You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம்
தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் கூறியதைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்ய பிரியா தெரிவித்துள்ளார்.
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இதில் திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியின் மகள் இந்த பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி, மற்ற மாணவிகள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தமது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே, மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே தகவல் கூறப்பட்டதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். அவரது நிலை தொடர்பாக பெற்றோருக்கு முறைப்படி பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது.
இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கற்களால் தடுப்புகளை அமைத்து அரசு பேருந்துகளை சிறைப் பிடித்தனர்.
இந்த நிலையில், மாணவி உயிரிழந்த தகவல் அவரது சொந்த கிராமத்தில் பரவியதை தொடர்ந்து அவரது உறவினர்களும் கிராமத்தினரும் பள்ளி வளாகத்தை நோக்கி வரத் தொடங்கினர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பெருமளவில் கிராமத்தில் குவிக்கப்பட்டனர்.
வட்டார வருவாய்த்துறை அலுவலர் அர்ஷத் பேகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு
இதற்கிடையே, மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பபள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவியுடன் தங்கி இருந்த சக மாணவிகள், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப் பிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் நேரடியாக தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்கள்.
மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோரும் பல்வேறு கிராமத்திலிருந்து அங்கு வந்தனர். யாரையும் பள்ளி வளாகத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் சக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், விடுதியில் தங்கியிருந்த மற்ற சக மாணவிகளை பெற்றோருடன் விடுதி நிர்வாகம் அனுப்பி வைத்ததது.
சிபிசிஐடிக்கு மாற்றம்
இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிகளில் ஏதாவது மாணவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவி உயிரிழந்த வழக்கை முதல் கட்டமாக சந்தேக மரண வழக்காக பதிவு செய்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுகிறோம். இதுவரை நடத்திய விசாரணையில் மாணவியை மாடியில் இருந்து தள்ளியோ மாடியில் இருந்து விழுந்ததாகவோ தெரிய வரவில்லை. அதற்கான காயங்களோ வேறு அறிகுறியோ அவரது உடலில் இல்லை. தூக்கிட்டதாலேயே அவர் இறந்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்," என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்