You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தருமபுரியில் நவீன ஸ்கேன் மூலம் பாலினத்தைக் கண்டறிந்து கருக்கலைப்பு: 7 பேர் கைது - சிக்கியது எப்படி?
- எழுதியவர், பி.சுதாகர்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தருமபுரி மாவட்டத்தில் நவீன முறையில் மொபைல் ஸ்கேன் கருவி மூலம் சட்ட விரோதமாக கருவில் இருப்பது ஆண் குழந்தையா பெண் குழந்தையா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக, மூன்று பெண்கள் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிபட்டினம் அருகே உள்ள மலையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்த வனஜா - ராகவன் தம்பதிக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மீண்டும் கருவுற்ற வனஜா, கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த பணிக்காக காவேரிபட்டினத்திற்கு பேருந்தில் சென்றுள்ளார். அப்போது பேருந்தில் அருகே அமர்ந்திருந்த பெண் ஒருவர் அறிமுகமாகி வனஜாவிடம் பேச்சுக்கொடுத்துள்ளார்.
அவரிடம் தனக்கு 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் தான் மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக கூறியுள்ளார். அதற்கு அருகே இருந்த பெண்மணி கருவில் இருப்பது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என கண்டறிந்து சொல்ல தனக்கு தெரிந்த நண்பர்கள் உள்ளதாகவும் அவர்களிடம் தீர்வு கிடைக்கும் எனவும் கூறி வனஜாவிடம் திருப்பத்தூரை சேர்ந்த ஜோதி என்பவரின் தொடர்பு எண்ணை கொடுத்துள்ளார்.
நவீன கருவி மூலம் பாலினம் கண்டறியும் சோதனை
"அவரை தொடர்புகொண்ட வனஜாவை, கடந்த 12ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்திற்கு வரச்சொல்லி அங்கிருந்து ஆட்டோ ஓட்டுனரான வெங்கடேசன் என்பவரது வீட்டுக்கு காரில் அழைத்துச் சென்றுள்ளனர். கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை கண்டறியும் நவீன மொபைல் ஸ்கேன் கருவி கொண்டு வனஜாவை பரிசோதித்துள்ளனர்.
தொடர்ந்து சோதனையில் கருவில் இருப்பது பெண் குழந்தை என தெரிந்ததும், கருக்கலைப்பு செய்ய வனஜா ஜோதியிடம் சம்மதம் தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு செய்ய சுமார் 20 ஆயிரம் ரூபாய் ஆகும் எனவும் ஜோதி தெரிவித்துள்ளார்.
பின்னர் 14ஆம் தேதி பணத்துடன் வந்த வனஜாவுக்கு வெங்கடேசன் வீட்டில் தருமபுரி அடுத்த அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம் என்ற தனியார் செவிலியர் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் கருக்கலைப்பு செய்துள்ளார்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதில் கருவில் இருந்து குழந்தையை வெளியே எடுக்கும் பொழுது சிசுவின் தலை பிறப்புறுப்பில் சிக்கிக்கொண்டதால் வனஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்து அங்கேயே மயங்கி விழுந்துள்ளார்.
கருக்கலைப்பு செய்த கும்பல் குழந்தையை அப்படியே வயிற்றிலேயே விட்டு விட்டு அதனை மறைத்து, வனஜாவை அவரது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி
வீட்டுக்கு சென்ற வனஜாவுக்கு அதிக வலி ஏற்பட்டதால் அவரை அவரது தாயார் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்கு அனுமதித்துள்ளார்.
ஆனால், ஆபத்தான நிலையில் வனஜா இருந்ததால், அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தியதன் பேரில் அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த ரகசிய தகவலின் பேரில், தருமபுரி மாவட்ட மருத்துவத்துறை ஊரக பணிகள் இணை இயக்குனர் கனிமொழி தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தார்.
7 பேர் கைது
இதில் மருத்துவர் கனிமொழிக்கு தருமபுரி அருகே ராஜபேட்டை ஏரிக்கரை அருகே ஆட்டோ ஓட்டுநர் வெங்கடேசன் என்பவர் வீட்டில் கருவுற்ற பெண்கள் 6 பேருக்கு ஸ்கேன் செய்வதற்கு சனிக்கிழமை (மே 28) அழைத்துச் சென்றதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், மருத்துவர் கனிமொழி தருமபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ், காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட காவல் துறையினர் ராஜபேட்டையில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஜோதி, சதீஷ்குமார், சுதாகர், தருமபுரி மாவட்டம் அழகாபுரி பகுதியை சேர்ந்த கற்பகம், பாப்பாரப்பட்டி பகுதியை சேர்ந்த சரிதா, பாரதிபுரம் பகுதியை சேர்ந்த குமார், செட்டிகரை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் வெங்கடேசன் ஆகிய 7 பேரும் பாலின தேர்வு தடை செய்தல் சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்து, கைது செய்யப்பட்டனர்.
வெங்கடேசனின் வீட்டில் 6 கர்ப்பிணி பெண்களை அழைத்து வந்து கற்பகம் மூலம் ஒரு ஸ்கேன் கருவி கொண்டு, தங்களை மருத்துவர்கள் என்று கூறி கர்ப்பிணிப் பெண்களை ஏமாற்றி கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறியப்படுவது தெரியவந்துள்ளது. இதில் கற்பகம், ஜோதி, சதீஷ்குமார் ஆகியோர் எவ்வித மருத்துவப் படிப்பும் படிக்காமல் இதில் ஈடுபட்டு வந்துள்ளனர். இடைத்தரகர்கள் வெங்கடேசன், சரிதா மூலம் 6 கர்ப்பிணி பெண்களை ஸ்கேன் பரிசோதனை செய்யும் இடத்திற்கு அழைத்து வந்ததும் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து தருமபுரி நகர காவல் துறையினர் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து ஸ்கேன் பரிசோதனை கருவி, அவர்கள் பயன்படுத்திய கார் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்ததோடு, மேற்கொண்டு இவர்களுக்கு வேறு இடைத்தரகர்களுடன் தொடர்பு உள்ளதா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்