கொடைக்கானல் காடுகள் பசுமை பாலைவனமாகிறதா? இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கும் பல விஷயங்கள்

    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

18 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் இருந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்கள், தற்போது 40 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். என்ன நடக்கிறது கொடைக்கானலில்?

நதிகளின் தாய்மடி சோலைக் காடுகள் தான். அடர்ந்த நாட்டு மரங்களும் பரந்த புல்வெளிகளுமே சோலைக்காடுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த பரந்த புல்வெளிகள் பொழியும் மழையை தன் வசம் தக்க வைத்துக் கொள்பவை. மழை இல்லாத வறட்சிக் காலங்களில் புல்வெளிகள் தங்களது வேர்களில் தேக்கி வைத்திருக்கும் மழைநீரைக் கசிய விடும். அவ்வாறு பல ஆண்டுகளாக சொட்டுச் சொட்டாய்க் கசிந்த நீர் தான், ஓடைகளாய், அருவிகளாய், நதிகளாய் ஆர்ப்பரித்துச் செல்கின்றன.

கொடைக்கானல் மலையிலுள்ள சோலைக் காடுகளில் இருந்து வைகை மட்டுமல்ல காவிரிக்கும் தண்ணீர் செல்கிறது என்பது நிறைய பேர் அறிந்திராத உண்மை.

இத்தகைய காடுகளின் வரப் பிரசாதனமான சோலைக் காடுகளின் பெரும் பகுதி அழிக்கப்பட்டு ஆக்கிரமிப்பு மரங்களின் பெருக்கத்தால் காட்டுயிர்கள் வாழத் தகுதியற்ற, இடமாக கொடைக்கானல் மாறி வருவதாக இயற்கை ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

சோலைக் காடுகள் அழிந்த கதை

கொடைக்கானலில் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இருந்த 200க்கும் மேற்பட்ட வகையைச் சேர்ந்த நாட்டு மரங்களும் புல்வெளிகளும் நிறைந்திருந்த பெரும் பகுதியின் அழிவு, இப்போதில்லை, ஆங்கிலேயர் காலத்திலேயே துவங்கி விட்டது.

கொடைக்கானலில் கீழ்மலை, மேல்மலை, மதிகெட்டான் சோலை, பாம்பார் சோலை, கூக்கால் சோலை என சுமார் 75 ஆயிரம் ஹெக்டேரில் புல்வெளி, சோலைக்காடு நிறைந்து, காட்டுயிர்கள் நிறைந்து பல்லுயிர்களின் வாழ்விடமாக இருந்தது.

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் தங்கள் வாழ்க்கைக்கு ஏற்ற தட்பவெப்பம், இயற்கையான சூழல் கொண்ட பகுதியாக கொடைக்கானல் மலைப் பகுதி இருந்ததால் அங்கு குடியமர்ந்தனர்.

தங்களது பொழுது போக்கிற்காக படகு குழாம், மலர் பூங்கா போன்றவற்றை அமைத்தனர். சோலைக் காடுகள் வழக்கமான இயற்கை சூழ்நிலையை உள்வாங்கி வளர்வதுடன் சுற்றுப்புறத்தை எப்போதும் ஈரப்பதத்துடனும் அடர்த்தியான நிழலுடனும் வைத்திருக்கும். இதனால் அப்பகுதியில் நல்ல மழைப் பொழிவு, குளிரான பருவநிலை ஆகியவை சமநிலை மாறாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

குமரி திட்டம்

இந்த அதீத குளிரைக் கட்டுப்படுத்தும் விதமாக குமரி திட்டம் என்ற பெயரில் திட்டத்தை வகுத்து சுமார் 18000 ஹெக்டேர் பரபரப்பளவில் வேட்டில், சீகை, யூகலிப்டஸ், பைன், சவுக்கு எனப் பல விதமான இறக்குமதி மரங்களை வளர்த்தெடுத்தனர். இந்த மரங்கள் அதிகளவில் நிலத்தடிநீரை உறிஞ்சியதுடன் அங்குள்ள பருவநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனால் கடுமையான குளிர் கட்டுக்குள் வந்தது.

தொழிற்சாலைகளுக்கு மூடு விழா

சாயப்பட்டறை, கூழ் மரத் தொழிற்சாலை, காகித உற்பத்தி, சிந்தெட்டிக் ஆடை தொழிற்சாலை ஆகியவற்றுக்கு மூலப்பொருளாகப் பயன்படும் என்ற நோக்கில் இந்த மரங்கள் அதிகளவு நடப்பட்டன. ஆனால், 2005ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடுவிழா கண்ட நிலையில், இந்த மரங்கள் ஏராளமாகப் பெருக ஆரம்பித்தன. சுமார் 18000 ஹெக்டேர் பரபரப்பளவில் தொடங்கிய இந்த மரங்களில், தற்போது, வேட்டில் மட்டும் 8,500 ஹெக்டேர், யூக்கலிப்டஸ் மட்டும் 6,500 ஹெக்டேர், பைன் மரங்கள் 3,250 ஹெக்டேர் பரப்பில் உள்ளதாக உத்தேசமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.

பசுமை பாலைவனம்

ஒளிச் சேர்க்கைக்காக இந்த வகை மரங்கள் ஒரு நாளைக்கு சுமார் 45 லிட்டர் தண்ணீரை உறிஞ்சுவதால் மழையின்மை ஏற்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த மலைப் பகுதியை நம்பியுள்ள 10க்கும் மேற்பட்ட அணைகளுக்கு தற்போது நீர்வரத்தும் குறைந்துள்ளது.

"இந்த ஆக்கிரமிப்பு மரங்களால், சதுப்பு நீர்த்தேக்க காடுகள், புல்வெளிகள், சோலைக்காடுகள் குறைந்து இயற்கையான சூழலியல் அமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டதால் கொடைக்கானலில் காட்டுயிர் சரணாலயம் சாத்தியம்தானா என்ற கேள்வி எழுகிறது," என்கிறார் காந்திகிராமம் பல்கலைக்கழக தாவரவியல் ஆராய்ச்சியாளர் ராமசுப்பு.

மேலும் இவர் பிபிசி தமிழிடம், "அலிஞ்சி, காட்டு நாவல், குறு நாவல், ருத்ராட்சம், கம்பளி வெட்டை, மலை கொய்யா, அந்துவான், மலை பூவரசு, செம்பாவு, காட்டு காரை, வெள்ளோடி உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட நாட்டு மரங்களின் வகைகள் அழிவின் விளிம்பில் இருக்கின்றன. நாட்டு மரங்களில் பூக்கும் பூக்கள், காய்கள், பழங்கள் பெரும்பான்மை பறவைகளின் பிரதான உணவாய் இருக்கின்றன. மேலும் நாட்டு மரங்களின் மரப்பட்டைகள் பல்வேறு வகையான புழுக்கள் மற்றும் பூச்சிகளின் வாழ்விடமாகச் செயல்படுகின்றன. மண்ணைச் சார்ந்து வாழக்கூடிய சிற்றுயிர்களுக்கு உணவாக இவற்றின் இலைகள் பயன்படுகின்றன. ஆனால் தற்போது நாட்டு மரங்களின் முளைப்புத் திறன் படிப்படியாய் குறைந்து வருவது ஆராய்ச்சியில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஆக்கிரமிப்பு மரங்களில் வெளியேறும் பிசின் மற்றும் இலை, அமிலத் தன்மையைக் கொண்டுள்ளது. இதன் தாக்கத்தால் நாட்டு மரங்கள் வேர் ஊன்ற இயலவில்லை. மேலும் அரிய வகை மூலிகைகள், கால்நடை தீவனங்கள், இந்த மரத்தினிடையே வளர முடியாத அளவுக்குக் குறுகிய காலத்தில் அதிகமாகப் பரவி புதர்களை உண்டாக்குவதால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக காட்டுயிர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதோடு பல்லுயிர் உணவுச் சங்கிலி தடைப்பட்டு, காட்டுயிர்கள் வாழத் தகுதியில்லாத, காட்டுப் பகுதியாக கொடைக்கானல் மலைப் பகுதி மாறி வருகிறது. இதன் காரணமாக, காட்டுயிர் சரணாலயம் கொடைக்கானலில் அமைவது சாத்தியம் தானா என்ற கேள்வி ஆராய்ச்சியாளர்களிடையே எழுகிறது" என்றார்.

"ஒரே வகையான மரங்கள் மட்டுமே இருப்பது காடு கிடையாது; காடு என்பது செடி, கொடிகள், புல்வெளிகள், குறுஞ்செடிகள், பெரிய மரங்கள் எனக் கலந்து இருக்க வேண்டும். அப்போது தான் பல்லுயிர் பெருக்கத்திற்கு காடுகள் உகந்ததாய் இருக்கும்," என்கிறார் கோவையை சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர் ராமமூர்த்தி.

இவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "ஆதி காலத்தில் மண் முழுவதுமே காடுகளாகத் தான் இருந்தது. தற்போது மனிதன் தன்னுடைய தேவைக்காக காடுகளை அழித்து மலைப்பகுதிகளில் மட்டுமே காடுகளை ஒதுக்கி வைத்திருக்கிறான். மலையும் மலை சார்ந்த பகுதிகளும் மட்டுமே தற்போது காடுகளாய் இருக்கின்றன. சமவெளி காடுகளை அழித்தாயிற்று. நிறைய ஆறுகள் காணாமல் போனதற்கு முக்கியக் காரணமே சோலைக் காடுகள் அளிக்கப்பட்டது தான்.

எனவே உடனடியாக அவசர சட்டம் நிறைவேற்றி துறை சார்ந்த வல்லுநர்களிடமும் அறிஞர்களிடமும் ஆலோசனை பெற்று அந்நிய ஆக்கிரமிப்பு மரங்களை அப்புறப்படுத்த வேண்டும். புழு, பூச்சி, ஊர்வன, சிறிய பறவைகள் என்று அனைத்தும் வாழ வேண்டுமெனில் காடு அதன் இயற்கையான அமைப்பின்படி இருக்க வேண்டும். ஒரே வகை மரங்கள் நிறைந்த தோப்பாக காடு இருக்கக் கூடாது," என்கிறார்.

கொடைக்கானல் வனத்துக்குள் இருக்கக்கூடிய புல்வெளிகள் மிகவும் மகத்துவமானது. இதைப் புதிதாக உருவாக்க முடியாது என்கிறார் இயற்கை ஆர்வலர் மைக்கில். மேலும், "ஆக்கிரமிப்பு மரங்களை முற்றிலும் அப்புறப்படுத்த வேண்டும் எனக் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ச்சியாக நீண்ட நெடிய போராட்டம் மேற்கொண்டு வருகிறோம். இந்தப் போராட்டத்திற்கு வனத்துறையின் உயர் அதிகாரிகளும் பல்வேறு வகையில் உதவி புரிந்துள்ளார்கள். தற்போது சென்னை உயர்நீதிமன்றம் தமிழகத்தில் இனிமேல் யூக்கலிப்டஸ் மரங்களை யாரும் நடக்கூடாது எனத் தடை விதித்திருப்பது நீண்ட சட்டப் போராட்டத்திற்குப் பிறகு கிடைத்த வெற்றி," என்றார்.

மேலும், "இந்த அந்நிய ஆக்கிரமிப்பு மரங்களால் கொடைக்கானல் வனப்பகுதியைச் சுற்றி அமைந்திருந்த 39 நீர்நிலைகள் மற்றும் 6 அணைகளின் நீர்ப்பிடிப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் வனப்பகுதியில் அமைந்துள்ள கீழ்மலை, மேல்மலை, மதிகெட்டான் சோலை, பாம்பார் சோலை, கூக்கால் சோலை, மரியன் சோலை, பிரகாசபுரம் புல்வெளிப் பகுதி உள்ளிட்ட பல புல்வெளிப் பகுதிகளில் தற்போது எச்சம் மட்டுமே இருக்கிறது. மேற்கண்ட அனைத்து புல்வெளிப் பகுதிகளிலும் வேட்டில் வகையைச் சார்ந்த அயல் மரங்களின் ஆக்கிரமிப்பு அதிகளவில் பரவியுள்ளது.

மேற்கண்ட மரத்தில் பூ பூத்தது என்றால் தோராயமாக ஆண்டுக்கு ஐந்து லட்சத்துக்கும் அதிகமான விதைகள் பரவும் என ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்திருக்கிறார்கள். இதன் வளர்ச்சி எவ்வாறு இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். புல்வெளி மிகவும் மகத்துவமானது, இதற்கு புத்துயிர் கிடைக்க வேண்டுமெனில் ஆக்கிரமிப்பு மரங்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும்," என்றார்.

"இயற்கை சூழலை நீர்த்துப் போகச் செய்த அயல் மரங்களை முற்றிலும் அளித்த பிறகு மீண்டும் சோலைக் காடுகள் உருவாகக் குறைந்தது 300 ஆண்டுகளுக்கு மேல் ஆகும்," என்கிறார் ஓய்வு பெற்ற உதவி வனப் பாதுகாவலர் ஆர்.ஆர்.ராஜசேகரன்.

அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, "காட்டின் சமவெளியில் இருந்த புல்வெளிகள் எதற்கும் பயன்படாது என நினைத்து அங்கே அந்நிய மரங்களை ஆங்கிலேயர்கள் வளர்த்தனர். இதன் தாக்கத்தால் இயற்கை சூழல் முற்றிலும் பாதிக்கப்பட்டது. மனிதன் எவ்வளவு முயன்றாலும் சோலைக் காடுகளை மீண்டும் உற்பத்தி செய்ய முடியாது. அடர்ந்த சோலைக் காடுகளில் இருக்கக்கூடிய மூலிகையில் 30% மட்டும் தான் தற்போது மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. அனைத்து வகையான மருந்துகளுக்கும் மூலதனமே சோலைக் காடுகள் தான். இயற்கையின் வரபிரசாதமான சோலை காடுகள் அழிவின் விளிம்பில் தற்போது இருக்கிறது," என்றார்.

யூகலிப்டஸ் மரங்களை நடத் தடை

காட்டுப் பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 13ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது. அதன் அடிப்படையில் மாவட்ட அளவில் இதற்காக கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டியில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் அந்தந்த மாவட்டங்களின் காட்டுப் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றும் பணிகளைத் துரிதப்படுத்துவார்கள். எனவே, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் காட்டுப்பகுதியில் இருந்து ஆக்கிரமிப்பு மரங்கள் முழுமையாக அகற்றப்படும் என்று தமிழக அரசு கூறியது.

இது தொடர்பான வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதிகள் அமர்வில், "தமிழக அரசு ஆக்கபூர்வமாகச் செயல்படவில்லை. ஆக்கிரமிப்பு மரங்களை அகற்றும் பணிகளைத் தனியாருக்குக் கொடுத்தாலே, விரைவில் முடியும். இதற்காக 10 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டியதில்லை. ஆக்கிரமிப்பு மரங்களை அகற்ற வேண்டும் எனக் கூறும் அரசே, ஏன் யூகலிப்டஸ் மரங்களை நட வேண்டும்," எனக் குறிப்பிட்டு, இனி தமிழகத்தில் யூகலிப்டஸ் மரங்களை நடுவதற்குத் தடை விதித்து இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 16-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: