நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சென்னை விழா: திமுக, பாஜக தொண்டர்கள் முழக்கப் போர், அண்ணாமலை ஆவேசம் - நடந்தது என்ன?

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டங்களை தொடக்கி வைப்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சென்னையில் கலந்துகொண்ட விழா, தி.மு.க. - பா.ஜ.க.வுக்கான புதிய மோதல் களமாக உருவெடுத்திருக்கிறது. விழா அரங்கிலும் வெளியிலும் என்ன நடந்தது?

தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியோடு முடிவடைந்த பல்வேறு திட்டங்களைத் திறந்துவைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் வியாழக்கிழமையன்று (26.05.2022) இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி சென்னைக்கு வருகைதந்தார்.

சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் நடந்த இந்த நிகழ்வில் பிரதமருடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் மேடையில் அமர்ந்திருந்தனர். பிற அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மேடைக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்தனர்.

விழா தொடங்குவதற்கு முன்பாகவே, பா.ஜ.க. மற்றும் தி.மு.க தொண்டர்கள் அங்கிருந்த கேலரிகளில் அமர்ந்திருந்தனர். விழா ஆறு மணிக்கு ஆரம்பிக்கவிருந்த நிலையில், பிற்பகல் 3 மணியளவிலேயே அங்கு வந்து அமர்ந்திருந்த தொண்டர்கள் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியபடி இருந்தனர்.

பா.ஜ.கவினரைப் பொறுத்தவரை, "பாரத் மாதா கி ஜே" கோஷத்தையும் பிரதமரை வாழ்த்தும் கோஷங்களையும் முழங்கியபடி இருந்தனர். தி.மு.கவினர் பெரியார், அண்ணா, மு. கருணாநிதி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை வாழ்த்தி கோஷங்களை எழுப்பினர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் போட்டியிடுவதைப் போல மாறி மாறி கோஷங்களை எழுப்பத் தொடங்கினர்.

பிரமதரும் முதலமைச்சரும் விழா நடக்கும் மேடைக்கு வந்தபோது, இரு தரப்பும் இணைந்து கோஷங்களை எழுப்பினர்.

இதற்குப் பிறகு வரவேற்புரை ஆற்றவந்த எல். முருகன், முதலமைச்சர் பெயரைச் சொன்னதும் தி.மு.கவினர் நீண்ட நேரம் குரல் எழுப்பியதால் அவர் சில விநாடிகள் தனது பேச்சை நிறுத்த வேண்டியதாயிற்று. இதற்குப் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது உரையைத் தொடங்கினார்.

இதற்குப் பிறகு திட்டங்கள் தொடங்கிவைக்கப்பட்டபோது பா.ஜ.கவினர் குரல் எழுப்பினர். அதற்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோதி பேசியபோது, திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். பேச்சின் முடிவில், "பாரத் மாதா கி ஜே", 'வந்தே மாதரம்' ஆகிய கோஷங்களை எழுப்பினார்.

விழா இத்துடன் நிறைவடைந்தாலும், பா.ஜ.க., தி.மு.க. ஆகிய இரு தரப்பும் இந்த விழாவை முன்வைத்து மோதலை தொடங்கியிருக்கின்றனர்.

விழா நிறைவடைந்த பிறகு பிரதமருடன் பேசினார் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை. அதற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை, முதலமைச்சரின் பேச்சை ஆவேசமாகக் கண்டித்தார். "முதலமைச்சர் நடந்துகொண்டவிதம் முற்றிலும் தவறு. சரித்திரப் பிழை இது" என்றார் அண்ணாமலை.

மேலும், "பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு, ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள். பிரதமரை மேடையில் அமரவைத்துவிட்டு, என்ன விளையாட்டு காட்டுகிறீர்களா? தமிழ்நாட்டில் இதுவரை பிரதமரை மதித்திருக்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் ஒரு கரும்புள்ளி" என்று ஆவேசமாகக் கூறினார். மேலும் இன்று (வெள்ளிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளிக்கப்போவதாக கூறினார்.

மேலும், தனது ட்விட்டர் பக்கத்திலும் முதலமைச்சரின் பேச்சைக் கண்டித்து பதிவிட்டார்.

இதற்கிடையில், தமிழ்நாட்டின் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இந்த நிகழ்வில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பங்கேற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படும்போது எழுந்து நிற்கவில்லையென சில தொடர் ட்வீட்டுகளைப் பதிவிட்டார். பிறகு அதன் சில பகுதிகளை அவர் நீக்கிவிட்டார்.

பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காததைக் கண்டித்து ஏற்கெனவே திட்டமிட்டிருந்த தலைமைச் செயலக முற்றுகைப் போராட்டத்தை 31ஆம் தேதி கண்டிப்பாக நடத்தப்போவதாகவும் பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இந்த நிலையில், பிரதமரின் விழாவுக்குப் பிறகு திமுக - பாஜக இடையே வாக்குவாதம் வலுத்து வருகிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: