You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சித்து மூசேவாலா கொலை வழக்கில் சந்தேக நபர்கள் கைது - புலனாய்வில் அதிர்ச்சித் தகவல்கள்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல பாடகர் சித்து மூசேவாலா கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக, துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு திங்கள்கிழமை தெரிவித்துள்ளது. பிடிபட்ட நபர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை கூறுகிறது.
கைதானவர்களில் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய குழுவுக்கு தலைவராக இருந்தது தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
2022ஆம் ஆண்டில் நடந்த பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் பாடகரும் அரசியல்வாதியான சித்து மூசேவாலா இணைந்தார். அவர் கடந்த மே 29ஆம் தேதி பஞ்சாபின் மான்சா மாவட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்டார்.இந்த சம்பவம் பஞ்சாப் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தியது. அங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் தவறியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.
இந்த நிலையில், டெல்லியில் நகர காவல்துறையின் சிறப்புப் பிரிவு சிறப்பு ஆணையர் ஹெச்ஜிஎஸ் தாலிவால் செய்தியாளர்களை சந்தித்தனர்.
"துப்பாக்கியால் சுட்ட சந்தேக நபர்களில் அந்த குழுவுக்குத் தலைமை தாங்கிய பிரியவ்ரத் ஃபெளஜி, சம்பவத்தின்போது காரில் இருந்ததாகவும் மற்ற நபர்களான குல்தீப், கேசவ் குமார், காஷிஷ் உள்ளிட்டோரை சம்பவத்துக்குப் பிறகு அழைத்துச் சென்றார். இதில் ஃபெளஜி ஹரியாணாவின் சோனிபத்தைச் சேர்ந்தவர். காஷிஷ் ஹரியாணாவின் ஜஜ்ஜரைச் சேர்ந்தவர். கேசவ் குமார் பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்தவர்," என்று தாலிவால் தெரிவித்தார்.
இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றும் முன்பு பல முறை அதை சந்தேக நபர்கள் ஒத்திகை செய்துள்ளனர். ப்ரியாவ்ரத் ஃபெளஜி, காஷிஷ் கைது செய்யப்பட்டபோது அவர்கள் இருந்த இடத்தில் எட்டு கையெறி குண்டுகள், ஒன்பது மின்சாரத்துடன் இணைக்கப்பட்ட வெடிகுண்டை இயக்கும் சாதனங்கள், ஒரு ரைஃபிள், மூன்று கைத்துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன என்று காவல்துறை உயரதிகாரி கூறினார்.
இவர்களில் சந்தேக நபர்கள் குழுவின் தலைவராக அடையாளம் காணப்பட்டுள்ள ஃபெளஜியின் முகம், சம்பவ பகுதிக்கு அருகே இருந்த பெட்ரோல் நிரப்பு நிலையத்தில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் காவல்துறையினர் கூறினர். இவர் ஏற்கெனவே 2015இல் சோனிபத்தில் நடந்த ஒரு படுகொலை, 2021இல் நடந்த மற்றொரு கொலை சம்பவத்தில் தொடர்புடையவதாக சந்தேகிக்கப்பட்டவர் என்றும் சிறப்பு ஆணையர் தாலிவால் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த நாளில் சந்தேக நபர்களுடன் மான்சாவரை கேசவ் குமார் பயணம் செய்துள்ளார் என்றும் சம்பவத்துக்கு முந்தைய நாட்களில் இந்தக் குழு துப்பாக்கி சூடுக்கான ஒத்திகையிலும் ஈடுபட்டதாக சிறப்பு ஆணையர் தாலிவால் குறிப்பிட்டார்.
பஞ்சாபின் பதிண்டாவைச் சேர்ந்த கேசவ் குமார், 2020ஆம் ஆண்டு பதிண்டாவில் நடந்த ஒரு கொலை சம்பவம் மற்றும் ஆள் கடத்தல் வழக்கில் தொடர்புடையதாக கைதானவர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இவர்தான் சந்தேக நபர்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தார் என்றும் துப்பாக்கியால் மூசேவாலாவை கொன்ற பிறகு அவர்கள் தப்பிச்செல்லவும் காரை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றும் புலனாய்வாளர்கள் கூறினர்.
சம்பவ நாளில் மூசேவாலாவை கொல்ல துப்பாக்கிச் சூடு தாக்குதல் கைகொடுக்காவிட்டால் அங்கு கையெறி குண்டுகளை வீசி அவரை கொல்ல திட்டமிட்டிருந்ததாக தங்களுடைய விசாரணையில் தெரிய வந்ததாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.
சித்து மூசேவாலா கொலை தொடர்பாக இதுவரை 10க்கும் அதிகமானோரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதில் லாரன்ஸ் பிஷ்னோய் கொலைக்கான முக்கிய சந்தேக நபராக கருதப்படுகிறார். அவர் தற்போது பஞ்சாப் போலீஸ் காவலில் இருக்கிறார். ஜூன் 15ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அவரை ஜூன் 22ஆம் தேதிவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த பிஷ்னோய் குழுவைச் சேர்ந்த சந்தேஷ் ஜாதவ் மற்றும் நவ்நாத் சூர்யவன்ஷியை குஜராத்தில் வைத்து புணே போலீஸார் கைது செய்துள்ளனர்.
மூசேவாலா கொல்லப்பட்ட நாளில் தாம் குஜராத்தில் இருந்ததாக புலனாய்வாளர்களிடம் சந்தேஷ் ஜாதவ் தெரிவித்தார். அவரது கூற்றை சரிபார்த்து வருவதாக புணே காவல்துறை கண்காணிப்பாளர் அபிநவ் தேஷ்முக் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இதேவேளை கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் நடந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.
சித்து மூஸ்வாலாவை கொல்ல ஏஎன்-94 ரக ரஷ்ய ரைஃபிளை சந்தேக நபர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி
இதற்கிடையே, டெல்லி சிறப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களை டெல்லி நீதிமன்றத்தில் போலீஸார் ஆஜர்படுத்தினர். மூவரையும் காவலில் வைத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் அவர்களை இரண்டு வார காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கொடுத்தது. அப்போதுதான் சித்து மூசேவாலா கொலையில் மூளையாக இருந்தவர் கனடாவைச் சேர்ந்த கோல்டி பிரார் என்றும் அவருடன் ப்ரியாவ்ராத் நேரடியாக தொடர்பில் இருந்தார் என்றும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பிரபல பாடகர், அவரை ஒரு கும்பல் துப்பாக்கியால் சுட்டுக் கொல்கிறது, சந்தேக நபர்களை பிடிக்க பஞ்சாப், புணே, டெல்லி என மூன்று காவல்துறைகள் களத்தில் இறங்கியிருப்பது பவரலான கவனத்தை ஈர்த்திருக்கிறது.
என்ன நடந்தது?
கடந்த மே 29ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் காரில் சித்து மூசேவாலா சென்றபோது, அவருடைய காருக்கு எதிரிலிருந்து வந்த இரண்டு கார்களில் இருந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டனர். அதன்பின் அவர் மான்சாவில் உள்ள மருத்துவமனையில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.
வீட்டிலிருந்து காரில் வெளியே சென்ற சித்து, பாதுகாவலர்களை ஏன் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை எனவும் குண்டு துளைக்காத வாகனத்திலும் அவர் செல்லவில்லை எனவும் காவல்துறை தெரிவித்தது.
யார் இந்த சித்து மூசேவாலா?
சித்து மூசேவாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து, பாடகராக பிரபலமான பின் இவர் சித்து மூஸ்வாலா என அழைக்கப்பட்டு வந்தார். சித்து மூசேவாலா மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். துப்பாக்கி கலாசாரம் குறித்த தன்னுடைய பாடல்களுக்காக 2018ஆம் ஆண்டுக்குப் பின் மிகவும் பிரபலமானார் சித்து மூஸ்வாலா.
அவருடைய கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருப்பவர் சித்து முஸ்வாலாவின் தாயார் சரன் கவுர் மூசா. அத்தேர்தலின்போது தன் தாயாருக்காக கடும் பிரசாரத்தில் ஈடுபட்டவர் சித்து மூசேலாவா.
பின்னர், சித்து மூசஸததேநோோவாலாவும் அரசியலில் நுழைந்தார். கடந்தாண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் அவர். பின், அக்கட்சி சார்பாக மான்சா தொகுதியில் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பட்டப்படிப்பு முடித்தபின் சில ஆண்டுகாலம் அவர் கனடாவில் இருந்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்