தமிழ்நாடு அரசு மீது பாஜகவின் அண்ணாமலை ஊழல் புகார்: 'தனியார் கொள்முதலால் ரூ.77 கோடி இழப்பு' - மா. சுப்பிரமணியன் எதிர்வினை

தமிழ்நாடு அரசின் சார்பில் கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் ஹெல்த் மிக்ஸ் பவுடர் மற்றும் ஐயன் சிரப் உள்ளிட்ட பொருட்களை தனியாரிடம் கொள்முதல் செய்ததில் அரசுக்கு ரூ.77 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

டெண்டர் விட இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், அதற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது சரியல்ல என்கிறார் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்.

திமுக அரசு நடத்தியுள்ள ஊழல் பற்றிய விவரங்களை அளிக்கப்போவதக கூறி, அண்ணாமலை சென்னையில் பாஜக அலுவலகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.

அண்ணாமலை சொன்னது என்ன?

அதில், கர்ப்பிணிகளுக்கு அளிக்கும் பொருட்களை தனியாரிடம் வாங்குவது மற்றும் நிலம் பதிவு செய்வதில் ஒரு தனியார் நிறுவனத்திற்கு பாகுபாடு காட்டப்படுவதால் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

''திமுக ஆட்சிக்கு முன்னதாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்பட்ட கிட்டில் ஒரு தனியார் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் இருந்தது. இந்த ஹெல்த் மிக்ஸ் பவுடருக்கு பதிலாக அரசு நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் ஹெல்த் மிக்ஸ் பவுடரை வழங்கலாம் என்ற முடிவை மார்ச் மாதம் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை முடிவு செய்கிறது. விசித்திரமாக, ஏப்ரல் மாதத்தில் அரசின் நிர்பந்தத்தின் காரணமாக, பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.''

''ஆவின் நிறுவனத்தை விடுத்து அந்த தனியார் நிறுவனத்திடம் வாங்குவதால், ரூ.45 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதேபோல ஐயன் சிரப் மருந்தை அந்த நிறுவனத்திடம் பெறுவதால் ரூ.32 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த மருந்தை தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகள் கார்பரேஷன் மூலமாக வாங்கினால் ஒரு சிரப் வெறும் ரூ.42ஆக இருக்கும், தனியார் நிறுவனத்திடம் வாங்குவதால், ஒரு சிரப் விலை ரூ.224ஆக இருக்கிறது. இந்த இரண்டு பொருட்களில் ஊழல் நடக்கிறது,''என்கிறார் அண்ணாமலை.

தனியார் நிறுவனத்தை விட விலை குறைவாக, 40 சதவீதம் விலை குறைவாக ஆவின் நிறுவனம் ஹெல்த் மிக்ஸ் தருவதற்கு முன்வந்தபோதும் அது ஏற்கப்படவில்லை என்கிறார் அண்ணாமலை. முதல்வரின் உதவியாளர், திமுக கட்சியை சேர்ந்தவர்கள் மூலமாக இந்த முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் நிலப்பதிவு செய்வதில், ஆன்லைன் மூலமாக பதிவு செய்யும் விதத்தில் முறைகேடு நடைபெறுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

தமிழ்நாடு அரசு பொங்கல் தொகுப்பு கொடுத்தபோது எந்த நிறுவனம் டெண்டர் எடுத்து, பொங்கல் பரிசுபொருட்கள் அடங்கிய பை தயாரித்துக் கொடுத்ததோ, அந்த நிறுவனத்திற்கு சாதகமாகதான் ஹெல்த் மிக்ஸ் டெண்டர் வழங்கப்படுகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

'இன்னும் டெண்டர் விடவே இல்லை' - மா.சுப்பிரமணியன்

ஹெல்த் மிக்ஸ் மற்றும் ஐயன் சிரப் வாங்குவதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக பாஜக தலைவர் அண்ணாமலை அடங்கியுள்ள குற்றசாட்டுகளுக்கு பதில் கூறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''டெண்டர் விடுவதற்கு இன்னும் இரண்டு நாட்கள் உள்ளன. அதற்குள் இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை கூறுவது சரியல்ல. எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. அவர் கூறுவது அவரது சொந்த கருத்து. கடந்த நான்கு ஆண்டுகளாக டெண்டர் விடுவதில் என்ன முறை பின்பற்றபட்டதோ, அதைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். எதையும் மாற்றவில்லை,''என பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேலும் ஐயன் சிரப் வாங்குவதில் தமிழ்நாடு அரசின் மருத்துவ சேவைகள் கார்பரேஷனிடம் வாங்குவதை தவிர்த்து, தனியார் நிறுவனத்திடம் அதிக விலையில் அரசு வாங்குவதால் ரூ.32 கோடி நஷ்டம் ஏற்படுவதாக அண்ணாமலை கூறுவது சரியான கூற்று அல்ல என்கிறார் அமைச்சர்.

''அண்ணாமலை கூறும் ஐயன் சிரப் என்பது கர்ப்பிணிகளுக்கு அளிக்கப்படும் சிரப் அல்ல. இவர் யூகத்தின் அடிப்படையில் குற்றச்சாற்று சொல்வது நியாயமல்ல. டெண்டர் முடிந்த பின்னர், அதில் முறைகேடுகள் நடந்திருந்தால், அதற்கு நாங்கள் பதில் சொல்கிறோம். இவரின் குற்றச்சாட்டுகளில் எந்த உண்மை இல்லை,''என்கிறார் அமைச்சர் சுப்பிரமணியன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: