அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ், இபிஎஸ் எதிர்நோக்கும் நீதிமன்ற தீர்ப்பு

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்களும், அதை எதிர்த்து ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களும் மோதிக்கொள்ளும் நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கி விட்டன. கட்சி தலைமை அலுவலகம் தொடங்கி தற்போது மாவட்ட அளவிலும் அந்த பிளவு பெரிய அளவில் விரிவடைந்திருப்பதை பார்க்க முடிகிறது.

அதிமுக பொதுக்குழு நடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (ஜூலை 11) விசாரணைக்கு வரும் நிலையில், ஒபிஎஸ்-இபிஎஸ் ஆதரவாளர்கள் மோதிக்கொள்வது, தனித்தனியாக பேட்டி கொடுப்பது, அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள், மூத்த கட்சி நிர்வாகிகள் பதிலுக்குப் பதில் பேட்டி கொடுப்பது என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத சூழல் நிலவுகிறது.

கடந்த வாரம், இராமநாதபுரத்தில் அதிமுக சார்பில் ஒற்றைத் தலைமை குறித்து மாவட்ட செயலாளர் முனியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒபிஎஸ்-இபிஎஸ் அணியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், நாற்காலிகளை தூக்கிப்போட்டு தாக்கும் காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளன.

மாவட்ட அளவில் உள்ள அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் என இரண்டில் ஏதாவது ஒரு அணியில் சேர்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்பதை இந்த சம்பவம் காட்டுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

ஜூலை 11ஆம் தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்கும் என்ற உறுதியுடன் இபிஸ் அணி ஆயத்தப்பணிகளை முடுக்கி விட்டுள்ளது.

நல்ல தீர்ப்பு வரும்: ஜெயக்குமார்

இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறுகையில், ''நீதிமன்றத்தில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைக்கும். சரியான திசையில் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வழக்கம் போல அழைப்பிதழை கொடுத்துள்ளோம். பொதுக்குழுவில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் சென்னைக்கு வந்து விட்டனர். நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என எங்களுக்கு 100 சதவீதம் நம்பிக்கை உள்ளது,'' என்கிறார்.

ஆனால் திங்கள்கிழமை திட்டமிடப்பட்டுள்ள பொதுக்குழுவுக்கு முறையான அழைப்பிதழ் தரப்படவில்லை என்கிறார் ஒபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ்.

''ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்துடன் தரப்பட்டால்தான் அந்த அழைப்பை ஏற்க முடியும். தலைமைக் கழக நிர்வாகிகள் எனக் கூறி அழைப்பு விடுத்தால் அதை ஏற்றக் கொள்ள முடியாது. இதுபோன்ற அழைப்பிதழ் தரப்பட்டுள்ளது இதுதான் முதல்முறை. பொதுக்குழுவை முறையாக நடத்த நீதிபதி உத்தரவிடுவார் என நாங்கள் நம்புகிறோம்,'' என்கிறார் கோவை செல்வராஜ்.

மேலும் அவர், இபிஎஸ் ஆதரவாளரான கே பி முனுசாமியின் மகன் சதிஷுக்கு ஆளும் திமுகவில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடத்தை ஒதுக்கி, 99 ஆண்டுகள் லீசுக்கு பெட்ரோல் பங்க் நடத்துவதற்கு ஒப்புதல் பெறப்பட்டதுடன் அந்த நிலையத்தை திமுக அமைச்சரே திறந்து வைத்துள்ளதாகவும் கூறினார் செல்வராஜ்.

இது குறித்து கே.பி. முனிசாமி கூறும்போது, "குற்றச்சாட்டுகளை அடுக்கிய கோவை செல்வராஜ் ஒரு அம்பு மட்டும்தான், எய்தியவர் ஒபிஎஸ்," என்றார்.

''திமுகவுடன் இணைந்து செயல்படுவது போன்ற சூழல் ஏற்பட்டதால்தான் ஓபிஎஸ்சை விட்டு நான் விலகினேன்," என்றும் அவர் கூறினார்.

"இத்தனை ஆண்டுகள் ஓபிஎஸ் உடன் பயணம் செய்ததை நினைத்தால் வேதனையாகவும், வெட்கமாகவும் உள்ளது. என் மகன் தனித்து அந்த பெட்ரோல் நிரப்பு நிலையத்தை நடத்தவில்லை. அதை நடத்துவதற்காக இணையம் ஒன்று உள்ளது. அதில் என் மகன் ஒரு உறுப்பினர். கடந்த அதிமுக ஆட்சியில், அரசுக்கு வருவாய் வர வேண்டும் என்பதற்காக தொடங்கப்பட்ட பங்க் அது. அதற்கான உரிமங்கள் முறையாக பெறப்பட்டு, தற்போதைய ஆட்சியில் உள்ள அமைச்சர் திறந்து வைத்துள்ளார்,'' என்கிறார் முனுசாமி.

இதற்கிடையே, ஓபிஎஸ்- இபிஎஸ் அணியில் உள்ளவர்கள் தங்களது பக்கம் பலம் சேருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதிமுகவில் நிலவும் இந்த சூழல் குறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசினோம்.

''தற்போதுள்ள நிகழ்வுகளைப் பார்க்கும்போது ஓபிஸ் தனது சொந்த மாவட்டத்திலேயே செல்வாக்கை இழந்து வருவது தெளிவாகிறது. அவருக்கு ஆதரவாக இருந்தவர்கள் பலரும் இபிஸ் கூடாரத்திற்கு சென்று விட்டார்கள். அவரது செல்வாக்கு சரிந்து விட்டது என்பதை பார்க்க முடிகிறது. கட்சியில் பல காலமாக உண்மையாக இருந்தவர்கள் ஒபிஸ் அல்லது இபிஸ் ஆதரவாளராக மாறவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அதே நேரம், இபிஎஸ்சை தங்களது ஆதர்ஷ நாயகனாக எல்லா தொண்டர்களும் ஏற்றுக் கொண்டார்கள் என்று சொல்ல முடியாது. தற்போதுள்ள நிலையில், அதிமுக தொண்டர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்துவருகிறது என்பதைதான் பார்க்க முடிகிறது,'' என்கிறார்.

''ஒபிஎஸ் திமுகவுக்கும், சசிகலாவுக்கு சாதகமாக இருக்கிறார் என்ற குற்றசாட்டை பலரும் சுமத்துகிறார்கள். அதே நேரம், கட்சியில் தலைமைக்கு ஒருவர் வேண்டும் என்ற சூழலில், தொண்டர்களுக்கு தற்போதுள்ள வாய்ப்புள்ள நபரை தேடுகிறார்கள். இபிஎஸ் கை ஓங்கியிருப்பது போல தோன்றினாலும், அது நீடிக்குமா என்பது கேள்விக்குரியது. ஒபிஎஸ்-இபிஎஸ் இல்லாமல் வேறு யாராவது ஒருவர் தலைவராக வரும் வாய்ப்பும் அதிமுகவில் உள்ளது,''என்கிறார் குபேந்திரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: