You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரள முதல்வர் பினராயி விஜயனை எதிர்த்து விமானத்துக்குள் போராட்டம் - பின்னணி என்ன?
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி இந்தி சேவைக்காக
கேரளாவை உலுக்கும் தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கூறிய புகாரை அடுத்து கேரள மாநிலத்தின் வீதிகளில் எதிர்ப்பை எதிர்கொண்டுவரும் முதல்வர் பினராயி விஜயன் விமானத்திலும் போராட்ட முழக்கத்தை எதிர்கொண்டார்.
இதன் மூலம் விமானத்துக்குள்ளேயே போராட்டத்தை எதிர்கொண்ட முதல் இந்திய அரசியல்வாதி ஆகியுள்ளார் பினராயி.
தனது சொந்த மாவட்டமான கன்னூரில் இருந்து மாநிலத் தலைநகரமான திருவனந்தபுரத்துக்கு விமானத்தில் வந்துகொண்டிருந்த விஜயனை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் விமானத்துக்குள்ளேயே முழக்கம் எழுப்பினர். முதல்வர் பதவி விலகவேண்டும் என்று அவர்கள் முழக்கத்தில் வலியுறுத்தினர். அத்துடன் முதல்வர் இருக்கையை நோக்கி அவர்கள் முன்னேறினர்.
ஆனால், இடது ஜனநாயக முன்னணி அமைப்பாளரான இ.பி. ஜெயராஜன் அவர்கள் முயற்சியை தடுத்து நிறுத்தினார். அவர் அந்த இரண்டு இளைஞர்களைத் தடுத்து பின்னோக்கித் தள்ளியதில் அவர்கள் விமானத்தின் நடைபாதையில் விழுவதை சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோக்கள் காட்டுகின்றன.
இதையடுத்து, பினராயி விஜயனின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் சார்பு அமைப்பான இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்தோர் கேரள மாநில காங்கிரஸ் அலுவலகத்தை அடித்து உடைத்தனர். அப்போது அந்த அலுவலகத்தில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி இருந்தார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய தாக்குதலில் ஒரு கார், பிளெக்ஸ் போர்டுகள் சேதமடைந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. காசர்கோடு, இடுக்கி ஆகிய இடங்களிலும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் வன்முறையில் ஈடுபட்டதாக செய்திகள் வந்துள்ளன. சிபிஎம், காங்கிரஸ் தொண்டர்கள் பத்தனம்திட்டாவிலும், காங்கிரஸ், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கன்னூர் மாவட்டத்திலும் மோதலில் ஈடுபட்டனர்.
விமானத்தில் இருந்த கண்ணூரைச் சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளான போராட்டக்காரர்கள் இருவரும், விமானம் தரையிறங்கியவுடன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டனர். முதலமைச்சர் ராஜினாமா செய்யக் கோரி கடந்த வாரம் முதல் இளைஞர்கள் காங்கிரஸ் கட்சியினர் தரையில் நடத்திவந்த போராட்டங்களை இவர்கள் விமானத்திற்குள் கொண்டு சென்றனர்.
தங்கக் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ், முதல்வர் மீது மட்டும் அல்லாமல், அவரது மனைவி, மகளுக்கும் இந்த விவகாரத்தில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டியதை அடுத்து, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎஃப்) மற்றும் பாரதிய ஜனதா கட்சி (பாஜக) ஆகியவை முதல்வர் பதவி விலகவேண்டும் என்று வலியுறுத்திவந்தன.
இந்தியாவில் தொலைக்காட்சி தொகுப்பாளர் அர்னாப் கோஸ்வாமிக்குப் பிறகு விமானத்தில் போராட்டத்துக்கு இலக்கான இரண்டாவது நபரானார் பினராயி விஜயன். ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, ஜனவரி 2020 இல் லக்னோ-மும்பை விமானத்தில் கோஸ்வாமியை எதிர்த்துப் பேசினார்.
கண்டிக்கத்தக்கது - விஜயன்
``விமானத்தில் நடந்தது கண்டிக்கத்தக்கது. விமானத்துக்குள் இளைஞர் காங்கிரசாரின் நடத்தையை காங்கிரஸ் தலைமை நியாயப்படுத்துகிறது. அவர்கள் காட்டும் எதிர்வினை இந்த சம்பவம் திட்டமிட்டு நடந்ததைக் காட்டுகிறது,'' என்று திருவனந்தபுரம் வந்தபிறகு பினராயி விஜயன் ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.
இந்தப் போராட்டம் ``ஜனநாயகத்துக்கும், மக்களுக்கும் எதிரானது. நாடு முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்கள் நோக்கம். இது போன்ற வன்முறையான, அராஜக நடவடிக்கைகளை அனைவரும் கண்டிக்கவேண்டும். எதிர்க்கட்சிகள் விரிக்கும் வலையில் விழுந்துவிடக்கூடாது," என்று பினராயி விஜயன் கூறினார்.
"விமானத்தில் நடந்தது ஒரு வகை பயங்கரவாத நடவடிக்கை, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் இதற்குப் பின்னால் உள்ளனர்" என்று கருத்துத் தெரிவித்தார் ஜெயராஜன்.
நிகழ்வின் பின்னணி
குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 164ன் கீழ் ஜூன் 7ஆம் தேதி முதன்மை குற்றவாளியான ஸ்வப்னா சுரேஷ் நீதிமன்றத்தில் அறிக்கை அளித்ததைத் தொடர்ந்து கேரளாவில் காங்கிரஸ் மற்றும் பாஜகவின் தனித்தனி போராட்டங்கள் தொடங்கின.
இந்த வழக்கில் முதல்வர், அவரது மனைவி கமலா, மகள் வீணா, முன்னாள் அமைச்சர் கே.டி.ஜலீல் ஆகியோரின் பெயர்களை கூறியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். ``கமலாவும் வீணாவும் ஆடம்பர வாழ்க்கை நடத்துகிறார்கள். நான் மட்டும் தவிக்கிறேன்,'' என்று அவர் கூறினார்.
இந்த வழக்கில் முதலமைச்சருக்கு தொடர்பில்லை என்ற அவரது முந்தைய நிலைப்பாட்டிற்கு முரணாக அவரது இந்த சமீபத்திய அறிக்கை இருந்தது.
இருப்பினும், கடந்த வாரம் அளித்த தனது சமீபத்திய அறிக்கையில், விஜயன் 2016 இல் துபாயில் இருந்தபோது, அவருக்கு கரன்சி அடங்கிய பைகள் அனுப்பப்பட்டதாகக் குற்றம் சாட்டினார் ஸ்வப்னா சுரேஷ்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) தூதரகத்தில் தான் எக்சிகியூட்டிவ் செயலாளராக பணிபுரிந்தபோது, முதல்வரின் செயலாளர் எம் சிவசங்கர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், துபாயில் உள்ள முதல்வருக்கு ஒரு பையை வழங்க வேண்டும் என்று கூறியதாகவும் ஸ்வப்னா கூறினார். .
"துபாய்க்கு எடுத்துச் செல்ல வேண்டிய பையை எடுத்துச் செல்ல முதல்வர் மறந்துவிட்டார் என்று சிவசங்கர் என்னிடம் கூறினார். அந்த பையை தூதரகத்திற்கு கொண்டு வந்தபோது, அதை ஸ்கேன் செய்து பார்த்தோம், அதில் கரன்சி இருந்தது தெரியவந்தது. நீதிமன்றத்தின் முன் அளித்த எனது அறிக்கை பற்றிய அனைத்தையும் என்னால் வெளியே சொல்ல முடியாது,'' என்று ஜூன் 7 அன்று செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.
இந்த குற்றச்சாட்டு ஆதாரமற்றது என்று கூறிய முதல்வர், தனக்கு எதிரான ஏதோ ஒரு சதித் திட்டத்தின் ஒரு பகுதி இது என்று அவர் குறிப்பிட்டார்.
"தங்கக் கடத்தல் வழக்கு வெளியே வந்தபோது இந்திய அரசு விரிவான விசாரணை நடத்தவேண்டும் என்று மாநில அரசு வலியுறுத்தியது. ஆனால், அரசியல் காரணங்களால் சில குறிப்பிட்ட குற்றச்சாட்டுகள் எங்களுக்கு எதிராக திரும்பத் திரும்ப முன்வைக்கப்பட்டன. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மூலம் பலனை அறுவடை செய்ய முயல்வோருக்கு சரியான பதிலை கேரள சமூகம் புகட்டும்," என்று பினராயி விஜயன் கூறினார்.
இந்த வழக்கை அமலாக்கத் துறை, தேசிய புலனாய்வு முகமை, சுங்கத் துறை ஆகியவை விசாரித்தன.
தங்கக் கடத்தல் வழக்கு என்பது என்ன?
5 ஜூலை 2020 அன்று சுங்கத் துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக சாமான்களில் இருந்து ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதை அடுத்து ஸ்வப்னா சுரேஷ் வெளிச்சத்திற்கு வந்தார். இந்த சாமான்கள், நூடுல்ஸ், குளியலறை ஃபிட்டிங்குகள், பிஸ்கட்டுகள், பேரீச்சைகள் என்று பட்டியலிடப்பட்டிருந்தன.
ஒரு வருடத்திற்கு முன்பே பணி நீக்கப்பட்ட தூதரக மக்கள் தொடர்பு அதிகாரி (பிஆர்ஓ) சரித் குமார், தான் இன்னும் பணியில் இருப்பதாகக் கூறி சாமான்களை சேகரிக்கச் சென்றுள்ளார். தூதரக சாமான்களை பரிசோதிப்பதற்கான நிபந்தனையின்படி தூதரக அதிகாரிகள் முன்னிலையில் சரக்குகளை திறக்க சுங்கத்துறை முடிவு செய்தது.
ஸ்வப்னா சுரேஷும் தூதரகத்தில் இருந்து பணி நீக்கப்பட்டார், ஆனால் அவருக்கு விரைவில் சிவசங்கர் தலைவராக இருந்த கேரள மாநில தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு நிறுவனத்தில் (KSITIL) இல் வணிக மேம்பாட்டு மேலாளராக வேலை கிடைத்தது. ஆனால், அவரது பெயரை தாம் பரிந்துரைக்கவில்லை என்று சிவசங்கர் மறுத்துள்ளார்.
சிவசங்கர், முதல்வரின் முதன்மை முதன்மைச் செயலாளராகவும், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராகவும் ஒரே நேரத்தில் பொறுப்பு வகித்து வந்தார். ஆனால், இவர் பிறகு பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டார். 20 மாதங்களுக்குப் பிறகே இவரால் ஜாமீன் பெற முடிந்தது.
தனது வழக்குரைஞர் சமூக ஊடகத்தில் பகிர்ந்த ஒரு பதிவுக்காக அவர் மீது மான நஷ்ட வழக்குத் தொடரப்பட்டதற்கு, சி.பி.எம். எம்.எல்.ஏ. கே.டி. ஜலீல் மீது குற்றம்சாட்டினார் ஸ்வப்னா சுரேஷ். அத்துடன், அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளார் அவர்.
தான் தந்த அறிக்கையில் தாம் உறுதியோடு இருப்பதாகவும் அதற்காக தம்மை சுற்றியுள்ளவர்களை தாக்கவேண்டியதில்லை என்று கூறிய ஸ்வப்னா, "என்னைக் கொன்றுவிடுங்கள். பிரச்சனை முடிந்துவிடும்" என்று பாலக்காட்டில் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்