LGBTQ+: "திருமணம், குழந்தை தத்தெடுப்பு உரிமைகள் எங்களுக்கும் வேண்டும்" - திரும்பிப் பார்க்க வைத்த 'சுயமரியாதை' பேரணி

    • எழுதியவர், க. சுபகுணம்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினர் தங்கள் பாலின உரிமைகளைக் கொண்டாடும் வகையில், ஜூன் மாதம் சுயமரியாதை (Pride) மாதத்தை முன்னிட்டு, சுயமரியாதை பேரணியை ஜூன் 26ஆம் தேதி நடத்தினர்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த தன்பாலின மற்றும் பால் புதுமையினரின் சமூக அடையாளங்களை உறுதி செய்யும் வகையில் இயற்றப்பட்டுள்ள சட்டங்கள், கொள்கைகள், பிற செயல்களைக் கொண்டாடும் விதமாகவும் எங்களின் பாலின மற்றும் பாலீர்ப்பு அடையாளங்களை மறுக்கும் சமூகக் கட்டமைப்புகளை எதிர்க்கும் வகையிலும் அதற்கான போராட்டங்களைத் தொடர்ந்து நிகழ்த்துவோம் என்ற உறுதி மொழியைப் புதுப்பிக்கும் வகையிலும், ஞாயிறு ஜூன் 26-ஆம் தேதி தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினரும் அவர்களின் ஆதரவாளர்களும் சென்னை எழும்பூரில் உள்ள லாங்க்ஸ் தோட்டம் சாலையில் பேரணியாகச் சென்றனர்.

அதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வீடுகளில் தொடங்கும் எங்களின் மீதான ஒடுக்குமுறைகள், அதாவது எங்களின் மீது கட்டாயப்படுத்தப்படும் இரட்டை விகுதி பாலினம், எதிர்பாலீர்ப்பு கட்டமைப்புகள், ஆணாதிக்கக் கட்டமைப்புகள், இன்றளவும் கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு என்று சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் தொடர்கிறது.

சென்னை வானவில் சுயமரியாதை பேரணி, எங்களுடைய இருப்பு, மாண்பு, சுயமரியாதை மற்றும் இந்த நாட்டின் குடிமக்களாக எங்களின் முழு உரிமைகளைப் பற்றிய சுய உணர்தல் ஆகியவற்றை வலியுறுத்துவதற்காக நடத்தப்படுகிறது," என்று குறிப்பிட்டுள்ளனர்.

2009-இல் துவங்கிய சென்னை வானவில் சுயமரியாதை பேரணி ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் நடைபெற்று வருகிறது. 2020 மற்றும் 2021 ஆகிய ஆண்டுகளில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகப் பேரணி நடைபெறவில்லை. இப்போது 2022-ஆம் ஆண்டில் மீண்டும் சுயமரியாதை பேரணி நடந்துள்ளது.

தன்பாலின திருமணங்களை சட்டப்பூர்வமாக்க வேண்டும்

திருநர் நல வாரியத்தில் திருநம்பிகள் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டு, அதன் மூலம் அவர்களுக்கும் சமூக நலத் திட்டங்கள் சென்றடைய வழிவகுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் உத்தரவைத் தொடர்ந்து தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினர் மீது தொடுக்கப்படும் ஒடுக்குமுறைகளை நீக்கும் விதமாக மாநில காவல்துறை விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டது.

இந்த சமூகத்தின் பாலின அடையாளங்களை உறுதிசெய்யும் வகையில், அதற்கு எதிரான மாற்று சிகிச்சைகளை சட்டவிரோதம் என்று தமிழ்நாட்டின் முதல் மன நலக்கொள்கையில் வரையறுக்கப்பட்டது போன்று, தமிழ்நாடு அளவில் நிகழ்ந்த நேர்மறை வளர்ச்சிகளைப் பாராட்டுகளோடு பதிவு செய்வதாகவும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், இந்தப் பேரணியின் வாயிலாக இன்னமும் தங்கள் மக்கள், கல்வி, வேலைவாய்ப்பு, சுகாதாரம், மருத்துவம், சட்ட ஆலோசனை என்று சமூகத்தின் பல நிலைகளில் பாகுபாடுகளையும் வன்முறைகளையும் சந்தித்துக்கொண்டும் ஒதுக்கி வைக்கப்பட்டுக் கொண்டும் தான் இருக்கிறார்கள் என்றும் கூறும் தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினர், வானவில் சுயமரியாதை பேரணியின் மூலமாகத் தங்களின் இருப்பையும் இந்திய குடிமக்களாகத் தங்களுக்கு இருக்கும் உரிமைகளையும் பறைசாற்றுவதாகவும் கூறுகின்றனர்.

இவை அனைத்திற்கும் மேலாக, அவர்களின் திருமணங்களை அங்கீகரிப்பது மற்றும் குழந்தை தத்தெடுக்கும் உரிமையை அவர்களுக்குச் சட்டப்பூர்வமாக வழங்குவதைத்தான், சுயமரியாதை பேரணியில் கலந்துகொண்ட தன்பாலின சமூகத்தினர் பலரின் முக்கியமான எதிர்பார்ப்பாக உள்ளது.

பேரணியின்போது பேசிய ஒரு தன்பாலின தம்பதியில் ஒருவரான சரவணன், "எங்களுடைய சமூகத்தைப் பற்றிய சமூக விழிப்புணர்வை முதலில் கொண்டு வர வேண்டும். எங்கள் சமூகத்தை இந்தச் சமுதாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அரசாங்கம் சட்டப்பூர்வமாக எங்களின் திருமணத்தை அங்கீகரிக்க வேண்டும். எங்களுக்கு குடும்ப அட்டை வழங்குவதோடு, அரசு மூலமாகக் கிடைக்கும் நலத் திட்டங்கள் எங்களுக்கும் கிடைக்க வேண்டும்," என்று குறிப்பிட்டனர்.

சென்னையைச் சேர்ந்த சரன் ஜெயராமன், "இந்த சமூகம் என்றாலே பாலுறவு என்றுதான் சொல்வார்கள். அதுமட்டுமே இங்கு கிடையாது. அதையும் தாண்டி, அன்பு என்ற ஒரு விஷயம் உண்டு. காதல் யாருக்காக இருந்தாலும் வரலாம். அதன் அடிப்படையில் மட்டுமே இங்குக் கூடியுள்ளார்கள்," என்று கூறுகிறார்.\

எதிர்நோக்கும் மாற்றங்கள்

இந்தப் பேரணியில் தமிழக அரசு கொண்டு வர வேண்டிய சில மாற்றங்களையும் தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினர் பட்டியலிட்டுள்ளனர். அவற்றில் சில,

  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், திருநம்பி, திருநங்கை, தன்பாலின ஈர்ப்பு மற்றும் இருபாலீர்ப்பு கொண்ட மக்களுக்குக் கிடைமட்ட இட ஒதுக்கீட்டை (Horizontal Reservation) செயல்படுத்த வேண்டும்.
  • 'திருநங்கை' என்னும் சொல், திருநம்பிகளை உள்ளடக்காமல் திருநங்கைகளை மட்டுமே குறிக்கிறது. எனவே திருநங்கை நல வாரியம் என்பது மாற்றப்பட்டு, 'திருநர் நல வாரியம்' அல்லது 'திருநங்கை-திருநம்பி நல வாரியம்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
  • சமூக நலத் திட்டங்களின் கீழ் திருநங்கைகளுக்கான சிறப்பு சலுகைகளில் திருநம்பிகளும் இணைக்கப்பட்டு, அவர்களுக்கும் அந்தத் திட்டங்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.
  • கல்வி, வேலைவாய்ப்பு, சட்ட ஆலோசனை, விளையாட்டு, குடும்பம், சுகாதாரம் எனப் பல நிலைகலில் தங்கள் சமூக மக்கள் எதிர்கொள்ளும் வன்முறை, பாகுபாடு, ஒதுக்கி வைக்கப்படுதல் போன்ற இன்னல்களைப் போக்க மாநில அளவிலான LGBTQIA+ கொள்கைகளை உருவாக்கும் குழுவில் தன்பாலின ஈர்ப்பாளர், இருபால் ஈர்ப்பாளர், அனைத்துப் பால் ஈர்ப்பாளர், ஊடுபால் பண்புடையவர், பாலின ஈர்மறைக்கு அப்பாற்பட்டவர், திருநர் என தங்கல் சமூகத்தின் அனைத்து நபர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.
  • ஒரே பாலினத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் திருநர்களின் உறவுகளை சிறப்புத் திருமண சட்டத்தின் கீழ் அங்கீகரித்து, குழந்தையைத் தத்தெடுக்கவும் வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்கவும் வளர்க்கவும் ஆவண செய்யவேண்டும். அதோடு வாரிசு உரிமைகளை உறுதி செய்ய வேண்டும்.

இதுபோன்ற 18 கோரிக்கைகளை தன்பாலின மற்றும் பால் புதுமை சமூகத்தினர் முன்வைத்துள்ளனர்.

பெற்றோர் முன்னிலையில் கூடச் சொல்ல முடியவில்லை

"தன்பாலின தம்பதிகள் சட்டப்பூர்வமாக பதிவுத் திருமணம் செய்துகொள்ளும் உரிமை கிடைத்தால், நாங்களும் குழந்தையைத் தத்தெடுக்க, குடும்பமாக வாழ முடியும்," என்று கூறுகின்றனர், கார்த்திக் மற்றும் கிருஷ்ணா தம்பதி.

"பெங்களூரு, மும்பை போன்ற இடங்களில் சுயமரியாதை பேரணியில் கலந்துகொண்டுள்ளேன். சென்னையில் கலந்துகொள்வது இதுவே முதல்முறை. நாங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம் என்ற தைரியத்தை இந்தப் பேரணி வழங்குகிறது.

இந்தக் கூட்டத்தில் எங்களை யாரும் எந்த வகையிலும் மதிப்பிட மாட்டார்கள். இங்கு வந்தால் சுய பாலின மற்றும் பாலீர்ப்பு அடையாளத்தின் மீது ஒரு பெருமையான உணர்வு ஏற்படும். நீங்கள் யார் என்பதை இங்கு நீங்கள் மட்டுமே முடிவு செய்யமுடியும். உங்கள் பாலினத்தை நீங்கள் தான் அடையாளப்படுத்த முடியும்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பார்ப்பதற்குத் தோன்றினாலும், இதிலுள்ள உணர்ச்சிப்பூர்வமான மனநிலை, இதில் கலந்துகொள்ளும்போது தான் புரியும்.

ஆனால், இந்தப் பேரணியை விட்டு வெளியே சென்றவுடனேயே மக்கள் இந்தச் சமூகத்தினரை மதிப்பிடுவதை, ஒரு மாதிரியாகப் பார்ப்பதை வெளிப்படையாகவே பார்க்க முடியும். சொந்த பெற்றோர் முன்னிலையிலேயே கூட தங்களுடைய பாலின அடையாளங்களைச் சொல்ல முடியவில்லை. அது மாற வேண்டும்," என்று கூறுகிறார் கிருஷ்ணா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: