You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டு, தூத்துக்குடி, இப்போது கள்ளக்குறிச்சி போராட்டம்: 'கும்பல்' மனநிலைக்கு வசப்படும் இளைஞர்கள் - உளவியல் பார்வை
- எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
- பதவி, பிபிசி தமிழ்
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் தனியார் பள்ளியில் மாணவி இறந்ததற்கு நீதி கேட்பதாக கூறி, போராட்டக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை பள்ளியில் திரண்டு, வன்முறையில் ஈடுபட்டனர். பள்ளி வாகனம், காவல்துறை வாகனம் போன்றவற்றை சேதப்படுத்தியதோடு, கற்களை வீசி காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய காட்சிகள் வைரல் ஆயின. இதில் கூட்டம், கூட்டமாக இளைஞர்கள் பள்ளி வளாகத்திற்கு திரண்டு வந்தது எப்படி என்ற கேள்வி ஒருபுறம் இருந்தாலும், ஒன்று சேர்ந்த கூட்டம் மோசமாக சேதம் விளைவித்தது குறித்தும் சமூகவலைதளங்களில் பேசப்படுகிறது.
பள்ளி மாணவியின் தாயார் அமைதியான முறையில் தனக்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். தமிழக டிஜிபி காணொளியில் பதிவான காட்சிகளை வைத்து கைது நடக்கும் என எச்சரிக்கை விடுக்கிறார்.
கூட்டமாக திரண்ட இளைஞர்கள் சேதம் விளைவிப்பதோடு, அதனை பலரும் செல்போனில் படம் எடுப்பது , வீடியோ எடுக்கும் காட்சிகளும் தொலைக்காட்சிகளில் பார்க்க முடிந்தது. இந்த கும்பல் மனப்பான்மை குறித்தும் இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பது பற்றியும் நிபுணர்களிடம் பேசியது பிபிசி தமிழ் .
கும்பல் மனநிலை
சென்னையைச் சேர்ந்த மனநலஆலோசகர் ஷர்மிலி ராஜகோபால் இந்த இளைஞர் கூட்டம் ஒன்றுகூடியதற்கான சாத்தியங்களை விளக்குகிறார். ''கள்ளக்குறிச்சி மாணவி இறந்த விவகாரத்தை பொறுத்தவரை இது ஒரு உணர்ச்சிமயமான பிரச்னையாக தொடங்குகிறது. பின்னர் அந்த மாணவியின் உறவினர், உற்றார் என பலரும் இதில் இணைகிறார்கள். ஒரு கட்டத்தில், அந்த ஊரில், பலரும் இந்த சம்பவத்தை விவாதிக்கிறார்கள். தலைமைக்கு ஒரு நபர் தேவை என்பதை விட, அந்த மரணத்திற்கு நியாயம் வேண்டும் என்ற சிந்தனை தலைவனாகிவிடுகிறது. இதில் நாம் பார்க்கவேண்டியது, 'செண்டிமெண்ட்' மனநிலையில்தான் முதலில் மக்கள் ஒன்றுசேர்கிறார்கள், பின்னர் அவர்களே கும்பல் மனநிலைக்கு செல்கிறார்கள்,''என்கிறார்.
அதாவது, "ஒவ்வொரு மனிதனும் தன்னை தனிநபராக பார்ப்பதில் இருந்து விலகி, பல நபர்கள் சேர்ந்து ஆற்றல் வாய்ந்த கூட்டமாக மாறுகிறார்கள்" என்கிறார் ஷர்மிலி.
"அவர்களுக்கு பயம், குற்றஉணர்வு ஆகியவை இருக்காது. தனிநபராக இருக்கும் அதே நபர், கும்பலில் செயல்படும்போது, பயம், குற்ற உணர்வை துறந்து, தன்னை ஒரு ஹீரோவாக பார்க்கும் மனநிலைக்கு மாறுகிறார். அதாவது பொறுப்பற்ற நிலைக்கு வருகிறார். ஒரு தனிநபர் கல் எறிவது, பொருட்களை உடைப்பது அல்லது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்துவது என்பது சவாலான ஒன்று. ஆனால் ,கும்பலாக இருக்கும்போது, அது எளிதாகிவிடுகிறது. அதிலும் உணர்ச்சிவசப்பட்ட மனநிலையில் இருக்கும் அந்த கும்பலுக்கு கூடுதலான தைரியம் பிறக்கிறது. அவர்கள் எதையும் செய்ய தயாராகிவிடுகிறார்கள். கும்பல் மனநிலை என்பது ஆதிமனிதன், கூட்டம் கூட்டமாக வாழ்ந்தபோது இருந்த மனநிலை. அதில் சரி, தவறு என்ற பாகுபாடுகள் அவ்வளவாக இருப்பதில்லை,''என்கிறார் ஷர்மிலி.
நல்ல வகையிலும் பயன்படுத்த முடியும்
கும்பல் மனநிலையுடன் இந்த சம்பவத்தில் இளைஞர்களின் சக்தி ஒன்றிணைக்கப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடுகிறார் ஷர்மிலி.
''பதின்பருவ மற்றும் இளவயது கூட்டத்தினர் ஒன்று சேர்ந்துள்ளனர். இதில் பலரும் உணர்ச்சிவசத்துக்கு ஆளாவது வசப்படுவது மிகவும் எளிது. உற்றுநோக்கினால், இவர்களில் பலர் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையை தொடங்காதவர்களாக இருக்கிறார்கள். ராணுவத்திற்கு கூட, மிக இளவயதில்தான் ஆட்களை தேர்வு செய்கிறார்கள். இளவயதில் உடற்பயிற்சி மட்டுமல்ல, மனதிற்கு பயிற்சி அளித்துவிட்டால் அந்த மனநிலையில் இருந்து மாறுவது கடினம்தான். இளமையில், நாட்டுக்காகத்தான் உன்வாழ்வு, அதுதான் உயர்ந்தது என்ற சிந்தனையை ஏற்படுத்திவிட்டால், அந்த எண்ணம் வேரூன்றி, பலகாலம் அந்த நபரின் வாழ்வில் நீடிக்கும்,''என்கிறார் அவர்.
கும்பல் மனநிலை என்பது வெறும் மோசமான வன்முறை சம்பவங்களில் மட்டும் காணப்படுவதில்லை என்றும் அவர் கூறுகிறார். ''சுதந்திர போராட்ட காலங்களில், பல ஆயிரம் மக்கள், ஆண்கள்,பெண்கள் என்ற பேதமின்றி, ஒன்று கூடினார்கள். தலைவர் ஒருவர் இருந்தால், அவர் பின் எந்த கேள்வியும் இன்றி போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கும்பல் மனநிலையில் ஒரு தனிநபர் தனக்கான சிந்தனை என்பதை மறந்து , கூட்டத்தின் ஆற்றலை வெளிப்படுத்தும் செயலில் ஈடுபடுகிறார். இந்த கும்பல் சக்தியை பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தமுடியும். ஜல்லிக்கட்டு போராட்டத்தில்கூட காணப்பட்டது இந்த கும்பல் மனநிலைதான். ஆனால் அந்த போராட்டம் இட்டுச்சென்ற தீர்வு வேறுமாதிரியாக அமைந்தது. கள்ளக்குறிச்சி சம்பவத்தில், வன்முறையாக வெடித்துள்ளது,'' என்கிறார் ஷர்மிலி.
பொது இடத்தில் கலவரம்
கூட்டமாக கூடி வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் பலர் இதற்கு முன்னர், குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டவர்களாகவோ, தொடர்ந்து கலவரம் ஏற்படுத்தும் நபர்களாக இல்லை என்றபோதும், அவர்கள்மீது தண்டனை பாயும் என்கிறார் ஒய்வு பெற்ற காவல் கண்காணிப்பாளர் கருணாநிதி.
''வன்முறையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி கூறியுள்ளார். பலரின் முகம் தெளிவாக சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அதோடு, தொலைக்காட்சி மற்றும் சமூகவலைதளங்களில் காணப்படுகிறது. இந்த வன்முறை தொடர்பாக கூட்டம் கூட்டமாக கைதாகியுள்ளனர். சட்ட ரீதியாக வழக்கு நடந்து, முடிவதற்கு பல காலம் ஆகும் என்றாலும், வன்முறையில் பங்கேற்ற காரணத்திற்காக நீதிமன்றம் செல்லவேண்டும், தண்டனை அனுபவிக்கவேண்டும் என்பதை மாற்றமுடியாது. இந்த கும்பலில் கூடிய நபர்கள் பலரும் முன்கூட்டி திட்டமிட்டு ஒன்றுசேர்ந்தது என்பது போல தெரிகிறது. இவர்களில் பலரும் நீதி வேண்டும் என்பதற்கு பதிலாக, பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபடுவதை விரும்பியுள்ளனர்," என்கிறார் கருணாநிதி.
இறந்த மாணவியின் தாயார் அமைதியான தீர்வை எதிர்நோக்கும்போது, ஜாதி ரீதியாக ஒன்று சேர்வது, கும்பலாக மக்கள் ஒன்று கூடி வன்முறையில் இறங்குவது தேவையற்றது" என்கிறார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்