செஸ் ஒலிம்பியாட்: தவறான புரிதலால் ட்ரெண்டாகிறதா மோதிக்கு எதிரான ஹேஷ்டாக்?

செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க நிகழ்வு உள்ளிட்ட பலவேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதி நாளை (ஜூலை 28ஆம் தேதி) தமிழ்நாடு வரவுள்ளார்.

ஒவ்வொரு முறையும் நரேந்திர மோதி தமிழகம் வரும்போது, இணையத்தில் 'கோ பேக் மோதி' (Gobackmodi) போன்ற ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாவது வழக்கமாக இருந்து வருகிறது.

அதுவே, இந்த முறை தமிழக காவல்துறை தெரிவித்த செய்தியை குறிப்பிட்டு வழக்கத்துக்கு மாறான விதத்தில் கோ பேக் மோதி என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது.

என்ன நடந்தது?

இந்தியாவில் முதல்முறையாக நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்காக, மாமல்லபுரத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் தமிழக அரசால் செய்யப்பட்டு வருகின்றன.

மறுபுறம், பிரதமரின் வருகைக்காக பாதுகாப்பு நடவடிக்கைகள், சென்னையில் போக்குவரத்து வழித்தட மாற்றங்கள் என சிறப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சென்னையில் இரு நாள்கள் பலூன்களை பறக்கவிடுவதற்கு குற்றவியல் நடைமுறைச் சட்டம் 144-இன் கீழ் காவல்துறை தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, சமூக வலைதளங்களில் எழுப்பப்டும் எதிர்கருத்துகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், " கருத்துகள் வர வர என்ன மாதிரியான வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் அனைத்தும் கண்காணிக்கப்படுகின்றன" என்று பதிலளித்தார்.

ஊடக செய்திகள்

இதையடுத்து, சமூக வலைதளங்களில் பிரதமரின் வருகையை எதிர்த்து பதிவிடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கைது செய்யப்படுவர் என்றும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதையடுத்து "கோ பேக் மோதி என்று போடக்கூடாதா" என்றும் "கோ பேக் மோதி என்று சொல்லமாட்டோம்" என்றும் சொல்லி அந்த ஹேஷ்டேகை பரப்பி வருகின்றனர்.

இப்படியாக, சமூக வலைதளங்களிலேயே குழப்பங்களால் நிறைந்த கேள்விகள் உலவுவதால், இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

பதிவை மாற்றிய ஊடகங்கள்

செய்தி ஊடகங்கள் தவறாக வழிநடத்தும் விதமாக செய்தி வெளியிட்டதால் இந்த முறை கோ பேக் மோதி ட்ரெண்ட் ஆகி வருகிறது என்று திமுக ஐடி விங் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி. ராஜா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல, சமூக வலைதள பதிவர்களும் ஊடகங்கள் தவறாக வழிநடத்தும் விதமாக செய்திகளை வெளியிடக்குடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.

இந்த வகையில், வழக்கத்துக்கு மாறான விதத்தில் ட்விட்டரில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: