You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சித்து மூஸ்வாலா: பாதுகாப்பை திரும்பப் பெற்ற மறுநாளே பஞ்சாப் பாடகர் கொலையால் ஆம் ஆத்மி அரசு மீது கடும் விமர்சனம்
பஞ்சாப் பாடகரும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான சித்து மூஸ்வாலா நேற்று மாலை மான்சாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, முதலமைச்சர் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு மீது கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
பஞ்சாப் அரசு சனிக்கிழமை (மே 28) அன்று மத, அரசியல் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் என மொத்தம் 424 விஐபிக்களுக்கு அளித்துவந்த பாதுகாப்பை விலக்கிக்கொண்டது அல்லது பாதுகாப்பை குறைத்துக்கொண்டது. அவ்வாறு பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவர்களில் சித்து மூஸ்வாலாவும் ஒருவர்.
லாரன்ஸ் பிஷ்னோய் என்பவருக்கு இந்த கொலையுடன் தொடர்பிருப்பதாகவும், அவர் தலைமையிலான கும்பலைச் சேர்ந்த கனடாவில் உள்ள கோல்டி பிரார் என்பவர் இக்கொலைக்கு ஃபேஸ்புக் வாயிலாக பொறுப்பேற்றிருப்பதாகவும் பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது.
கும்பல் தகராறு காரணமாக இக்கொலை நடைபெற்றிருக்கலாம் என, மான்சா எஸ்.எஸ்.பி தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
ஞாயிற்றுக்கிழமை (மே 29) மாலை 5.30 மணியளவில் காரில் சென்ற சித்து மூஸ்வாலா, அவருடைய காருக்கு எதிரிலிருந்து வந்த இரண்டு கார்களில் இருந்த அடையாளம் தெரியாத நபர்களால் சுடப்பட்டதாக பஞ்சாப் காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்பின் அவர் மான்சாவில் உள்ள மருத்துவமனையில் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. வீட்டிலிருந்து காரில் வெளியே சென்ற சித்து, பாதுகாப்புப் பணியாளர்களை தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை எனவும் குண்டு துளைக்காத வாகனத்திலும் செல்லவில்லை எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
இக்கொலை குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைத்து அம்மாநில டிஜிபி வி.கே.பன்வாரா உத்தரவிட்டுள்ளார்.
யார் இந்த சித்து மூஸ்வாலா?
சித்து மூஸ்வாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து, பாடகராக பிரபலமான பின் இவர் சித்து மூஸ்வாலா என அழைக்கப்பட்டு வந்தார். சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் உள்ள மூசா எனும் கிராமத்தைச் சேர்ந்தவர். துப்பாக்கி கலாசாரம் குறித்த தன்னுடைய பாடல்களுக்காக 2018 ஆம் ஆண்டுக்குப் பின் மிகவும் பிரபலமானார் சித்து மூஸ்வாலா.
அவருடைய கிராமத்தின் ஊராட்சித் தலைவராக இருப்பவர் சித்து முஸ்வாலாவின் தாயார் சரன் கவுர் மூசா. அத்தேர்தலின்போது தன் தாயாருக்காக கடும் பிரசாரத்தில் ஈடுபட்டவர் சித்து மூஸ்லாவா.
பின்னர், சித்து மூஸ்வாலாவும் அரசியலில் நுழைந்தார். கடந்தாண்டு இறுதியில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் அவர். பின், அக்கட்சி சார்பாக மான்சா தொகுதியில் 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவினார். பட்டப்படிப்பு முடித்தபின் சில ஆண்டுகாலம் அவர் கனடாவில் இருந்தார்.
ஆம் ஆத்மி அரசு மீது விமர்சனம்
இதனிடையே, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் அனைவரும் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். அதேபோன்று, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கேஜ்ரிவாலும் இதே வேண்டுகோளை விடுத்துள்ளார். சித்து மூஸ்வாலாவின் இறப்புக்கு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இக்கொலைக்கு ஆம் ஆத்மி அரசை குற்றம்சாட்டியுள்ளது பாஜக. அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக தலைவரான மஞ்சிந்தர் சுங் சிர்சா, "ராகவ் சத்தா (ஆம் ஆத்மி) மற்றும் பகவந்த் மான் குடும்பத்தினருக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்படும் நிலையில், எதன் அடிப்படையில் மூஸ்வாலாவின் பாதுகாப்பு அதிகளவில் குறைத்துக்கொள்ளப்பட்டது?" என கேள்வி எழுப்பியுள்ளார். பாதுகாப்பை விலக்கிக்கொள்வது அரசியல் ஸ்டன்ட்டா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், பாதுகாப்பை விலக்கிக்கொள்வது ஆபத்தானது என தான் முன்பே எச்சரித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
விஐபி கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க தனது அரசு நடவடிக்கை எடுக்கும் என, அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் கூறிவந்த நிலையில், அதன் ஒருபகுதியாக பலருடைய பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்ட மறுநாளே சித்து மூஸ்வாலா கொலை செய்யப்பட்டிருப்பது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்