நரேந்திர மோதிக்கு ஸ்டாலின் எழுதிய ரகசிய கடிதம் - இபிஎஸ் டெல்லி வருகையில் என்ன நடந்தது?

டெல்லியில் குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்துக்கு இரு தினங்களுக்கு முன்பு அசோகா ஹோட்டலில் பிரியாவிடை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் ஆளும் பாஜக கூட்டணி மற்றும் அதன் ஆதரவு கட்சி ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த முதல்வர்கள், துணை முதல்வர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில் தமிழ்நாடும் இடம்பெற்றிருந்தது பலரது புருவங்களை உயர்த்தியிருக்கிறது. என்ன பின்னணி?

பிரதமர் அலுவலகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்த அழைப்பிதழ் கடிதத்தில் பாரதிய ஜனதா கட்சியும் அதன் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகள் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் அல்லது துணை முதல்வர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தனர்.

நேரமின்மை காரணமாக நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர்களுக்கு நேரில் வழங்க முடியவில்லை என்றும் டெல்லியில் உள்ள மாநில அரசு விருந்தினர் இல்லங்களில் பணியாற்றும் மாநில உள்ளுறை ஆணையர்கள் மூலம் அழைப்பிதழ் வழங்கப்படும் என்றும் கடிதத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.

அந்த வகையில், ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அசாம், பிகார், கோவா, குஜராத், ஹரியாணா, ஹிமாச்சல பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, நாகாலாந்து ஒடிஷா, சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தராகண்ட், உத்தர பிரதேசம், புதுச்சேரி ஆகிய முதல்வர்கள் மட்டுமே பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

என்டிஏவில் இல்லாத இரு முதல்வர்கள்

இதில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அவரது கட்சி மத்தியில் ஆளும் கூட்டணியில் இடம்பெறவில்லை. ஆனால், அவரது கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக களமிறக்கப்பட்ட திரெளபதி முர்மூவை ஆதரிப்பதாகக் கூறி தனது எம்பி, எம்எல்ஏக்களை அவருக்கு ஓட்டு போடவும் செய்தது.

மத்திய கூட்டணியில் இடம்பெறாத திமுக ஆளும் தமிழ்நாட்டு முதல்வருக்கு அழைப்பிதழை அனுப்பியது குறித்து பிரதமர் அலுவலகத்தில் விசாரித்தபோது, உள்துறை அமைச்சகம் அதற்கான ஏற்பாடுகளை செய்தது. நிகழ்ச்சிக்கு யார் வரவேண்டும் என்பதை இறுதிப்படுத்தியது பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் என்று பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இருப்பினும், திரெளபதி முர்மூவுக்கு ஓட்டு போடாத மற்றும் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான யஷ்வந்த் சின்ஹாவுக்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு வாக்களித்த மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுகவுக்கு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அதன் பிறகு சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய அவர் ஓரிரு அரசு நிகழ்ச்சியில் மட்டும் காணொளி மூலம் கலந்து கொண்டு விட்டு வீட்டில் இருந்தபடி முதல்வர் பணியை கவனித்து வருகிறார்.

இந்த நிலையில், வெளியூர் பயணத்தை தவிர்க்கும்படி அவருக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தியதால் பிரதமர் அலுவலக அழைப்பை ஏற்க முடியாத நிலை ஏற்பட்டது.

இருப்பினும் தமது சார்பில் வேறு யாரையாவது அனுப்பி வைக்க முடியுமா என முதல்வர் அலுவலகம் சார்பில் கேட்கப்பட்டபோது, அழைப்பிதழில் உள்ளவர்கள் மட்டுமே நிகழ்ச்சிக்கு வரும்படி மேலிட உத்தரவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இயலாமையை வெளிப்படுத்திய மு.க.ஸ்டாலின்

இதையடுத்து தான் கையெழுத்திட்ட ஒரு கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார்.

அதில், உடல் நல பிரச்னைகள் காரணமாக ஓய்வில் இருக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதால் அழைப்பை ஏற்க முடியவில்லை. தமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை குடியரசு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் ராம்நாத் கோவிந்துக்கு தெரிவிப்பதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

இதேவேளை, குடியரசு தலைவராக தேர்வாகியுள்ள திரெளபதி முர்மூவை திமுக எம்பிக்கள் டி.ஆர். பாலு, கனிமொழி, திருச்சி சிவா, பழனி மாணிக்கம், தமிழச்சி தங்க பாண்டியன், வில்சன் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும், சென்னையில் நடைபெறவுள்ள சதுரங்க ஒலிம்பியாட் திருவிழாவுக்கான அழைப்பிதழையும் அவரிடம் அளித்தனர். இந்த சந்திப்பு திரளபதி முர்மூ தற்காலிகமாக தங்கியிருக்கும் சாணக்கியபுரி அரசு குடியிருப்பில் நடந்தது.

முன்னதாக, பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ராம்நாத் கோவிந்த் பிரியாவிடை நிகழ்ச்சியில் தான் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அதே நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் கே. அண்ணாமலை ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்ற அண்ணாமலை அவருடன் சில நிமிடங்கள் பேசினார். அப்போது அங்கு வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் வந்த பிரதமர் நரேந்திர மோதி, அண்ணாமலையிடம் நலம் விசாரித்து விட்டு எடப்பாடி பழனிசாமியிடம், 'சென்னையில் சந்திப்போம்' என்று கூறிச் சென்றார்.

குழப்பத்தில் இருக்கிறதா பாஜக?

எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக அக்கட்சியின் பொதுக்குழுவால் தேர்வான போது தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை அவருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்தார்.

ஆனால், பிரதமர் மோதியோ பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

இபிஎஸ் தேர்வானபோது அதிமுக தலைமை விவகாரம் நீதிமன்ற விசாரணையில் நிலுவையில் இருந்ததால் பிரதமரும் பாஜக அகில இந்திய மேலிடமும் எடப்பாடி பழனிசாமிக்கு வாழ்த்து கூறுவதை தவிர்த்ததாகக் கூறப்பட்டது.

இந்த நிலையில்தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமானவர்களின் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தப்பட்டது.

மேலும், தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக அதிமுக இருந்தபோது சட்டவிரோத குட்கா தயாரிப்பு மற்றும் விற்பனை விவகார வழக்கை விசாரித்து வந்த சிபிஐ, அந்த வழக்கில் இரண்டு முன்னாள் டிஜிபிக்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் கவுன்சிலர், முன்னாள் அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுக்க தமிழக அரசிடம் அனுமதி கேட்டிருந்தது.

நீண்ட காலமாக பரிசீலனையில் இருந்த அந்த கடிதத்தின் அடிப்படையில் தமிழக அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியது.

குட்கா வழக்கில் அரசு திடீர் அனுமதி

அந்த பட்டியலில் முன்னாள் அமைச்ர்கள் சி. விஜயபாஸ்கர், என்.வி. ரமணா, முன்னாள் டிஜிபிக்கள் டி.கே. ராஜேந்திரன், ஜார்ஜ், வணிக வரித்துறை முன்னாள் துணை ஆணையர் வி.எஸ். குறிஞ்சிசெல்வன், முன்னாள் வணிக வரி அதிகாரி எஸ். கணேசன், உணவு பாதுகாப்புத்துறை முன்னாள் அதிகாரிகள் லட்சுமி நாராயணன், பி. முருகன், புழல் சரக காவல்துறை முன்னாள் உதவி ஆணையர் ஆர். மன்னர் மன்னன், செங்குன்றம் காவல் நிலைய முன்னாள் ஆய்வாளர் வி. சம்பத், சென்னை மாநகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஏ. பழனி ஆகியோரின் பெயர்கள் உள்ளன.

இந்த நடவடிக்கை எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவாக கருதப்பட்ட வேளையில்தான் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியுடனான அவரது சந்திப்பு அசோகா ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது.

இந்த சந்திப்பின்போது பிரதமர் நரேந்திர மோதி, எடப்பாடி பழனிசாமியை தனியாக சந்திக்காமல் அவமதித்து விட்டதாகவும் அதனால் அவர் திங்கட்கிழமை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெறும் குடியரசு தலைவர் பதவியேற்பு விழாவை புறக்கணித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை காலையில் சென்னைக்கு புறப்பட்டு விட்டார் என்று சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாயின.

அரசியல் கற்பிக்கும் ஊடகங்கள்

இது குறித்து டெல்லியில் அதிமுக அலுவலக விவகாரங்களை கவனித்து வரும் சந்திரசேகரிடம் பிபிசி தமிழ் பேசியபோது, பிரதமர் நரேந்திர மோதியை எடப்பாடி பழனிசாமி அசோகா ஹோட்லிலேயே சந்தித்து விட்டார் என்றும் பிரதமர் மோதியை சந்திக்க தனிப்பட்ட முறையில் நேரம் ஏதும் கேட்கவில்லை என்றும் கூறினார். இரு தரப்பிலும் மரியாதை நிமித்தமான சந்திப்பு நடந்ததால் அதை திரித்து ஆதாயம் தேட சில அரசியல் தொடர்பு ஊடகங்கள் முயல்வதாகவும் அவர் கூறினார்.

மறுபுறம் அதிமுக தலைமைக்கு உரிமை கோரி வரும் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் நரேந்திர மோதி வரும் 28ஆம் தேதி சென்னைக்கு வரும்போது அவரை தனிப்பட்ட முறையில் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. தற்போது அவர் கொரோனா பாதிப்புக்கு பிந்தைய ஓய்வில் இருப்பதால் பிரதமரை சந்திக்க டெல்லிக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது.

பாஜக நிலைப்பாடு

அதிமுகவில் இரு தலைவர்களும் தனித்தனியாக செயல்படும்போது மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி யாருக்கு ஆதரவு தரும் என ஏற்கெனவே தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலையிடம் கேட்டிருந்தோம்.

அதற்கு அவர், கட்சி விதிகளின்படி தொண்டர்கள் சேர்ந்து யாரை தலைவர் என்று ஏற்கிறார்களோ அவருடனேயே அரசியல் உறவை பாஜக மேற்கொள்ளும். அந்த வகையில் எடப்பாடி பழனிசாமியுடன் அரசியல் உறவில் இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வத்துடன் நட்புடன் இருக்கிறோம் என்று கூறியிருந்தார்.

எடப்பாடி பழனிசாமியின் அதிமுக தலைமை, ஓ. பன்னீர்செல்வத்தை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து நீக்கியதாக அறிவித்த அதே சமயம், ஓ.பன்னீர்செல்வும் தமது பங்குக்கு எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரை ஆதரிக்கும் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமது தலைமையில் இயங்கும் அதிமுகவே உண்மையான கட்சி என்று ஓ.பன்னீர்செல்வம் வாதிட்டு வருகிறார்.

இந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலக சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. அந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வாய்ப்புகளை ஓ.பன்னீர்செல்வம் ஆராய்ந்து வருகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: