You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
போலி பாஸ்போர்ட் விவகாரம்; உளவுத் துறை ஏடிஜிபி மீது அண்ணாமலை குற்றச்சாட்டு
மதுரையில் 2019ஆம் ஆண்டில் சுமார் 200 பேர் போலி பாஸ்போர்ட் பெற்றிருக்கும் விவகாரத்தில் தமிழ்நாடு உளவுத் துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்தை இடைநீக்கம் செய்து, விசாரிக்க வேண்டுமென தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியிருக்கிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, முதல்வரைச் சுற்றி பல ஆதாயக் குழுக்கள் இருப்பதாகத் தெரிவித்தார். "டேவிட்சன் தேவாசீர்வாதம் குறித்து பல தருணங்களில் குற்றம்சாட்டியிருக்கிறோம். டேவிட்சன் ஜூன் 2018ல் மதுரை மாநகர ஆணையராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று ஒரு வருடம் ஒரு மாதம் கழிந்த பின்பு திருச்சியிலிருந்து இலங்கை செல்லக்கூடிய ஒரு இலங்கை குடிமகனின் பாஸ்போர்ட்டை பரிசோதித்தபோது அது போலி எனத் தெரியவந்தது.
ஜூன் 28, 2019க்குப் பிறகு இரண்டு, மூன்று போலி பாஸ்போர்ட் விவகாரங்கள் வர ஆரம்பிக்கின்றன. சில அதிகாரிகள் தங்கள் பதவியை துஷ்பிரயோகம் செய்து, 200க்கும் மேற்பட்ட போலி பாஸ்போர்ட்களை கொடுத்திருக்கிறார்கள் என செப்டம்பர் 2019ல் கியூ பிராஞ்ச் சொன்னது. மதுரையில் உள்ள அவனியாபுரம் காவல் நிலையத்தில் மட்டும் 72 போலி பாஸ்போர்ட்களை கொடுத்திருக்கிறார்கள். மதுரையில் உள்ள மற்ற காவல் நிலையங்களில் 128 போலி பாஸ்போர்ட்களைக் கொடுத்திருக்கின்றன. இந்தியாவில் எங்கேயுமே இல்லாத அளவுக்கு ஒரு நகரில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எப்படி இவ்வளவு போலி பாஸ்போர்ட்கள் வந்தது எப்படி என்று ஆராய்ந்தார்கள்.
இதற்குப் பிறகு, 2019 செப்டம்பரில் தானாக முன்வந்து மோசடி, திட்டம்போட்டு ஏமாற்றுவது, பாஸ்போர்ட் சட்டத்தின் 12 ஏ, 12 பி ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குகளைப் பதிவுசெய்தது.
விசாரணையின் ஆரம்பகட்டத்திலேயே 53 போலி பாஸ்போர்ட்களைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் மீதமுள்ளவற்றைத் தேடிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்கள். அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. 21 ஜனவரி 2020ல் ஒரு வழக்கறிஞர் சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் எனக் கோரினார். காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதில் கியூ பிராஞ்ச் டிஎஸ்பி ஆஜராகி, மிகப் பெரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார். 'வழக்கை விசாரித்து வருகிறோம். 176 பேரை சோதித்திருக்கிறோம், சில பேரைக் கைது செய்திருக்கிறோம் என்று சொன்னார். 25வது பாயிண்டாக காவல்துறை ஆய்வாளர் பதவிக்குக் கீழிருப்பவர்கள் மட்டுமே விசாரிக்கபட்டிருக்கிறார்கள்' என்று கூறினார்.
இதை உயர் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஒன்றரை மாதத்திற்குள் வழக்கை முடியுங்கள் என்றது. கியூ பிராஞ்ச் டிஐஜி ஈஸ்வரமூர்த்தி இந்த வழக்கை கையில் எடுக்கிறார். மதுரை ஆணையர் அலுவலகத்தில் இருந்த உளவுத் துறை அதிகாரி, ஏசிபி சிவகுமார், மதுரை ஆணையர் டேவிட்சன் தேவாசிர்வாதம் ஆகியோரை விசாரிக்க வேண்டுமென டிஜிபிக்கு தகவல் அனுப்புகிறார்.
டிஜிபி அந்தக் கடித்ததை உள் துறை செயலருக்கு அனுப்புகிறார். அதேபோல தபால் துறை, பாஸ்போர்ட் துறையிலும் அதிகாரிகளை விசாரிக்க அனுமதி கோருகிறார். அதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாடு அரசு மட்டும் காவல்துறை அதிகாரிகளை விசாரிக்க அனுமதிக்கவில்லை.
இது தொடர்பான ஆவணங்கள் அவனியாபுரம் காவல் நிலையத்தில் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால், மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் அவை பத்திரமாக இருக்கின்றன. இந்த நிலையில் உள் துறைச் செயலர் உளவுத் துறை ஏடிஜிபிக்கு ஒரு கடிதம் எழுதி, அவர் கருத்தைக் கேட்கிறார். ஆனாலும், தமிழ்நாடு அரசு விசாரணைக்கு அனுமதி அளிக்கவில்லை. உயர் நீதிமன்றம் சொல்லி ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டன.
இந்த விவகாரத்தில் இப்போது யாரெல்லாம் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்ற கேள்வி வருகிறது.
சென்னையில் நெற்குன்றத்தில் பெருமாள் கோவில் தெருவில் மெட்ராஸ் கோல்டு நிறுவனத்திற்கு மேல் 3 மாடி கட்டடத்தை ஆரம்பித்து, அதன் மூலமாகத்தான் வேலை நடந்திருக்கிறது. செப்டம்பரில் வழக்குப் பதிவுசெய்த பிறகு அவர்கள் அதை மூடிவிட்டு ஓடிவிட்டார்கள். இப்போது அந்த கட்டடத்தின் உரிமையாளர், தனக்கு வாடகை வரவில்லையென காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால் அதைப் பற்றி காவல்துறை விசாரிக்கமாட்டேன் என்கிறது.
அந்த நிறுவனத்தைச் சார்ந்தவர்கள் தமிழ்நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்தவர்கள். உளவுத் துறை ஏடிஜிபி தமிழ்நாட்டின் தென்பகுதியைச் சேர்ந்தவர் என்று சொல்லவில்லை. அவர் அந்தப் பதவியில் தொடர வேண்டுமா என முதல்வர் முடிவெடுக்க வேண்டும். உடனடியாக விசாரணைக்கு அனுமதிக்க வேண்டும்.
அதனால்தான் ஆளுநருக்குக் கடிதம் எழுதி, இதனை சிபிஐக்கும் என்ஐஏவுக்கும் ஒப்படைக்க வேண்டுமெனக் கோரியிருக்கிறோம். ஏற்கனவே இரண்டு வழக்குகளை என்ஐஏ விசாரித்துவருகிறது. அமித் ஷாவுக்கும் கடிதம் எழுதப் போகிறோம். என்ஐஏ தன் சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி வழக்கை கையில் எடுக்க வேண்டும்.
மதுரை ஆணையராக இருந்தவர், சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தை சேர்ந்தவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும்" என்று கூறினார்.
பாஸ்போர்ட் தொடர்பான பரிசோதனைக்குச் செல்பவர்கள் கீழ்நிலை காவலர்கள்; அவர்கள் செய்யும் பணிக்கு அப்போது மாநகர ஆணையராக இருந்த டேவிட்சனைக் குறிவைக்கக் காரணம் என்ன எனக் கேட்டபோது, அவருடைய கையெழுத்துதான் இறுதிக் கையெழுத்து ஆகவே அவரை விசாரிக்க வேண்டுமென்றார் அண்ணாமலை.
"அவர் ஆணையராக வந்து ஒரு வருடத்தில் இதெல்லாம் நடக்கிறது. கமிஷனர் அலுவலக உளவுத் துறை அதிகாரி கமிஷனர் அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பார். அவருக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது. உளவுத் துறை ஏசிபிக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது. உளவுத் துறை அதிகாரி ஈஸ்வர மூர்த்தி அனுமதி கேட்டு கடிதம் எழுதிய பிறகும் அனுமதி கிடைக்கவில்லை. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போதுதான் சந்தேகம் எழுகிறது. டேவிட்சன் உளவுத் துறை ஏடிஜிபியாக வந்த பிறகு இவரே விசாரணைக்கான அனுமதியை மறுக்கிறார். முதல்வருக்கு இவரே ஆலோசகராக மாறுகிறார். விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக என்ன பயம்?
ராஜீவ்காந்தி மரணத்திற்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு வருவதற்கு இலங்கையை பயன்படுத்துகிறார்கள். இந்த நிலையில், இந்த வழக்கை ஏன் கிடப்பில் போட்டுவைத்திருக்கிறார்கள். முதல்வர் பதவிக்கு வந்து ஓராண்டு காலம் ஆன பிறகு ஏன் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை? அடுத்த சில நாட்களில் இது தொடர்பாக பல ஆவணங்கள் வெளிவருமென நம்புகிறேன்" என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார்.
மேலும், தமிழ்நாடு முழுவதும் உளவுத் துறையில் ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களை மட்டும் கொண்டுவருவதாகவும் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களையே உளவுத் துறையில் ஆங்காங்கே பணியில் அமர்த்தியிருப்பதாகவும் அண்ணாமலை குற்றம்சாட்டுகிறார்.
இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் அண்ணாமலை நேற்று கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்