You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதிமுக பொதுக்குழு கூட தடையில்லை: இ.பி.எஸ்-க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி - உயர்நீதிமன்றம்
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பி.எஸ் தரப்பால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் 11ஆம் தேதி நடக்கவுள்ள பொதுக் குழுவுக்கு தடை விதிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துள்ளது.
அ.தி.மு.கவின் பொதுக் குழு கடந்த 23ஆம் தேதி கூட்டப்பட்டபோது நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாகக் கூறி ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த சண்முகம் என்பவர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார். அதில், தமிழ்மகன் உசேன் நிரந்தரத் தலைவராகத் தேர்வுசெய்யப்பட்டது செல்லாது, அவரால் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கும் 11ஆம் தேதி பொதுக்குழுக்கு தடைவிதிக்க வேண்டும், நீதிமன்ற உத்தரவை மீறிய எடப்பாடி கே. பழனிசாமி, ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், சி.வி. சண்முகம் ஆகியோரைத் தண்டிக்க வேண்டும் என தனது மனுவில் அவர் கோரியிருந்தார்.
இந்த மனுக்கள் நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி கே. பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் செய்த மேல் முறையீட்டு வழக்கில், விசாரணைக்குத் தடை விதிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினர்.
இதனைப் பதிவுசெய்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், பிரதான வழக்கின் விசாரணை (தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான வழக்கு) மட்டும் தொடருமென்றும் கூடுதல் மனுக்களை தள்ளுபடி செய்வதாகவும் கூறினர். பிரதான மனு மீதான விசாரணை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு வருமென்றும் கூறப்பட்டுள்ளது.
வழக்கின் பின்னணி
அ.தி.மு.க. பொதுக் குழு ஜூன் 23ஆம் தேதி கூடுவதற்குத் தடை விதிக்க வேண்டுமென வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பொதுக் குழுவிற்குத் தடை விதிக்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பைச் சார்ந்த சண்முகம் என்பவர் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பாக மேல் முறையீடு செய்தார். அன்று இரவே அந்த மனு மீது விசாரணை நடத்தப்பட்டது.
அதனை விசாரித்த நீதிபதிகள், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் பற்றி மட்டும் முடிவெடுக்கலாம் என்று அறிவித்தனர். ஆனால், பொதுக் குழு இந்த 23 தீர்மானங்களையும் நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் பொதுக் குழுவில் அறிவித்தார். மேலும் தமிழ் மகன் உசேன் நிரந்தர அவைத் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டு, அதற்கு ஒப்புதலும் பெறப்பட்டது.
அடுத்த பொதுக் குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடக்குமென தமிழ்மகன் உசேன் அறிவித்தது நீதிமன்ற அவமதிப்பு என்றும் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளான எடப்பாடி கே. பழனிசாமி, சி.வி. சண்முகம் உள்ளிட்டோரைத் தண்டிக்க வேண்டுமென்றும் கோரி கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதற்கு ஏதுவாக அவர்களை இந்த வழக்கில் சேர்க்க வேண்டுமென இரண்டாவதாக மேலும் ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழ் மகன் உசேன் அழைப்பு விடுத்துள்ளபடி, ஜூலை 11ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டுமென மூன்றாவதாக ஒரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை நீதிபதி துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த வாரம் விசாரித்து, அடுத்தகட்ட விசாரணைக்கு ஒத்திவைத்திருந்தது.
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டுமென எடப்பாடி பழனிசாமி தரப்பில் கடந்த ஜூன் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோரும் மேல் முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் ஜூலை 6ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சென்னை உயர் நீதிமன்றம் 23ஆம் தேதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. மேலும் "அ.தி.மு.கவின் பொதுக் குழு வரும் 11ஆம் தேதி நடைபெறலாம். பொதுக் குழு கூட்டம் தொடர்பான இதர அம்சங்கள் குறித்த இடைக்கால மனுக்களை உரிமையியல் வழக்கை விசாரிக்கும் தனி நிதிபதி முன்பாக முறையிடலாம். மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கிறோம்" என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டது.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கூடுதல் மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்த நீதிமன்றம், பிரதான வழக்கை ஜூலை 19ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்