You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அக்னிபத் திட்டம்: இந்திய அரசுக்கு எவ்வளவு நிதி சேமிப்பு கிடைக்கும்?
- எழுதியவர், ஜுகல் புரோஹித்
- பதவி, பிபிசி
அக்னிபத் திட்டத்தை அமல்படுத்தினால் இந்தியாவின் பாதுகாப்பு பட்ஜெட் குறையுமா அல்லது முன்பை விட அதிக செலவாகுமா... இது நடந்தால் இந்தியா அதற்கு தயாரா?
இந்த கேள்வி ஏன் முக்கியமானது, இதைப் பற்றி பேசுவோம்.
ஆனால் இந்தக் கேள்விக்கு அரசு பதில் அளித்ததா என்பதை முதலில் தெரிந்து கொள்வோம்.
இந்தக் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள முயன்ற முதல் நபர் நான் அல்ல.
கடந்த இரண்டு வாரங்களில், பல செய்தியாளர் சந்திப்புகள் மற்றும் நேர்காணல்களின் போது, இந்த கேள்விக்கான பதிலை அரசின் பிரதிநிதிகளிடமிருந்து அறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
அக்னிபத் திட்டத்தின் சிறப்பம்சங்கள்
• ஆட்சேர்ப்புக்கான வயது 17 முதல் 21 ஆண்டுகள் வரை இருக்க வேண்டும்
• கல்வித் தகுதி 10வது அல்லது 12வது தேர்ச்சி
• ஆட்சேர்ப்பு நான்கு ஆண்டுகளுக்கு இருக்கும்
• நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு, சேவையின் செயல்திறன் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டு, 25 சதவிகிதம் பேர் நிரந்தரமாக பணியமர்த்தப்படுவார்கள்.
• இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் ஜவான்கள் அக்னிவீர் என்று அழைக்கப்படுவார்கள்.
• முதல் ஆண்டு சம்பளம் மாதம் 30 ஆயிரம் ரூபாய்
• 4வது வருடத்தில் மாதம் 40 ஆயிரம் ரூபாய் கிடைக்கும்
இந்தக் கேள்விக்கான பதிலைப் பெற, இதுபோன்ற 20 நேர்காணல்களை நான் பகுப்பாய்வு செய்தேன். கூடவே சில செய்தியாளர் சந்திப்புகளில் பங்கேற்றுள்ளேன். இவை அனைத்தும் அரசிடம் இருந்து வந்த பதில்கள்.
இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "பணத்தை மறந்து விடுங்கள். பணம் தேவைப்பட்டால், செலவழிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்த விஷயத்தில் பணப் பிரச்னை வரும் பேச்சுக்கே இடமில்லை" என்று கூறினார்.
"அக்னிவீரருக்கும் பணத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பயிற்சி அளித்து, பணியமர்த்த நாங்கள் அதிக செலவு செய்யப்போகிறோம். இதனால் எந்த பாதிப்பும் இல்லை. ஓய்வூதியத்திற்காக செலவழிக்க வேண்டிய பணத்தை சேமிக்கப் போகிறோம் என்று சொன்னால், அது எப்போது விளைவை ஏற்படுத்தும் என்று நீங்கள் நினைப்பீர்கள். அது எந்த விளைவையும் ஏற்படுத்தாது. எனது முழு ஆய்விலும் பொருளாதார அம்சம் எதுவும் இல்லை."என்று ராணுவ விவகாரத்துறை உயர் செயலர் லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி தெரிவித்தார்.
"இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பொருளாதாரப் பிரச்னைக்கு அப்பாற்பட்டது. எந்த நேரத்திலும் எங்கள் தேவைகளை நிறைவேற்ற பணப்பிரச்னை இருந்ததில்லை. இந்த திட்டம் மூலம் பணம் மிச்சமானால் அது கண்டிப்பாக (மீண்டும்) வரும்" என்று இந்தியக் கடற்படைத் தலைமைப் பணியாளர் வைஸ் அட்மிரல் தினேஷ் கே திரிபாதி கூறினார்.
இந்தக் கேள்விக்கான பதில் உங்களுக்கு கிடைத்ததா?
இந்தக் கேள்விக்கான சரியான பதிலை அறிய, எனது கேள்விகளுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தை தொடர்பு கொண்டேன்.
இந்தக் கேள்விக்கு எனக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. ஆனால் இந்த கேள்வி ஏன் முக்கியமானது என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்தக் கேள்வி ஏன் முக்கியமானது?
2022 பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட பொது பட்ஜெட்டில், இந்திய பாதுகாப்புக்கான பட்ஜெட் 5.25 லட்சம் கோடி. இது பொது பட்ஜெட்டின் 13.31 சதவிகிதம் ஆகும்.
இதில் புதிய உபகரணங்கள் வாங்குவதற்கும், புதிய திறன்களை மேம்படுத்துவதற்கும், 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு துறை ஊழியர்களின் ஓய்வூதியத்திற்காக 1.19 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பொது பட்ஜெட் அறிவிக்கப்பட்டபோது, அதை பாதுகாப்பு அமைச்சகம் வரவேற்றது. பாதுகாப்பு அமைச்சர் சமூக ஊடகங்களில் பட்ஜெட்டின் பல்வேறு அம்சங்களைப் பாராட்டினார்.
ஆனால் இந்தப் பாராட்டுகளுக்குப் பின்னால் இந்திய பாதுகாப்பு பட்ஜெட் தொடர்பான ஒரு கவலைதரும் விஷயம் மறைந்துள்ளது. சம்பளம் மற்றும் ஓய்வூதியங்களுக்கான செலவினங்களின் அதிகரிப்பு மற்றும் அதன் காரணமாக புதிய திறன்களை மேம்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் புதிய ஆயுதங்களை வாங்குதல் ஆகியவற்றின் முதலீட்டில் ஏற்படக்கூடிய தாக்கம் என்பதே அந்தக்கவலை தரும் விஷயம்.
அக்டோபர் 2020 அக்டோபர் மாதத்தில், அரசின் 15வது நிதி ஆணையம் கூறியதைப் பார்ப்போம்.
"இதே காலக்கட்டத்தில் (2011-12 முதல் 2018-19 வரை) மத்திய அரசின் மொத்த செலவினத்தில் பாதுகாப்புச் செலவு விகிதம் 16.4 சதவிகிதத்தில் இருந்து 17.4 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.
2011-12ல் அரசின் மொத்த செலவினத்தில் பாதுகாப்புக்கான செலவு 12.6 சதவிகிதமாக இருந்தது. ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்திய பிறகு 2018-19ல், இது 15.1 சதவிகிதமாக அதிகரித்தது. இந்த அதிகரிப்பு முக்கியமாக சம்பளம் மற்றும் ஓய்வூதிய செலவினங்களால் ஏற்பட்டது.
மறுபுறம், இதே காலகட்டத்தில் மத்திய அரசின் மொத்த மூலதனச்செலவில் பாதுகாப்பு மூலதனச் செலவின் பங்கு 43.8 சதவிகிதத்திலிருந்து 32.4 சதவிகிதமாகக் குறைந்துள்ளது."
2011 மற்றும் 2021 க்கு இடையில் ஓய்வூதியத்திற்கான செலவு 15.7 சதவிகித அளவில் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் ஒட்டுமொத்த பாதுகாப்புத் துறைக்கான செலவு 9.6 சதவிகித அளவில் அதிகரித்துள்ளது. எனவே,ஓய்வூதியத்திற்கான அதிகரித்துவரும் செலவினம் பாதுகாப்புத் துறையின் நவீனமயமாக்கலுக்குத் தேவையான நிதியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அதே அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
"ஊதியம் மற்றும் ஓய்வூதிய பொறுப்புகளை குறைக்க அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூடவே ஒரு சிறப்புத் திட்டத்தை வரைந்து, பாதுகாப்பு இறக்குமதியை சார்ந்திருப்பதை குறைக்க வேண்டும்" என்று அறிக்கை பரிந்துரைத்தது.
அத்தகைய சூழ்நிலையில், அந்த சிறப்பு நடவடிக்கைகளில் 'அக்னிபத் திட்டம்' உள்ளதா என்ற கேள்வி எழுகிறது?
திட்டத்தின் பொருளாதார அம்சம்
பாதுகாப்பு அமைச்சகம் இந்த விஷயம் தொடர்பாக எந்த வெளிப்படையான அறிக்கையும் அளிக்கவில்லை.
இத்தகைய சூழ்நிலையில், பாதுகாப்பு பட்ஜெட்டை சுமார் 15 ஆண்டுகளாக ஆய்வு செய்துள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டாக்டர் லக்ஷ்மண் பெஹராவிடம், பிபிசி பேசியது.
ராணுவத்தை இளமையாக்குவதற்கு அக்னிபத் திட்டம்தான் ஒரு தீர்வு. இதை அரசும் கூறியுள்ளது. ஆனால் நிதி காரணங்களும் இதில் ஒரு பங்கை வகித்துள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
"அரசின் முன் பல நிர்பந்தங்கள் உள்ளன. குறிப்பாக வேலைவாய்ப்பு தொடர்பான கொள்கைகளில் அதிக அளவு உணர்வுகள் இணைந்துள்ளன. மேலும் நிதிப் பக்கத்தைப் பற்றி பேச அரசு விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. ஆனால் இந்த திட்டத்தின் பின்னணியில் நிதி நிர்பந்தங்கள் மற்றும் வளங்களின் பற்றாக்குறை உள்ளது என்று நான் கருதுகிறேன்,"என்கிறார் டாக்டர் லக்ஷ்மண் பெஹரா.
ஆனால் பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் வளங்கள் இல்லாததன் அர்த்தம் என்ன என்ற கேள்வி எழுகிறது.
டாக்டர் பெஹெரா இது குறித்து விளக்கமளிக்கையில், "இத்திட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன், பாதுகாப்பு பட்ஜெட்டில், பணியாளர்கள் தொடர்பான செலவு, 60 சதவிகிதமாக இருந்தது. ராணுவ உபகரணங்கள் வாங்க, ஆராய்ச்சி மற்றும் போக்குவரத்துக்கு, 40 சதவிகிதம் மட்டுமே மிச்சமானது. இது போதாது. ஒப்பந்தம் செய்துகொண்டபிறகு பணம் செலுத்த அரசிடம் பணம் இல்லை என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிவிட்டது. இதன் காரணமாக 5 ஆண்டுகளில் வர வேண்டிய பொருட்கள், பணம் இல்லாததால் வருவதற்கு அதிக நேரம் எடுக்க ஆரம்பித்தது. இதன் காரணமாக பொருட்கள் ஆர்டர் செய்ய தாமதம் செய்யவேண்டியதாயிற்று. ஏற்கனவே உள்ள உபகரணங்களின் பராமரிப்பும் பாதிக்கப்பட்டது. இதன் பொருள் உங்களிடம் ஒரு கருவி உள்ளது, ஆனால் அது சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யப்படவில்லை என்றால் அதன் செயல்திறன் குறைகிறது. வளங்களின் பற்றாக்குறை மிகவும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது," என்று குறிப்பிட்டார்.
அத்தகைய சூழ்நிலையில் பட்ஜெட்டின் பார்வையில் அக்னிபத் திட்டம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்ற கேள்வி எழுகிறது.
இந்தக் கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் பெஹரா, "அரசு ஊழியர்களுக்குச் செலவிடும் பணம், பெரிய அளவில் குறையும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், அக்னிவீரர்களின் அதிகபட்ச சம்பளம் 40 ஆயிரம். இது மூத்த ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் 80 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை ஒப்பிடும்போது மிகவும் குறைவு. சம்பள அடிப்படையில் ஒருவர் மீது மாதம் 20 முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை அரசு சேமிக்கும். அதே நேரத்தில், ஓய்வூதியத்தில், நான்கில் மூன்று பங்கு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை அரசு சேமிக்கும். எந்த ஒரு பேட்சிலும் பணியமர்த்தப்படும் 75 சதவிகித அக்னிவீரர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்க வேண்டியதில்லை. அது பட்ஜெட்டில் எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பார்க்க பத்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.ஆனால், ஐந்தாண்டுகளில் சில மாற்றங்கள் தெரியத்தொடங்கும்," என்றார்.
ராணுவத்தில் எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன
ராணுவத்தில் காலியாக உள்ள பணியிடங்களின் எண்ணிக்கையை பார்த்தால், இதில் ராணுவ வீரர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும் என்று தெரிகிறது.
ஆனால், இந்த விவகாரத்தில் அரசு தெளிவாக எதையும் கூறவில்லை.
எடுத்துக்காட்டாக லெப்டினன்ட் ஜெனரல் பூரியிடம் கேட்டபோது, "முழுத் திட்டமும் ஒரு காரணியை அடிப்படையாகக் கொண்டது, அதுதான் இளமையாக்கல். மொத்த எண்ணிக்கையை அதிகரிப்பது அல்லது குறைப்பது நோக்கம் அல்ல. நாங்கள் எண்ணிக்கையை சீராக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் சேவைகளை அவுட்சோர்ஸ் செய்யலாம். எனவே, எண்ணிக்கையைக் குறைக்க வேண்டும் என்றால், பழுதுபார்ப்பு போன்ற துறைகளில் அதைச் செய்வோம். ஆயுதப் படைகளில் இருந்து அல்ல."என்று கூறினார்.
2021 டிசம்பரில், ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் ஜவான்கள் பிரிவில் மொத்தம் 1,13,000 காலியிடங்கள் இருப்பதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வு பெறும் அல்லது முன்கூட்டியே ஓய்வு பெறும் வீரர்களின் எண்ணிக்கையை இதனுடன் சேர்ப்போம். இப்படிப்பட்ட வீரர்களின் எண்ணிக்கை 75 ஆயிரம்.
அரசு இதுவரை கூறியுள்ளபடி, முதல் ஆண்டில் 46,000 அக்னிவீரர்கள் பணியமர்த்தப்படுவார்கள். இதற்குப் பிறகு, 4-5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை ஆண்டுதோறும் 50000-60000 ஐ எட்டும். இதற்குப் பிறகு அது 90000-100000 ஆக இருக்கும்.
இந்த நிலையில் அக்னிபத் திட்டத்தால் இந்த காலியிடங்களை நிரப்ப முடியும் என்றும் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான நிதிச்சுமையைக் குறைக்கமுடியும் என்றும் தோன்றவில்லை.
இந்தக் கேள்விக்கு அரசு தெளிவான பதிலைச் சொல்லாத நிலையில், அக்னிபத் திட்டத்தைச் செயல்படுத்தினால் இந்தியாவின் பாதுகாப்புச் செலவு குறையுமா அல்லது அதிகச் செலவை ஏற்படுத்துமா, அப்படி ஏற்பட்டால் இந்தியா அதற்குத்தயாராக உள்ளதா என்ற நமது அடிப்படைக் கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
இத்திட்டத்தின் நோக்கம் பாதுகாப்பு பட்ஜெட்டில் ஏற்படும் நிதிச்சுமையை குறைப்பது அல்ல என்று அரசு கூறுகிறது. ஆனால் ஒருவேளை அரசு இந்தத் திட்டத்தின் மூலம் இந்த நோக்கத்தை நிறைவேற்ற விரும்பலாம்.
இருப்பினும், செலவுகள் தொடர்ந்தாலோ, அதிகரித்தாலோ அல்லது தற்போது இருக்கும் அதே நிலையில் அரசு தொடர்ந்து இருந்தாலோ, இந்த நிலைமையை இந்தியாவால் சமாளிக்கமுடியுமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்