You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா
- எழுதியவர், பிபிசி மானிட்டரிங்
- பதவி, .
முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளை எச்சரித்துள்ளது.
இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தாவின் நேரடி எதிர்வினையாக இது உள்ளது.
முகமது நபிகள் குறித்த கருத்துக்கு இஸ்லாமிய நாடுகளின் எதிர்வினையைத் தொடர்ந்து, பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா அக்கட்சியிலிருந்து சமீபத்தில் இடைநீக்கம் செய்யப்பட்டார். டெல்லி ஊடகப்பிரிவின் தலைவராக இருந்த நவீன் ஜின்டால் பாஜகவிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்திய துணைக்கண்டத்தின் அல்-கய்தா (al-Qaeda in the Indian Subcontinent) என தம்மைத்தாமே அழைத்துக்கொள்ளும் இந்த ஜிகாதி குழு இதுதொடர்பாக உருது மற்றும் ஆங்கிலத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 7)அறிக்கை ஒன்றை, அதன் இணையதளம் மற்றும் சமூக ஊடகங்களான டெலிகிராம், ராக்கெட்சாட், சிர்ப்வயர் ஆகியவற்றில் வெளியிட்டது.
அந்த அறிக்கையில், "சில தினங்களுக்கு முன்னர் இந்துத்துவாவின் பிரசாரகர்கள் முகமது நபி குறித்தும் அவருடைய மனைவி ஆயிஷா குறித்தும் இந்திய தொலைக்காட்சி சேனல் ஒன்றில் அவமதிக்கும் வகையிலும் அவதூறு பரப்பும் வகையிலும் பேசியுள்ளனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகமது நபி குறித்த கருத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள அல்-கய்தா, "துடுக்குத்தனமான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துகளை கூறும் உலகின் வாய்கள், குறிப்பாக இந்துத்துவ தீவிரவாதிகள் ஆக்கிரமித்துள்ள இந்தியாவில்" கொலைகள் மற்றும் தற்கொலைப்படை தாக்குதல்கள் நிகழ்த்தப்படும் என, அல்-கய்தா எச்சரித்துள்ளது.
'மன்னிப்பு வழங்கப்படாது'
மேலும், முகமது நபியை இழிவுபடுத்துபவர்களுக்கு "மன்னிப்பு வழங்கப்படாது. இத்தகைய விவகாரத்திற்கு கண்டன வார்த்தைகள் மூலமாகவோ அல்லது வருத்தத்தின் மூலமாகவோ எதிர்வினையாற்றப்படாது" எனவும் அவை வன்முறை தாக்குதல்கள் மற்றும் பதிலடியால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
"டெல்லி, பாம்பே, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத் ஆகிய பகுதிகளில் உள்ள காவி தீவிரவாதிகள் (இந்து தேசியவாதிகள்) தங்களின் முடிவுக்காக இப்போது காத்திருக்கட்டும். அவர்கள் தங்கள் வீடுகளிலோ ராணுவ முகாம்களிலோ தஞ்சமடைய முடியாது," என அல்-கய்தா எச்சரித்துள்ளது.
இஸ்லாம் மற்றும் இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாவலராக தன்னை காட்டிக்கொள்ள இந்த அமைப்பு முயற்சிக்கிறது. மேலும், முகமது நபி கூறியதாக சொல்லப்படும் "காஸ்வா இ-ஹிந்த்' (Ghazwa e Hind) என்று குறிப்பிடப்படும் போர் ஒன்றில், இறுதியில் முஸ்லிம்கள் இந்தியாவை வெல்வார்கள் என்ற முழக்கத்தைத் தூண்டும்வகையிலும் அல்-கய்தா செயல்பட்டு வருகிறது.
முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொல்வோம் என, முகமது நபி குறித்த சமீபத்திய கருத்துக்கு சம்பந்தமில்லாமல், இந்த அமைப்பு முன்னதாக மற்றொரு அறிக்கையையும் வெளியிட்டிருந்தது.
முகமது நபிகள் குறித்த சர்ச்சை கருத்தைத் தொடர்ந்து முஸ்லிம்கள் சிலர் கோபமடைந்து, போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில், அல்-கய்தாவின் இந்த செய்தி வந்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்