You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
முகமது நபிகள் பற்றிய கருத்தால் உ.பி-யில் தீவிரமான வன்முறை, இதுவரை என்ன நடந்தது?
- எழுதியவர், அனந்த் ஜனானே
- பதவி, பிபிசி செய்தியாளர்
உத்தர பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நேரிட்ட வன்முறை ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து கைது நடவடிக்கைகள் தொடர்கின்றன.
உத்தர பிரதேசத்தில் கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் மொத்தம் 255 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஃபிரோஸாபாதில் 13 பேர், அலிகரில் 3 பேர், ஹத்ராஸில் 50 பேர், மொராதாபாத்தில் 27 பேர், அம்பேத்கர் நகரில் 28 பேர், சஹாரன்பூரில் 64 பேர், ஜலோனில் 2 பேர், பிரயாக்ராஜில் 68 பேர் இதில் அடங்குவர். லக்கிம்பூர் கேரியில் நடந்த ஆர்பாட்டத்திற்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் யாரும் கைது செய்யப்படவில்லை.
வெள்ளிக்கிழமை வன்முறை வெடித்த மாவட்டங்களில், சனிக்கிழமையும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் காணப்பட்டன. மேலும் போலீஸ் மற்றும் நிர்வாக அதிகாரிகள் தெருக்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.
பிரயாக்ராஜில் ஆர்பாட்டங்களின் மூளையாகச் செயல்பட்டவர் கைது
29 தீவிரப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தச் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவரைக் கைது செய்துள்ளதாகவும், அவர் பெயர் முகமது ஜாவேத் என்ற ஜாவேத் பம்ப் என்றும் பிரயாக்ராஜ் போலீஸார் கூறுகின்றனர். ஜாவேத்தின் கைபேசியில் இருந்து கிடைத்த தகவலின்படி, அவர் பாரத் பந்த்க்கு அழைப்பு விடுத்து, பின்னர் அதை புறக்கணித்தார் என்றும் வன்முறை வெடித்த இடத்தை அடைய அழைப்பு விடுத்ததாகவும், போலீசார் கூறுகின்றனர்.
"தனக்கு ஒரு மகள் இருப்பதாகவும், அவர் ஜேஎன்யூவில் படிக்கிறார் என்றும் விசாரணையில் அவர் கூறியுள்ளார். அந்தப்பெண் மூலமாகவும் இவருக்கு ஆலோசனைகள் தெரிவிக்கப்படுகின்றன. என்ன யோசனை தெரிவிக்கப்படுகிறது என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரது மொபைலில் இருந்தும் பல எண்கள் அழிக்கப்பட்டு, வாட்ஸ் அப்பில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்டெடுக்க மொபைல்கள் FSL க்கு அனுப்பப்படும்," என்று பிரயாக்ராஜ் எஸ்எஸ்பி அஜய் குமார் கூறினார்.
குற்றம் சாட்டப்பட்ட முகமது ஜாவேத்தின் மகளும் விசாரிக்கப்படுவாரா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த எஸ்எஸ்பி அஜய் குமார், "முதற்கட்ட விசாரணையில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உறுதியான ஆதாரம் கிடைத்தால் கைது செய்வதில் தயக்கம் காட்டப்படாது. உடனடியாகக் கைது செய்ய குழுக்கள் டெல்லி செல்லும் மற்றும் டெல்லி போலீஸிடம் உதவி கோரப்படும்," என்றார்.
முதற்கட்ட விசாரணையில் பெரியளவில் சதித் திட்டம் தீட்டப்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாக பிரயாக்ராஜ் போலீசார் கூறுகின்றனர். ஏற்கெனவே ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மூன்று அல்லது நான்கு பேரின் கைதுகள் தொடர்பாகப் பேச்சு நடக்கிறது என்று எஸ்.எஸ்.பி கூறுகிறார். அவர்களைப் பற்றிய விசாரணையை நடத்தி வருவதாகக் காவல்துறை கூறுகிறது. "பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சட்டவிரோத கட்டுமானத்தை இடிப்பதும் செயல்படுத்தப்படும். மேலும் குண்டர் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களின் கருப்புப் பணமும் பறிமுதல் செய்யப்படும், அவர்கள் மீது எந்தக் கருணையும் காட்டப்படாது," என்று எஸ்எஸ்பி தெரிவித்தார்.
பிரயாக்ராஜ் மேம்பாட்டு ஆணையத்தின் இணைச் செயலர் அஜய் குமார், சட்டவிரோத கட்டடங்களை அடையாளம் காண அப்பகுதிக்கு வந்தார்.
கலவரத்தில் மைனர் குழந்தைகளை அரணாக நிறுத்தி கற்கள் வீசப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அடையாளம் தெரியாத 5000 பேரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
கலவரக்காரர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் பணம் பெற்றிருக்கலாம் என்றும் பிரயாக்ராஜ் காவல்துறை கூறுகிறது. எஸ்.எஸ்.பி அஜய் குமார் கூறும்போது, "ஏதாவது செய்துதான் ஆகவேண்டும் என்பது போல அவர்கள் நடவடிக்கை இருந்தது. அப்போதுதான் பணம் கிடைக்கும். அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு அவர்களிடம் காணப்பட்டது. இது பெரிய சதியின் ஒரு பகுதியாகும். மேலும் அனைவரையும் கைது செய்யும் பணியில் போலீசார் ஈடுபடுவார்கள்," என்றும் அஜய் குமார் குறிப்பிட்டார்.
கான்பூரில் ஓடிய புல்டோசர்
ஜூன் 3 சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு, சனிக்கிழமையன்று, கான்பூரில் உள்ள மேம்பாட்டு ஆணையம் முகமது இஷ்தியாக் என்ற நபரின் கட்டடத்தின் மீது புல்டோசரை ஏற்ற உத்தரவிட்டது.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் புல்டோசர் தனது வேலையை செய்தது.
"பெறப்பட்ட உள்ளீடுகளின் அடிப்படையில், கலவரத்தின் முக்கியக் குற்றவாளிகளான ஃஜபர் ஹயாத் ஹஷ்மி மற்றும் முகமது இஷ்தியாக் இருவரும் ஒருவருக்கொருவர் மிகவும் நெருக்கமானவர்கள். இந்த முதலீடுகள் அனைத்தும், வழக்கில் முக்கிய குற்றம் சாட்டப்பட்டவரின் முதலீடுகள் என்று நம்புவதற்கான ஆதாரம் எங்களிடம் உள்ளது," என்று கான்பூர் காவல்துறை இணை கமிஷனர் ஆனந்த் பிரகாஷ் திவாரி கூறினார்.
வன்முறைக்குப் பிறகுதான் இங்கு புல்டோசர் ஓடுகிறது, இதற்கு முன்பு கட்டடம் கட்டப்பட்டபோது கேடிஏ கவனம் செலுத்தவில்லையா என்று உள்ளூர் ஊடகங்கள் அவரிடம் கேட்டன. அதற்குப் பதிலளித்த அவர், "விதிகள் மற்றும் நேரில் கண்ட சாட்சிகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நகரத்தில் எந்தவொரு சட்டவிரோதமான காரியத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம். எந்தவொரு சம்பவமும் 360 டிகிரி பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இதில் நிதியளிப்பு நோக்கம் மற்றும் வேறு உள்நோக்கமும் உள்ளது. மேலும் இவையனைத்து குறித்தும் விசாரிக்கப்படுகின்றன," என்றார்.
"நில மாஃபியாவின் சட்டவிரோத சொத்துகளுக்கு எதிராக நிர்வாகம் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது," என்று கேடிஏ செயலர் திரிபுவன் வைஷ் கூறினார்.
சஹரான்பூரிலும் புல்டோசர்
சஹரான்பூரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட வன்முறையில் மொத்தம் 64 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதாக போலீஸ் நிர்வாகம் பேசி வருகிறது.
இந்தச் சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் முஸம்மில் மற்றும் அப்துல் வக்கர் ஆகிய இருவரின் வீடுகளும்,மாநகரசபையால் புல்டோசர் மூலம் தகர்க்கப்பட்டது. இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு சஹரான்பூர் தெருக்களில் நடந்த வன்முறைக்குப் பிறகு, போலீசார் சந்தையை திறக்க முயன்றனர் மற்றும் வணிகர்களிடம் பேசி அவர்களுக்கு பாதுகாப்பு உறுதியளித்தனர்.
கலவரக்காரர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை தாக்கும் வீடியோவை பாஜக எம்எல்ஏ பகிர்ந்துள்ளார்
முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் முன்னாள் ஊடக ஆலோசகரும் தேவரியாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏவுமான ஷலப் மணி திரிபாதி, மூடிய அறையில் காவலில் உள்ள சிலரை போலீஸார் தடிகளால் அடிக்கும் வீடியோவை ட்வீட் செய்துள்ளார்.
கலவரக்காரர்களுக்கு "ரிட்டர்ன் கிஃப்ட்" என்று ட்வீட்டில் அவர் எழுதினார்.
இந்த வீடியோ உத்தரபிர தேசத்தின் ஏதாவது ஒரு மாவட்டத்தைச் சேர்ந்ததா என்பதை அறிய பிபிசி முயன்றது. அப்போது சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜி பிரசாந்த் குமார், "இந்த வீடியோ இன்னும் காவல்துறையின் கவனத்திற்கு வரவில்லை" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்