில் பசவராஜ் பொம்மையின் இந்த கருத்து வெளிவந்துள்ளது.
2014ஆம் ஆண்டு முதல், நாட்டில் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும் பிரதமர் நரேந்திர மோதியை மையப்படுத்தியே, பாஜக தேர்தல் களம் கண்டு வருகிறது.
இந்த நிலையில், மோதியின் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் எந்தளவுக்கு வளர்ச்சி இருந்தது என்பதை 'குஜராத் மாடலை' மேற்கோள்காட்டியே மத்தியிலும் மாநிலங்களிலும் ஆளும் பாஜக கூட்டணி கட்சிகள் தேர்தல் களத்தில் கூறி வாக்கு கேட்டன.
2017ஆம் ஆண்டில் நடந்த உத்தர பிரதேச தேர்தலிலும் நரேந்திர மோதியின் படங்களை பிரதானமாக்கியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பிரசாரம் செய்து வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து யோகி ஆதித்யநாத்துக்கு முதல்வர் பதவி வழங்கப்பட்டது.
சரித்திர வெற்றி பெற்ற 'முதல்வர்' யோகி
இந்த நிலையில், 2022இல் முதல் முறையாக உத்தர பிரதேசத்தில் 37 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி 5 ஆண்டுகள் ஆட்சி செய்து விட்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தது யோகி ஆதித்யநாத்தின் தலைமையில்தான் என்பதை இங்கே கவனிக்க வேண்டும்.
உத்தர பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பாஜக தனித்து 255 இடங்களை கைப்பற்றியது. இந்தத் தேர்தலுக்குப் பிறகு, ராம்பூர் மற்றும் அசம்கர் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் பாஜக வெற்றி பெற்றது. அதே நேரத்தில் இரண்டு தொகுதிகளும் சமாஜ்வாடி கட்சியின் கோட்டையாகக் கருதப்பட்ட இடங்கள்.
இந்த மகத்தான வெற்றிக்கு யோகி ஆதித்யநாத்தின் தலைமையும், பிரதமர் மோதியுடன் இணைந்து யோகி வெளிக்காட்டிய தமது ஆட்சி மாடலும்தான் பெரிய காரணம் என்று அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால், கர்நாடகாவின் தற்போதைய நிலையைப் பார்க்கும்போது, கிரிமினல்கள் அல்லது குற்றங்களுக்கு எதிரான அரசாங்கத்தின் கடுமையை காட்ட, இங்கும் யோகி மாடல் தேவை என்ற சொல்லாடல் இப்போது பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்லலாம்.
ஆனால் இங்கே கேள்வி என்னவென்றால் இந்த 'யோகி மாடல்' என்பது உண்மையில் என்ன என்பதுதான்.

பட மூலாதாரம், ANI
'புல்டோசர்' நடடிக்கையில் தொடங்கிய அரசியல்
மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான நீரஜா செளத்ரி, முதல்வர் யோகி மாடல் பற்றி யாராவது பேசினால், அதில் நிச்சயமாக 'புல்டோசர் அரசியல்' இருக்கும் என்று குறிப்பிடுகிறார்.
யோகி நிர்வாகத்தின் கண்டிப்பு அனைத்து சமூக மக்கள் மீதும் ஒன்றாக இருக்கிறதா? என்ற கேள்விக்கு நீரஜா செளத்ரிபதிலளிக்கையில், பாஜக தலைவர் ஒருவருடனான தமது உரையாடலை நினைவுகூர்ந்தார்.
அதன்படி யோகி ஆதித்யநாத்தின் வெற்றி 'முஸ்லிம்களுக்கு எதிரான அவரது அரசியல்'. அத்துடன் உத்தர பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கும் கடுமையாக்கப்பட்டுள்ளது.
யோகி ஆதித்யநாத் தனது முதலாவது பதவிக் காலத்தில், கலவரக்காரர்கள் மற்றும் குற்றவாளிகளின் வீடுகள் மீது புல்டோசர்களை ஏவினார். அது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒரு கூட்டத்தில் அகிலேஷ் யாதவ் கூட, யோகியை கிண்டல் செய்வதற்கு, அவரை 'புல்டோசர் பாபா' என்று அழைத்தார். இருப்பினும், இந்த 'புல்டோசர்' பின்னர் பாஜகவின் பிரசாரத்தின் முக்கிய அங்கமாக மாறியது.
'யுபி கி கட்டாயம் ஹை, புல்டோசர் ஜரூரி ஹை' மற்றும் 'பாபா கா புல்டோசர்' போன்ற குரல்கள் அதிகமாக பரப்புரையில் எதிரொலித்தன.

பட மூலாதாரம், ANI
யோகியின் முந்தைய ஆட்சிக் காலத்தில், கான்பூரில் 8 காவலர்களைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட விகாஸ் தூபேயின் வீட்டிலும் புல்டோசர் நடவடிக்கை பாய்ந்தது.
சமீபத்தில், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் நூபுர் ஷர்மா, முகமது நபி குறித்து வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்குப் பிறகு, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் நடந்த வன்முறைக்கு மூளையாகச் செயல்பட்டதாக கூறப்பட்ட ஜாவேத் பம்பின் வீடு, புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. சட்டவிரோதமாக அந்த கட்டுமானம் எழுப்பப்பட்டதாக கூறி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நிபுணர்களின் பார்வையில், புல்டோசர் நடவடிக்கை என்பது குற்றவாளிகள் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்கும் செயல்முறை மட்டுமல்ல. இதன் பின்னணியில், மாநிலம் முழுவதிலும் இப்போது நாடு முழுவதும் வலுவான ஒரு செய்தியை அனுப்ப ஆளும் பாஜகவினர் முயற்சித்து வருகிறார்கள்.
குற்றங்களுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்கும் நிர்வாகியாக யோகி அடையாளப்படுத்தப்படுகிறார். யோகி அரசின் விரைவு நடவடிக்கை ஃபார்முலாவைத் தொடர்ந்து, சமீபத்தில் மத்திய பிரதேசத்தின் சிவராஜ் அரசும், அசாமின் ஹிமந்தா பிஸ்வா சர்மா அரசும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தொடர்புடைய இடங்கள் மீது 'புல்டோசர்' நடவடிக்கையை கட்டவிழ்த்தன.
இப்போது நம்மிடையே மீண்டும் யோகி அரசு செயல்படும் விதத்தை விவரிக்கும் நீரஜா, "ஒருவரின் வாழ்க்கைச் சம்பாத்தியத்தில் கட்டப்பட்ட வீட்டை எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அரசாங்கம் இடிக்கிறது. இப்படி நடப்பது நம் நாட்டிற்கு மிகவும் புதிது. இப்போதெல்லாம் முழுமையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்கப்படுகிறதா இல்லையா என்பதைப் பற்றி கவலைப்பட வேண்டாம். சுருக்கமாகச் சொல்வதென்றால் யோகி மாடல், சட்டத்தின் சரியான செயல்முறையைப் பின்பற்றாமல் குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதாக உள்ளது," என்கிறார்.
யோகி ஏன் பாஜக மாநிலங்களுக்கு முன்னுதாரணம்?
சட்ட நடைமுறைகளை புறக்கணித்து, மற்ற பாஜக மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருப்பது தான் யோகி அரசின் மாடலா? குறிப்பாக கர்நாடகா போன்ற மாநிலங்கள் கல்வி, சுகாதாரம் போன்ற பல அடிப்படை நிலைகளில் உத்தர பிரதேசத்தை விட மேம்பட்டே உள்ளன என்றும் அவர் கூறுகிறார்.
பல தசாப்தங்களாக உ.பி அரசியலை உன்னிப்பாக கவனித்து வரும் மூத்த பத்திரிக்கையாளர் சுனிதா ஆரோன், "யோகி மாடல் என வரும்போது வன்முறைக்கு சமரசம் கிடையாது, குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாக இருந்தாலும் சரி, வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த வன்முறையாக இருந்தாலும் சரி சட்டத்துக்குப் புறம்பாக எது நடந்தாலும் அதில் சமரசம் கிடையாது என்பது உணர்த்தப்பட்டு வருகிறது. குற்றம்சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிரான முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமின்றி, அவர்களின் புகைப்படங்களும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக அரசு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தவர்களின் புகைப்படங்களும் வெளியிடப்படுகின்றன. இது சமூக உணர்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன," என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
இதேவேளை சிறந்த சட்டம்-ஒழுங்கு பராமரிப்புதான் யோகி மாடல் என்கிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி.
"உ.பி.யின் முந்தைய அரசாங்கங்களில், அதிகாரத்திற்கு இணையான வலையமைப்பை கிரிமினல் கும்பல் நடத்தி வந்தது. இதனால்தான் உத்தர பிரதேசத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில், கடந்த 5 ஆண்டுகளில், மாஃபியா மற்றும் கலவரக்காரர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை உத்தர பிரதேசத்தில் எடுக்கப்பட்டுள்ளது. மதம், ஜாதி எதுவாக இருந்தாலும் சட்டத்தை கையில் எடுக்க யாரையும் அனுமதிக்க முடியாது என்பது எங்கள் அரசின் நோக்கம்," என்று ராகேஷ் திரிபாதி கூறுகிறார்.
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், மத வழிபாட்டுத் தலங்களில் ஒலிபெருக்கியை வெளியே தெரியும் வகையில் ஒலிக்கச் செய்யக்கூடாது என உத்தரவிட்டார். அந்த நடவடிக்கையின் கீழ், உ.பி அரசு ஒரு வாரத்தில் 54,000 ஒலிபெருக்கிகளை அகற்றியதாகக் கூறியது.
மத வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்ட போதிலும் அதற்கு பெரிய அளவில் எதிர்ப்பு வலுக்கவில்லை.
காரணம், இஸ்லாமியர்களின் மசூதிகளில் ஒலிபெருக்கியை அகற்றும் முன்பாக மதுராவில் உள்ள கோவிலில் இருந்த ஒலிபெருக்கியை முதலில் யோகி அரசு அகற்றியது. அது மசூதி மீது பொருத்தப்பட்ட ஒலிபெருக்கியை அகற்ற முஸ்லிம்கள் மீது தார்மீக அழுத்தத்தைக் கொடுத்தது. அதேபோல் சாலைக்கு பதிலாக மசூதிக்குள் மட்டும் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தப்பட வேண்டும் என்ற விஷயமும் நடந்தது. இந்த விவகாரத்தை யோகி நிதானமாகக் கையாண்டார் என்கிறார் சுனிதா ஆரோன்.
உ.பி: யோகி ஆட்சியில் குற்றங்கள் குறைந்ததா?

பட மூலாதாரம், Getty Images
இந்த ஆண்டு தொடக்கத்தில் நடந்த தேர்தலுக்கு முன்பாக தமது அரசாங்கத்தின் சாதனையாக ஒரு விஷயத்தை விவரித்தார் யோகி ஆதித்யநாத்.
அது "2017க்குப் பிறகு மாநிலத்தில் இருந்து குற்றவாளிகள் வெளியேறினார்கள். வெளியே சென்றவர்கள் பொதுமக்கள் அல்ல," என்று அவர் கூறினார்.
இருப்பினும், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி, 2019ஆம் ஆண்டை விட 2020ஆம் ஆண்டில்தான் உத்தர பிரதேசத்தில் குற்றங்களின் எண்ணிக்கை 28 சதவீதம் அதிகரித்துள்ளன.
இது தவிர, உத்தர பிரதேசத்திலேயே அதிக கொலை மற்றும் கடத்தல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
2020ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் மூலம், மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்துள்ளதாக அரசாங்கம் கூறியுள்ளது.
நில மாஃபியாவுக்கு எதிரான யோகி அரசின் பிரசாரத்தின் ஒரு பகுதியாக நான்கு ஆண்டுகளில் மொத்தம் 484 குற்றம்சாட்டப்பட்டவர்கள் சிறைக்கு அனுப்பப்பட்டதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி ஒன்றில் கூறப்பட்டுள்ளது. இது தவிர வலுக்கட்டாயமாக சொத்துகளை அபகரித்த 399 பேர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது பற்றி எல்லாம் நம்மிடையே பேசிய மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சௌத்ரி, "விகாஸ் தூபே என்கவுன்ட்டரோ புல்டோசர் நடவடிக்கையோ, சட்டம் ஒழுங்கை 'கட்டுப்படுத்தியுள்ளோம்' என்ற செய்தியை வெளி உலகுக்கு தெரிவிப்பதில் யோகி அரசு வெற்றி பெற்றுள்ளது. இந்த அரசாங்கம் எப்படி முடிவுகளை திணிக்கிறது என்பது மக்களுக்கு அதிகம் தெரிய வாய்ப்பில்லை. ஆனால், இதுபோன்ற முடிவுகள் ஆபத்தாகவும் மாறலாம்," என்கிறார்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












