உதயநிதிக்கு எதிராக ட்விட்டரில் ட்ரெண்ட் செய்யும் ரஜினி ரசிகர்கள்: காரணம் என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

கள்ளக்குறிச்சியில் பள்ளிக்கூடத்தில் நடந்த கலவரத்திற்குப் பிறகு, அன்றே_சொன்னார்_ரஜினி, நான்தான்_டா_ரஜினி ஆகிய ஹாஷ்டாகுகளின் கீழ் ரஜினிகாந்த்தின் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த கருத்துகளை டிவிட்டரில் பகிர்ந்துவருகின்றனர்.

உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான ஹேஷ்டேகையும் அவர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஜூன் 17ஆம் தேதியன்று கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடினர். இது தொடர்பாக தற்போது காவல்துறை மிகப் பெரிய அளவிலான கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தூத்துக்குடி கலவரத்தை ஒட்டி ரஜினிகாந்த் தெரிவித்த கருத்துகளை முன்வைத்து, அன்றே_சொன்னார்_ரஜினி, நான்தான்_டா_ரஜினி ஆகிய ஹேஷ்டேகுகளை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

அதேபோல, உதயநிதி ஸ்டாலினை குற்றம்சாட்டியும், கேலி செய்தும் "நான்தான்பா_உதவாக்கரை_உதய்" என்ற ஹேஷ்டேகையும் அவர்கள் ட்ரெண்ட் செய்கின்றனர்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ஆம் ஆண்டில் நடந்த கலவரத்தை ஒட்டி, கருத்துத் தெரிவித்த ரஜினிகாந்த், "வன்முறை ஏற்பட்டதற்கு சமூக விரோதிகளின் ஊடுருவலே காரணம்" என்றார். அவரது இந்தக் கருத்து கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளானது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ரஜினிகாந்த் பார்த்தபோது, காயமடைந்திருந்த ஒருவர் அவரைப் பார்த்து யார் எனக் கேள்வியெழுப்பினார். அதற்கு ரஜினி, "நான்தான்பா ரஜினிகாந்த்" என்று பதிலளித்தார். ரஜினிகாந்த் எதிர்ப்பாளர்கள் அந்த சமயத்தில் அதைவைத்து "நான்தான்பா ரஜினிகாந்த்" என்பதை ட்ரெண்ட் செய்தனர்.

இப்போது, கள்ளக்குறிச்சி சம்பவத்தில் கலவரம் ஏற்பட்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் அப்போது தெரிவித்தது இப்போது நடந்துவிட்டதாகக் கூறி, "அன்றே_சொன்னார்_ரஜினி, "நான்தான்_டா_ரஜினி" என்ற ஹேஷ்டேகுகளின் கீழ் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

அந்தத் தருணத்தில் ரஜினி பேசிய வீடியோவுடன் சிலர் தங்கள் கருத்துக்களைப் பதிவுசெய்து வருகின்றனர்.

"சுத்தமான நேர்மையான ஆன்மீக அரசியலுக்கான தேவை" என்று கூறி பலர் ரஜினியை அரசியலுக்கு அழைக்கின்றனர்.

2019 டிசம்பரில் தி.மு.க. சிஏஏவுக்கு எதிராக ஒரு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. அந்தப் போராட்டம் குறித்து ட்விட்டரில் பதிவுசெய்திருந்த உதயநிதி ஸ்டாலின், "உரிமைக்கான போராட்டத்தைக் கண்டு வன்முறை என்று அஞ்சும் வசதியான, வயதான பெரியவர்களை சரியான பாதுகாப்புடன் வீட்டிலேயே விட்டுவரவும்" என்று பதிவிட்டிருந்தார். இது ரஜினிகாந்தைத்தான் குறிப்பதாக அந்தத் தருணத்திலேயே ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இப்போது, கள்ளக்குறிச்சி கலவரம் வெடித்தபோது உதயநிதி ஸ்டாலின் அந்த அந்த இடத்திற்குச் செல்லாததைக் குறிப்பிட்டும், முன்பு ரஜினியை விமர்சித்ததைக் குறிப்பிட்டும் ரஜினி ரசிகர்கள் "நான்தான்பா_உதவாக்கரை_உதய்" என்ற ஹேஷ்டேகை ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.

ரஜினிகாந்த்தைப் போலவே நமது முதல்வரும் வயதானவர்தான். அவரையும் வீட்டில் இருக்கச் சொல்வீர்களா உதயநிதி என சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.

அந்த சமயத்தில், உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த கார்ட்டூனையும் பதிவிட்டு இப்போது விமர்சித்து வருகின்றனர்.

அன்றே_சொன்னார்_ரஜினி, நான்தான்_டா_ரஜினி ஆகிய ஹேஷ்டேகுகளைப் பொறுத்தவரை, கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாகவே இவை ட்ரெண்டிங்கில் இருந்து வருகின்றன.

ஆனால், இந்த ஹேஷ்டேகுகளின் கீழ் குறிப்பிடத்தக்க கருத்துகள் ஏதுமின்றி ரஜினியின் புகைப்படங்கள், வசனங்கள் ஆகியவையே பெரிதும் பகிரப்பட்டு வருகின்றன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :