வெட்டுக்கிளிகள் உண்மையில் மாட்டிறைச்சிக்கு மாற்றாக முடியுமா?

    • எழுதியவர், பாஸ்கல் க்செஸிங்கா
    • பதவி, பிபிசி ஃப்யூச்சர்

ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பெரும்பாலான மக்களுக்கு, சிள்வண்டு (cricket) மற்றும் வெட்டுக்கிளிகளை உண்ணும் எண்ணம் அருவெறுப்பாகத் தோன்றலாம். ஆனால் அவை ஆப்பிரிக்கா மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் பிரபலமான சிற்றுண்டியாகும். அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன, கூடவே காலநிலைக்கு குறைவான தீங்கையே விளைவிகின்றன.

உகாண்டாவில் உள்ள எனது குடும்ப வீட்டில் 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்.என் சகோதரி மேகி வெட்டுக்கிளிகளை வறுத்துக்கொண்டிருந்தாள். பச்சையான, மிருதுவான வெட்டுக்கிளி பூச்சிகளைக் கிளறிவிட, நறுமணம் வலுவாகவும் நன்றாகவும் மாறியது. அந்த பாத்திரத்தில் இருந்து நீராவி எழுந்தபோது, என் சுவை அரும்புகள் கிளர்த்தெழுந்தன. இந்த சுவையான சிற்றுண்டியை உடனே சாப்பிடவேண்டும் என்று மனம் பரபரத்தது.

இது நான் வெட்டுக்கிளிகளை உண்பதன் முதல் அனுபவம் அல்ல. எனது குழந்தைப் பருவத்தில் நான் அவற்றைத் தவறாமல் சாப்பிட்டுள்ளேன். உகாண்டாவில், வெட்டுக்கிளிகள் ஒரு சத்தான, சுவையான, மிகவும் விரும்பப்படும் சிற்றுண்டியாக இருக்கின்றன.

2000 வது ஆண்டு நானே முதன்முறையாக வெட்டுக்கிளிகளை பிடித்தேன். கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள விக்டோரியா ஏரியைச் சுற்றி இனப்பெருக்கம் செய்யும் இந்தப் பூச்சிகள், இரவில் திரளும் மற்றும் பகலில் எங்கள் குடும்ப வீட்டிற்கு அருகிலுள்ள பனி புல்லில் இறங்கும். இந்தச் சந்தர்ப்பத்தில் எனது டீன் ஏஜ் நண்பர்களுடன் சேர்ந்து, மேற்கு உகாண்டாவில் உள்ள ஹோய்மாவில் உள்ள எனது வீட்டிற்கு அருகே உள்ள ஒரு மலையில் புல்லில் இருந்து பூச்சிகளைப் பிடிப்பதில் நாளைக் கழித்தேன். இந்தப் பூச்சிகள் நிறைந்த ஒரு பெரிய பையுடன் திரும்பியபோது பெருமையாக உணர்ந்தேன்.

வெட்டுக்கிளிகளின் வாசனை எனக்கு எப்பொழுதும் கிறிஸ்துமஸை நினைவூட்டுகிறது. நவம்பரின் ஈரமான காலத்திலிருந்து உலர்வான ஜனவரி வரை பூச்சிகளை அறுவடை செய்வதற்கான சரியான நேரம். கிறிஸ்துமஸ் சமயத்தில் நான் மாட்டிறைச்சியை விட வெட்டுக்கிளிகளை அதிகம் சாப்பிடுவேன். ஏனெனில் அதன் சுவை எனக்கு மிகவும் பிடிக்கும்.

சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ஆண்டு ஜூன் மாதம் அந்த சுவைக்காக மீண்டும் ஏங்கினேன். அதனால் எனக்கு பிடித்த சில வெட்டுக்கிளி சிற்றுண்டிகளை மீண்டும் சமைக்க முடிவு செய்தேன். இது ஒரு பரிசோதனை உணர்வை எனக்கு அளித்தது. எனது உணவில் உள்ள எல்லா இறைச்சிக்கும் மாற்றாக இந்த மொறுமொறுப்பான உயிரினங்கள் ஆக முடியுமா? பூச்சிகளை உண்பதால் ஏற்படும் நன்மைகளைப் பற்றி நான் கேள்விப்பட்டேன். மேலும் எனது புரதத்தின் முக்கிய ஆதாரமாக வெட்டுக்கிளிகளை ஆக்கினால், எனது கார்பன் தடயத்தை எவ்வளவு குறைக்க முடியும் என்பதை அறிய ஆர்வமாக இருந்தேன்.

நான் இப்போது உகாண்டாவின் தலைநகரான கம்பாலாவில் வசிக்கிறேன். வெட்டுக்கிளிகள் இறங்கக்கூடிய புல்வெளிகள் இல்லாத அடர்ந்த நகரம். உகாண்டாவின் இரண்டு வெட்டுக்கிளி பருவங்களில், - மே-ஜூன் மற்றும் டிசம்பர்-ஜனவரி - ஆப்பிரிக்காவின் புல்வெளிகள் மற்றும் திறந்த புதர்கள் முழுவதிலும் பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் குவியும். ஆனால் கம்பாலா நகரவாசிகள் இந்த சுவையான பூச்சிகளை வழங்க விற்பனையாளர்களை நம்பியுள்ளனர். வெட்டுக்கிளிகளை கவரவும், அவற்றைப் பிடிக்கவும் விற்பனையாளர்கள் பிரகாசமான மின் விளக்குகளைப் பயன்படுத்துகின்றனர். அவர்கள் புதிய புல்லை எரித்து, புகையை உருவாக்கி பூச்சிகளை மயக்கமடையச் செய்கின்றனர். இதனால் அவை இரும்புத் தாள்களுக்குள் பறந்து காலி எண்ணெய் டிரம்களில் விழுகின்றன.

ஒரு செழிப்பான வணிகம்

வெட்டுக்கிளி வியாபாரம் ஒரு செழிப்பான வணிகமாகும். ஒவ்வொரு சீசனிலும் கம்பாலா தெருக்களில் விற்பனையாளர்கள் வலம் வருகிறார்கள், அவர்கள் ஒவ்வொரு சீசனுக்கும் சுமார் 760,000 உகாண்டா ஷில்லிங்ஸ் (USh) அல்லது சுமார் 200 டாலர்கள் அல்லது 162 பவுண்டுகளை சம்பாதிக்கின்றனர். இறக்கைகள் மற்றும் கால்கள் பறிக்கப்பட்ட நிலையில் உள்ள உயிருள்ள வெட்டுக்கிளிகள் நிறைந்த ஒரு பிளாஸ்டிக் கோப்பைக்கு நான் 20,000Ush ($5.26/£4.40) கொடுக்கிறேன்.

நான் வீட்டிற்குத் திரும்பியதும், பூச்சிகளை ஒரு பாத்திரத்தில் போட்டுக்கழுவி, உலர்ந்த பாத்திரத்தில் வைத்து, அதை மூடி, சிறிய தீயில் சுமார் 20 நிமிடங்கள் வைப்பேன். பூச்சிகள் எரியாமல் இருப்பதை உறுதிசெய்ய அவ்வப்போது கிளறி விடுவேன்.

சுமார் ஒரு மணி நேரம் கழித்து, வெட்டுக்கிளிகள் கொதிக்கத் தொடங்குகின்றன. மேலும் அவை கொழுப்பை வெளியிடுவதால் அவை பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் நிறமாக மாறுகிறது. இதனால் சமையல் எண்ணெய் இல்லாமல் அவற்றை வறுக்க முடிகிறது. இந்த கட்டத்தில் நல்ல நறுமணம் வெளிவரத் தொடங்குகிறது. ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் அல்லது அதன் நிறம் பொன்னிறமாக மாறும் வரை நான் கிளறும்போது மணம் இன்னும் அதிகரிக்கும். பிறகு நான் வெங்காயம், மிளகாய் மற்றும் உப்பு சேர்ப்பேன்.

கொழுப்பு கரையும் வரை பூச்சிகள் தொடர்ந்து வறுக்கப்படுகின்றன. மேலும் நான் கிளறும்போது மொறுமொறுப்பான ஒலிவரத் தொடங்கும். 30 நிமிடங்களுக்குப் பிறகு, வெட்டுக்கிளிகள் கரகரப்பாக, சாப்பிடத் தயாராகிவிடும்.

பிரெஞ்ச் பிரைஸ் உடன் சிக்கன் விங்ஸ் சாப்பிடுவது போல் பல வகையான உணவுகளுடன் சேர்த்து வெட்டுக்கிளிகளை சாப்பிடலாம். எனது பரிசோதனையின் நான்கு நாட்களில், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, அரிசி மற்றும் பட்டாணி ஸ்டூவுடன் வெட்டுக்கிளிகளை சாப்பிட்டேன்.

ஒரு கப் வெட்டுக்கிளிகள், ஒரு கிலோகிராம் (2.2 பவுண்டுகள்) மாட்டிறைச்சியை விட சற்று விலை அதிகம், இது சுமார் 13,000USh (£2.86/$3.42)வரை செல்கிறது. இருப்பினும், ஒரே ஒரு கப் வெட்டுக்கிளிகளைக் கொண்டு, நான் மூன்று வேளை உணவு சமைத்தேன்.

இரண்டாவது நாளில், நான் வெட்டுக்கிளிகள் மற்றும் உருளைக்கிழங்குகளை சமைத்தேன். நான் பொதுவாக உருளைக்கிழங்கை இறைச்சி அல்லது பீன்ஸ் ஸ்டூவுடன் சாப்பிடுவேன். மூன்றாவது மற்றும் நான்காவது நாளில், நான் வெட்டுக்கிளிகளை அரிசி மற்றும் பட்டாணி ஸ்டூவுடன் இணைத்தேன்.

வெட்டுக்கிளி உணவின் சுவை

எனக்கு வெட்டுக்கிளிகள் பாப்கார்ன் போன்றது. நான் சாப்பிடுவதை நிறுத்த விரும்பாத மற்றும் சலிப்படையாத ஒரு சிற்றுண்டி. மாட்டிறைச்சியை அடிக்கடி சாப்பிட்டால் ருசி இல்லாதது போல உணரத்தொடங்கும். ஆனால் நான்கு நாட்கள் தொடர்ந்து சாப்பிட்ட பிறகும் வெட்டுக்கிளிகள் மீதான என் ஆர்வம் குறையவில்லை. ஆனால் ஒரே சவால் என்னவென்றால், வாரம் முழுவதும் மொறுமொறுப்பான பூச்சிகளைக் கடித்ததால், மூன்றாவது நாளில் என் தாடைகள் கொஞ்சம் வலிக்க ஆரம்பித்தன. மற்றொரு பிரச்னை என்னவென்றால், உப்பு நிறைந்த வெட்டுக்கிளிகள் என்னை நம்பமுடியாத அளவிற்கு தாகமாக உணரச்செய்தன.

வெட்டுக்கிளிகளைத் தயாரிப்பதற்கு நான் எதிர்பார்த்ததை விட அதிக நேரம் எடுத்தது. என் சகோதரிகள் இந்தச் செயல்பாட்டில் எவ்வளவு முயற்சியையும் நேரத்தையும் செலவிடுகிறார்கள் என்பதை அப்போது நான் உணர்ந்தேன். ஆனால் அவற்றை சமைப்பது ஒரு சிக்கலான அல்லது சிரமமான பணி அல்ல . அவை தயாராகும்வரை ஒரு புத்தகத்தைப் படிப்பேன். நான் வெங்காயம் மற்றும் மிளகாயை வறுக்க பயன்படுத்தினேன், வெட்டுக்கிளிகள் சுவையாக இருப்பதால் கூடுதல் பொருட்கள் தேவையில்லை.

நிலையான புரதம்

வெட்டுக்கிளிகள் புரதம் நிறைந்த மற்றும் நிலையான சிற்றுண்டியாகும். கிழக்கு ஆப்பிரிக்காவில் ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பை மேம்படுத்துவதில் அவை முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று தான்சானியாவின் சோகோயின் பல்கலைக்கழகத்தின் பூச்சியியல் ஆராய்ச்சியாளரான லியோனார்ட் அல்ஃபோன்ஸ் கூறுகிறார். ஆண்டு முழுவதும் பூச்சிகள் நிலையான உணவு ஆதாரமாக வளர்க்கப்பட வேண்டும் என்று அவர் கூறுகிறார்.

"உண்ணக்கூடிய வெட்டுக்கிளிகள் மிகவும் மதிப்பு வாய்ந்தவை. அவற்றின் வர்த்தகம் உகாண்டாவில் வருமான ஆதாரமாக உள்ளது," என்று அல்ஃபோன்ஸ் கூறுகிறார். "உண்ணக்கூடிய வெட்டுக்கிளிகளின் வளர்ப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது, ஆண்டு முழுவதும் அவற்றின் விநியோகத்தை உறுதி செய்து கிழக்கு ஆப்பிரிக்காவில் ஊட்டச்சத்து, உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்,"என்கிறார் அவர்.

ஊட்டச்சத்து உள்ளடக்கத்தைப் பொருத்தவரை, உகாண்டாவில் Nsenene என்று அழைக்கப்படும் நீண்ட கொம்பு வெட்டுக்கிளிகள், 34-45% புரதம், 42-54% கொழுப்பு மற்றும் 4-6% நார்ச்சத்து ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பூச்சிகள் பொதுவாக வைட்டமின்கள் மற்றும் அமினோ அமிலங்களால் நிரம்பியுள்ளன.

கூடவே நிலையான நன்மைகளும் உள்ளன. பாரம்பரிய விவசாயத்திற்கு தேவையான நிலம், ஆற்றல் மற்றும் நீர் ஆகியவற்றின் ஒரு பகுதியை மட்டுமே பூச்சி வளர்ப்பு பயன்படுத்துகிறது. மேலும் குறைவான கார்பன் வெளியீடே உள்ளது.

இங்கிலாந்தில் உள்ள எடின்பரா பல்கலைக்கழகத்தின் உலகளாவிய உணவுப் பாதுகாப்பில் மூத்த ஆராய்ச்சியாளர் பீட்டர் அலெக்சாண்டர், "எனது புரதத்தின் முக்கிய ஆதாரமாக மாட்டிறைச்சிக்கு பதிலாக வெட்டுக்கிளிகளை ஆக்கியதன் மூலம் எனது உணவில் இருந்து கார்பன் வெளியேற்றத்தை பத்து மடங்கு குறைத்துள்ளேன்," என்று கூறுகிறார். "நாம் என்ன சாப்பிடத் தேர்வு செய்கிறோம் என்பது நமது உணவுகளுடன் தொடர்புடைய உமிழ்வுகளுக்கு மிகவும் முக்கியமானது" என்று அவர் குறிப்பிட்டார்.

உலகளவில் உண்ணப்படும் இறைச்சியில் பாதியை, உணவுப் புழுக்கள் மற்றும் சிள்ளுப்பூச்சிகளுக்கு மாற்றுவதன் மூலம் விசவாசய நிலத்தை மூன்றில் ஒரு பங்கு குறைக்கலாம். அதாவது 1,680 மில்லியன் ஹெக்டேர்களை விடுவிக்கலாம். இது இங்கிலாந்தின் பரப்பளவை விட 70 மடங்கு அதிகமாகும், இது உலகளாவிய கார்பன் உமிழ்வையும் குறைக்கும் என்று அலெக்சாண்டர் மற்றும் எடின்பரா பல்கலைக்கழகத்தின் பிற ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு தெரிவிக்கிறது. பூச்சிகளுக்கு அதிக உணவு தேவையில்லை. உதாரணமாக, அதே அளவு புரதத்தை உற்பத்தி செய்ய கிரிக்கெட் பூச்சிகளுக்கு மாடுகளைவிட ஆறு மடங்கு குறைவான தீவனமும், செம்மறி ஆடுகளை விட நான்கு மடங்கு குறைவாகவும், பன்றிகள் மற்றும் கோழிகளை விட இரண்டு மடங்கு குறைவாகவும் தேவைப்படுகிறது.

பூச்சிகளை வளர்ப்பது கால்நடை உற்பத்தியை விட குறைவான பசுமைக்குடில் வாயுக்களை உற்பத்தி செய்கிறது. குறிப்பாக கால்நடைகள் மற்றும் தீவனங்களின் போக்குவரத்தில் இதன் உமிழ்வு 18% ஆகும்.

எடுத்துக்காட்டாக கிரிக்கெட் பூச்சிகள், பசுக்களை விட 80% குறைவான மீத்தேன் மற்றும் பன்றிகளை விட 8-12 மடங்கு குறைவான அமோனியாவை உற்பத்தி செய்கின்றன என்று நெதர்லாந்தில் உள்ள வாஜினிஞென் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீத்தேன் என்பது 20 வருட காலஅளவில், கரியமில வாயுவைவிட 84 மடங்கு அதிக புவி வெப்பமடைதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அமோனியா மாசுபாடு, மண் அமிலமயமாக்கல், நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் சுற்றுச்சூழல் சேதத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள் கரிமக் கழிவுகளை உண்ணுகின்றன. இந்த கழிவுகள் அழுகும்போது ஏற்படும் உமிழ்வைக் குறைக்க இது உதவுகிறது.

"பல புரதச்சத்து நிறைந்த பூச்சிகளின் உமிழ்வு தீவிரம், எந்த விலங்கு அடிப்படையிலான உணவை விடவும் பல மடங்கு குறைவாக உள்ளது," என்கிறார் இல்லியனாய் அர்பனா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் விவசாயம் மற்றும் உணவு விநியோகத்தில் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தில் நிபுணத்துவம் பெற்ற ஆராய்ச்சியாளர் அதுல் ஜெயின். "ஆனால் அவை மாட்டிறைச்சி அல்லது பிற உணவுப் பொருட்கள் போல தொழில்துறை மட்டத்தில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. எனவே, எந்தவொரு உணவு, தாவரம் அல்லது விலங்கு அடிப்படையிலான பசுமைகுடில் வாயு உமிழ்வுகளின் நியாயமான ஒப்பீடு கிடைப்பதற்கில்லை,"என்று அவர் குறிப்பிட்டார்.

பூச்சிகளை எளிதாக வளர்க்கலாம்

ஆனால் அவற்றின் எல்லா நன்மைகளையும் கருத்தில் கொண்டு, பூச்சிகளை இன்னும் பரவலாக வளர்க்க முடியுமா?

"விலங்குகளுடன் ஒப்பிடும்போது பூச்சிகளை வளர்ப்பது எளிது. வீட்டின் அடித்தளத்திலும் உங்கள் வீட்டிலும் பூச்சிப் பண்ணையை வைத்துக் கொள்ளலாம். சில நாட்களில் ஒரு மில்லியன் பூச்சிகள் கிடைக்கும்" என்கிறார் அமெரிக்க நிறுவனமான என்டோசென்ஸின் தலைவர் பில் பிராட்பென்ட். உண்ணக்கூடிய பூச்சிகளை அமெரிக்கர்களின் தினசரி உணவின் ஒரு பகுதியாக மாற்றும் பணியில் இந்த நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

பூச்சிகள் இறைச்சிக்கு மாற்றாக முற்றிலுமாக மாற்றாது என்றாலும், உலக மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருவதால், வரும் ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையுடன் போராடக்கூடிய உலகில் அவை குறிப்பிடத்தக்க மாற்று புரத மூலத்தை அளிக்கலாம் என்று பிராட்பெண்ட் கூறுகிறார்.

உதாரணமாக, உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு கிலோ உயர்தர விலங்கு புரதத்திற்கும், கால்நடைகளுக்கு சுமார் 6 கிலோ தாவர புரதம் அளிக்கப்படுகிறது. உரம் மற்றும் கால்நடைத் தீவனம் போன்ற விவசாயச் செலவுகள் அதிகரிப்பதால், 2050ஆம் ஆண்டுக்குள் மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி மற்றும் கோழி இறைச்சிக்கான விலைகள் 30%க்கும் மேல் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த விலைகள் கூடுதலாக 18-21 சதவிகிதம் வரை அதிகரிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. காலநிலை மாற்றம் மற்றும் வீழ்ச்சியடைந்த விவசாய உற்பத்தித்திறன் காரணமாக, தீவனச் செலவுகளை அதிகரிக்கும். மாற்று புரத மூலங்களின் தேவையும் அதிகரிக்கும்.

உண்ணக்கூடிய பூச்சிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது

உலகளவில் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் உள்ள நாடுகளில் சுமார் 2,000 பூச்சி இனங்கள் உண்ணப்படுகின்றன.குறிப்பாக தாய்லாந்தில் வேகமாக வளர்ந்து வரும் பூச்சித்தொழில் உள்ளது, 20,000 பண்ணைகள் ஆண்டுக்கு 7,500 டன் பூச்சிகளை உற்பத்தி செய்கின்றன. ஆனால் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் உள்ள பலர் சிறந்த சுவை , சுற்றுச்சூழல் மற்றும் ஊட்டச்சத்து நன்மைகள் இருந்தபோதிலும் பூச்சிகளை உண்ணத் தயங்குகிறார்கள். தங்கள் உணவின் கார்பன் தடயத்தைக் குறைக்கும் வாய்ப்பை இழக்கிறார்கள்.

2019 மற்றும் 2021 க்கு இடையில் இங்கிலாந்தில் வசிக்கும் போது, உண்ணக்கூடிய வெட்டுக்கிளிகளை வாங்க சிரமப்பட்டேன். 2021 டிசம்பரில், வெட்டுக்கிளி பருவத்தின் தொடக்கத்தைக் கொண்டாடும் நிகழ்ச்சியை உகாண்டா நண்பர்கள் பகிர்ந்து கொண்டனர். எனது சமூக ஊடக பக்கங்கள் முழுவதிலும் வெட்டுக்கிளிகளின் சுவையான சிற்றுண்டியின் படங்களைப் பார்த்த பிறகு அதற்காக ஏங்கினேன். உகாண்டா ருசிக்கான எனது தேடல் என்னை கிழக்கு, மேற்கு லண்டன் மற்றும் லீட்ஸுக்கு அழைத்துச் சென்றது, ஆனால் என்னால் அதை கண்டுபிடிக்க முடியவில்லை.

இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு ப்ரூக்ஸ் பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் உளவியல் மற்றும் சந்தைப்படுத்தல் ஆராய்ச்சியாளரான இந்திரநீல் சாட்டர்ஜி, இங்கிலாந்தில் உண்ணக்கூடிய பூச்சிகளைத் தேடுபவர்கள் வெட்டுக்கிளிகளை விட எளிதாகக் கிடைக்கும் சிள்ளுப்பூச்சிகள் மற்றும் உணவுப் புழுக்களுடன் தேடலைத்தொடங்க வேண்டும் என்று கூறுகிறார். "வெட்டுக்கிளிகள் கிடைப்பதை சிரமமாக்கும் விநியோகச் சங்கிலி சிக்கல்கள் இருக்கலாம். ஏனெனில் அவை தற்போது இங்கிலாந்தில் பெருமளவில் உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதனால் அவற்றை வாங்குவது கடினம்" என்கிறார் சாட்டர்ஜி.

ஏற்கனவே மாறிவரும் காலநிலை, நோய் மற்றும் பூச்சிக்கொல்லிகளால் அச்சுறுத்தப்பட்டிருக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை மேலும் குறைவதற்கு, சில நாடுகளில் பூச்சிகளின் பரவலான அறுவடை மேலும் காரணமாகலாம் என்ற கவலையும் உள்ளது.

அணுகுமுறைகள் ஏற்கனவே மாறி வருகின்றன மற்றும் உண்ணக்கூடிய பூச்சிகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. 2027 வாக்கில், உண்ணக்கூடிய பூச்சிகளின் சந்தை $4.63bn (£3.36bn) அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பூச்சிகள் மற்றும் தாவரப் புரதங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட VEXo என்ற புதிய வகை உணவை பக் ஃபார்ம் உருவாக்கியுள்ளது, 2019 இல் ஒரு பைலட் திட்டத்தின் போது 200 வெல்ஷ் பள்ளி மாணவர்களுக்கு பள்ளி மதிய உணவின்போது போலோனைஸ் உணவுடன் அது வழங்கப்பட்டது. VEXo ஐ முயற்சிக்கும் முன், 27% மாணவர்கள் அதைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறினர். ஆனால் அதை ருசித்த பிறகு, 56% பேர் அதைத் தேர்ந்தெடுப்பதாகக் கூறினர்.

"இளம் வயதினர் உண்ணக்கூடிய பூச்சிகள் மற்றும் VEXo பற்றி அறிந்திருந்தால், வரும் ஆண்டுகளில் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அவற்றை வாங்கத் தொடங்கும் போது, 'ஓ, பூச்சிகள்: அவை மற்றொரு வகை உணவு',என்று சொல்வார்கள்," என்கிறார் பில்ப்.

உண்ணக்கூடிய பூச்சிகள் இப்போது சிறப்புக் கடைகளில் மட்டுமே விற்கப்படுவதில்லை. அமெரிக்க துரித உணவுச் சங்கிலியான வேபேக் பர்கர்களின் மெனுவில் கிரிக்கெட் மில்க் ஷேக்குகள் இடம்பெற்றுள்ள அதே வேளையில், ஐரோப்பிய பல்பொருள் அங்காடி சங்கிலிகளான கேரிஃபோர் மற்றும் சைன்ஸ்பரிஸ் ஆகியவற்றில் இவை விற்கப்படுகிறது.

ஆனால் உண்ணக்கூடிய பூச்சிகளை விரைவில் வாங்க நீங்கள் திட்டமிடாவிட்டாலும், நீங்கள் ஏற்கனவே அவற்றை சாப்பிட்டிருக்கக்கூடும். நாம் உண்ணும் புதிய விளைபொருட்களில் சிக்கிக்கொண்டோ அல்லது பாஸ்தா, கேக்குகள் மற்றும் ப்ரெட் போன்ற பொருட்களில் தற்செயலாக கலக்கப்படுவதன் மூலமாகவோ அவை உங்கள் உணவில் இடம்பெற்றிருக்கக்கூடும்.

அமெரிக்காவில் உள்ள உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம், ஒரு உணவை திரும்பப் பெறுவதற்கு முன்பு அந்த உணவில் எவ்வளவு பூச்சி மாசுபாட்டை அனுமதிக்கும் என்பதற்கான அளவை வெளியிட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, 100 கிராம் (3.6oz) சாக்லேட் பாரில், 60 பூச்சித் துண்டுகள் (முழு உடல் அல்ல) வரை இருக்கலாம். அதற்கு மேலே இருந்தால் எஃப்.டி.ஏ ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்கும். கோதுமை மாவில் ஒவ்வொரு 50கிராமிலும் (1.8அவுன்ஸ்) 75 பூச்சி பாகங்கள் இருக்கலாம், அதே சமயம் மக்ரோனி மற்றும் நூடுல்ஸில் ஒவ்வொரு 225கிராமிற்கும் (8அவுன்ஸ்) 225 பூச்சி பாகங்கள் இருக்கலாம்.

சில வகையான அத்திப்பழங்கள், ஒரு சிறப்பு அத்தி குளவி மூலம் மகரந்தச் சேர்க்கையை நம்பியுள்ளன என்பதும் கவனிக்கத்தக்கது. இதக்குளவி பழத்தின் உள்ளே இறக்கும் முன் தன் முட்டைகளை பழத்திற்குள் இடுகிறது. ஆனால் குளவியின் உடல் ஃபிசின் என்ற செரிமான திரவத்தால் விரைவாக ஜீரணிக்கப்படுகிறது. இது அத்திப்பழத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. இது குளவியின் சிறிதளவு பாகங்களை விட்டுச்செல்கிறது. சில சைவ உணவு உண்பவர்களிடையே தாங்கள் இந்தப்பழத்தை சாப்பிடலாமா என்ற விவாதத்திற்கு இது வழிவகுத்தது. இருப்பினும் அத்திப்பழத்தில் உள்ள மொறுமொறுப்பான அமைப்பு குளவியின் உடல் பாகங்களால் அல்ல, மாறாக விதைகளால் ஏற்படுகிறது. நவீன பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் பெரும்பாலான அத்திப்பழங்கள் ,குளவிகள் இல்லாமல் மகரந்தச் சேர்க்கை செய்யப்படுகின்றன.

ஆனால் இந்த தற்செயலான உட்கொள்ளுதலை ஒரு பக்கம் வைத்து, பூச்சிகளை உண்பதில் இருக்கும் பரவலான கசப்புணர்வை மாற்ற வேண்டும் என்று பல விஞ்ஞானிகள் கூறுகின்றனர். குறைந்த சுற்றுச்சூழல் தாக்கம் கொண்ட மற்றும் அதிக சத்தான உணவை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற உலகின் இரட்டை இலக்குகளை அடைய இது அவசியம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையில் எனக்குப் பிடித்த சிற்றுண்டியை அனுபவிப்பதற்காக, அடுத்த வெட்டுக்கிளி பருவத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: