கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை பெற வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய காவல்துறை

கள்ளக்குறிச்சி மாணவியின் மறு உடற்கூராய்வு தொடர்பான தகவலை உயிரிழந்த மாணவி வீட்டில், குற்றப் புலனாய்வு துறை அதிகாரிகள் ஒட்டியுள்ளனர்.கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரண விவகாரத்தில், உடற்கூராய்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரும் நிலையில், உடலைப்பெற்றுக்கொள்ளும்படி மாணவியின் இல்லத்தில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நேற்று (19.07.2022) மறு உடற்கூராய்வு பரிசோதனை நடைபெறுவதால் பெற்றோர் தரப்பில் ஆஜராக வேண்டும் என்று வட்டாட்சியர் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது. குறிப்பாக வாட்ஸ் அப் மற்றும் குறுஞ்செய்தி மூலமாகவும் தாய் செல்விக்கும், அவர்கள் தரப்பு வழக்கறிஞருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அவர்கள் யாரும் ஆஜராகவில்லை.இந்த நிலையில் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவரது உடலை நல்லடக்கம் செய்ய பெற்றுக் கொள்ளும்படி குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரி சார்பில் இறந்த மாணவியின் வீட்டில் நேற்றிரவு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

பின்னணி என்ன?

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம், செல்வி தம்பதியின் மகள் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே கனியாமூர் என்ற இடத்தில் உள்ள தனியார் பள்ளிக்கூடம் ஒன்றில் 12ஆம் வகுப்புப் படித்து வந்தார்.

கடந்த 13ஆம் தேதி காலையில் அந்தப் பெண் இறந்து விட்டதாக பெற்றோருக்கு தகவல் வந்தது. அவரது மகள் பள்ளிக்கூடத்தின் மாடியிலிருந்து கீழே விழுந்து தற்கொலை செய்து கொண்டதாக மாணவியின் தாயாரிடம் பள்ளி நிர்வாகத்தினர் தெரிவித்தனர். அந்தப் பள்ளிக்கூடத்தில் ஆறாம் வகுப்பிலிருந்து படித்துவந்த மாணவி, கடந்த ஜூலை 1ஆம் தேதிதான் பள்ளிக்கூட விடுதியில் சேர்க்கப்பட்டதாக அவரது தாயார் செல்வி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில்தான் கடந்த ஜூலை 13ஆம் தேதி அதிகாலை சுமார் 5 மணியளவில், அவரது சடலம் பள்ளி வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டது. தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் தாயார் செல்வி குற்றம்சாட்டினார்.

இதற்குப் பிறகு பெற்றோரும் அவரைச் சார்ந்தவர்களும் சிறுமியின் உடலை வாங்க மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். பிரேதப் பரிசோதனை அறிக்கையின் ஒரு பகுதி வெளியான நிலையில், நேற்று மாணவியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து நடந்த போராட்டம் வன்முறையாக மாறி, பள்ளி வளாகம், வாகனங்கள் கொளுத்தப்பட்டன. பெரும் கலவரமாக மாறிய நிலையில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அங்கு தமிழக காவல்துறை டிஜிபி, உள்துறை செயலர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

உடற்கூராய்வு

இந்த நிலையில், மாணவியின் உடலுக்கு மறு-உடற்கூராய்வு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி நேற்று (ஜூலை 19) பிற்பகல் 4.15 மணியளவில் தொடங்கியது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்த பரிசோதனை மாலை 7.15 மணிக்கு நிறைவடைந்தது. இந்த உடற் கூராய்வை விழுப்புரம் மருத்துவர் கீதாஞ்சலி, திருச்சி மருத்துவர் ஜூலியட் ஜெயந்தி, சேலம் மருத்துவர் கோகுல்நாத், தடவியல் நிபுணர் சாந்தகுமார் ஆகிய அடங்கிய குழுவினர் மறு பரிசோதனை செய்தனர். மேலும் இந்த பரிசோதனையானது சிபிசிஐடி எஸ்பி ஜியாஉல் ஹக் மற்றும் ஏடிஎஸ்பி கோமதி முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக மாணவியின் பெற்றோருக்கு உடற் கூராய்வு தொடர்பாக தகவல் அறிக்கை உயிரிழந்த மாணவியின் வீட்டில் ஒட்டப்பட்டது. அதில் மாணவி பெற்றோர் சார்பில் தந்தை இந்த இந்த பரிசோதனையில் பங்கு பெறலாம் என்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் குறிப்பிட்டிருந்தார். ஆனால் பெற்றோர் தரப்பில் இந்த மறு உடற்கூராய்வு பரிசோதனையில் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக மாணவியின் தந்தை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (ஜூலை 19) மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தங்கள் தரப்பு மருத்துவரைக் கொண்டு உடற்கூராய்வு செய்யும்படியும் அதுவரை மறு-உடற்கூராய்வு செய்யாமல் நிறுத்திவைக்கும்படியும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த வழக்கை ஜூலை 20ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை நிறுத்தி வைக்க முடியாது என்றும் தெரிவித்தது.

நேற்று உடற்கூராய்வு நடத்தப்பட்டபோதும் பிணவறை பகுதிக்கு மாணவியின் பெற்றோர் வரவில்லை. இதையடுத்து பெற்றோர் இல்லாமல் உடற்கூராய்வு நடத்தி முடிக்கப்பட்டது.

இந்த நிலையில்தான் மாணவியின் உடல் மறு உடற்கூராய்வு செய்யப்பட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை‌யில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :