You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இந்தியாவில் சர்க்கரை ஏற்றுமதிக்கு இனி அரசு அனுமதி அவசியம்: காரணம் என்ன?
- எழுதியவர், சரோஜ் சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
பொதுவாக, நாட்டில் ஒரு பொருளுக்கு விலையேற்றமோ அல்லது தட்டுப்பாடோ இருந்தால், அந்தப் பொருளுக்கான ஏற்றுமதியின் மீதான கட்டுப்பாடுகளை அரசு அறிவிக்கலாம். ஆனால், சர்க்கரை விவகாரத்தில் நரேந்திர மோதி தலைமையிலான அரசு எடுத்த முடிவு மக்களுக்கு ஆச்சரியமளித்தது.
அப்படி என்ன முடிவு அது?
ஏற்றுமதிக்கு தடையோ கட்டுப்பாடுகளோ அல்ல. ஆனால், சர்க்கரையை ஏற்றுமதிக்கான 'ஃப்ரீ' பிரிவில் இருந்து 'ரெகுலேட்டட்' பிரிவிற்கு கொண்டுவந்துள்ளது.
எளிமையாகச் சொல்வதானால், ஜூன் 1 ஆம் தேதி முதல் அக்டோபர் 31 ஆம் தேதி வரை சர்க்கரை ஏற்றுமதி செய்ய வேண்டுமென்றால், அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
சர்க்கரை விஷயத்தில் அரசு ஏன் இப்படி ஒரு முடிவை எடுத்தது?
தற்போது இந்தியாவில் சர்க்கரையின் விலை அதிகரிக்கவில்லை, உற்பத்தியும் குறையவில்லை. இதையும் மீறி மத்திய அரசு இப்படியொரு முடிவை எடுத்துள்ளது.
இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை அறிய முதலில் இந்தியாவில் சர்க்கரை தொடர்பான சில அடிப்படை விஷயங்களை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அக்டோபர் முதல் செப்டம்பர் வரை கரும்பு அரைக்கும் பருவமாக கருதப்படுகிறது. பொதுவாக இது ஐந்து முதல் ஆறு மாதங்கள் இருக்கும்.
கரும்பு அறுவடைக்குத்தயாராக அதன் ரகத்தைப் பொறுத்து, 12 முதல் 18 மாதங்கள் ஆகும். இதன் விளைவாக, புதிய சர்க்கரை நவம்பர் முதல் வாரத்தில் சந்தைக்கு வரும்.
எனவே, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ஆம் தேதி, நாட்டின் இருப்பில் குறைந்தது 60 லட்சம் டன் சர்க்கரை இருக்க வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதன் மூலம் நவம்பர் வரை புதிய சர்க்கரை இல்லாமல் சந்தையை நடத்த முடியும்.
இது ஓப்பனிங் ஸ்டாக் எனப்படும். அதாவது ஒரு ஆண்டைத் தொடங்கும்போது இருக்கும் கையிருப்பு.
ஆனால், சர்க்கரை ஏற்றுமதி விகிதம் தற்போது அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி, ஓப்பனிங் ஸ்டாக் சர்க்கரை 60 லட்சம் டன்களுக்கு குறைவாக இருக்கலாம் என்று அரசு கருதுகிறது.
எதிர்காலம் குறித்த அச்சத்தை மனதில் வைத்து மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கத்தின் முன்னாள் தலைமை இயக்குநர் அவினாஷ் வர்மா பிபிசியிடம் இந்தத் தகவலை தெரிவித்தார்.
அவினாஷ் வர்மா இந்த ஆண்டு ஏப்ரல் 28 வரை அந்தப் பதவியில் இருந்தார்.
ஓபனிங் ஸ்டாக்கில் பற்றாக்குறை ஏற்படக்கூடும் என்ற சந்தேகம் ஏன்?
இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் சர்க்கரை நுகர்வு சுமார் 22-24 லட்சம் டன்களாக உள்ளது.
அதன்படி, ஆண்டின் மொத்த நுகர்வு 270-275 லட்சம் டன்களாகும்.
இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தி 350-355 லட்சம் டன்னாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. போன வருட கையிருப்பும் கொஞ்சம் மிச்சம் உள்ளது.
இதன் காரணமாக, கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில், 100 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்ய, மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதில் 85 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. இப்போது மே மாதம் நடக்கிறது, அதாவது சர்க்கரை சீசன் தொடங்க இன்னும் 4 மாதங்கள் உள்ளது.
இதுபோன்ற சூழ்நிலையில், ஏற்றுமதியை கட்டுப்படுத்தாவிட்டால், சர்க்கரை ஏற்றுமதி 100 லட்சம் டன்னை தாண்டிவிடும். அந்த நிலையில் அக்டோபர் 1-ம் தேதிக்கான தொடக்க இருப்பு அரசு மதிப்பீட்டை விட குறைவாக இருக்கக்கூடும் என்று அவினாஷ் வர்மா கூறுகிறார்.
இதனுடன், கையிருப்பு குறைவதற்கு மற்றொரு காரணமும் உள்ளது. இம்முறை எத்தனால் தயாரிப்பில் கரும்பு அதிகம் பயன்படுத்தப்பட்டது. இதனால் சர்க்கரைக்கு குறைவான கரும்புதான் மிச்சமானது. எண்ணெய்களின் கலவையில் எத்தனால் பயன்படுத்தப்படுகிறது.
சர்க்கரை ஏற்றுமதி ஏன் அதிகரித்தது என்று தெரிந்துகொள்வோம்.
இதற்கு உலகின் சர்க்கரை சந்தை பற்றிப்புரிந்து கொள்ள வேண்டும்.
உலகில் சர்க்கரை உற்பத்தியிலும், அதன் நுகர்விலும் இந்தியா முதலிடத்தில் உள்ளது என்று சர்வதேச சர்க்கரை அமைப்பின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
உலகில் சர்க்கரை ஏற்றுமதியில் முதல் ஐந்து நாடுகள் (முறையே) - பிரேசில், தாய்லாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் மெக்சிகோ.
பிரேசில் மற்றும் தாய்லாந்தில், வானிலை காரணமாக (குறைவான மழை மற்றும் ஆலங்கட்டி மழை), கரும்பு உற்பத்தி குறைவாக இருந்தது. இதன் காரணமாக சர்வதேச அளவில் 100 லட்சம் டன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் சர்க்கரை ஏற்றுமதியாளர்கள் இந்தப்பற்றாக்குறையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்றனர். இதன் காரணமாக இந்த ஆண்டு சர்க்கரை ஏற்றுமதி, சாதனை அளவை எட்ட வாய்ப்பு உள்ளது.
உற்பத்தி குறைந்ததால், சர்வதேச சந்தையிலும் விலை உயர்ந்துள்ளது.
கையிருப்பு குறைவாக உள்ளதால் இந்திய சந்தையில் சர்க்கரையின் விலை உயராமல் இருப்பதற்காக இந்திய அரசு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்று இந்தத் துறை சார்ந்த நிபுணர்கள் கருதுகின்றனர்.
விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
அதிகரித்துள்ள சில்லறை பணவீக்கம், மத்திய அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. இது தற்போது 7 சதவிகிதத்தை தாண்டியுள்ளது.
எனவே அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு, ஒன்றன் பின் ஒன்றாக புதிய முடிவுகளை எடுத்து வருகிறது.
உள்நாட்டு சந்தையில் கோதுமைமாவு விலை அதிகரித்து வருவதால் கோதுமை ஏற்றுமதியை தடைசெய்யும் முடிவை மத்திய அரசு கடந்த 11 நாட்களுக்கு முன்பு எடுத்தது.
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு பெரிய அளவில் குறைத்தது.
இதேபோல், ஆண்டுதோறும் 20 -20 லட்சம் டன் கச்சா சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரி மற்றும் விவசாய உள்கட்டமைப்பு cess வரி ஆகியவற்றை 2024 மார்ச் வரை நீக்குவதாக அரசு அறிவித்துள்ளது.
இப்போது சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உடனடி தாக்கம்
"மத்திய அரசின் இந்த முடிவுகளின் பலன் இன்னும் 6-8 மாதங்களுக்கு முன்பு தெரியும் என்று தோன்றவில்லை," என்கிறார் முன்னாள் மத்திய நிதித்துறை செயலர் சுபாஷ் சந்திர கர்க்.
வரும் ஓராண்டுக்கு சில்லறை பணவீக்கம் 6 சதவிகிதத்திற்கு கீழே செல்லாது என்று அவர் மதிப்பிட்டுள்ளார்.
" சில்லறை பணவீக்க விகிதத்தில், உணவுப் பொருட்கள் பங்களிப்பு சுமார் 45 சதவிகிதம், பெட்ரோல் டீசலின் பங்களிப்பு 15 சதவிகிதம்," என்று பிபிசியிடம் பேசிய அவர் குறிப்பிட்டார்.
இரண்டையும் சேர்த்துப் பார்த்தால் அவைகளின் மொத்தப்பங்களிப்பு சுமார் 60 சதவிகிதம்.
இதன் காரணமாக உணவுப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்துவது அரசின் உத்தியாக உள்ளது. இந்த உத்தியின் கீழ், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய், கோதுமை மற்றும் சர்க்கரை தொடர்பாக அரசு புதிய முடிவுகளை எடுத்தது.
இந்தக்காரணங்களுக்காகவே பெட்ரோல், டீசல் விலையில் நிவாரணம் அளிக்க மத்திய அரசு முயன்றது.
"இந்த முடிவுகளின் உடனடி விளைவு உங்கள் பாக்கெட்டில் காணப்படாது. ஏனெனில் பொருளுக்குப்பொருள் விலை மாறுபடுகிறது," என்று அவர் மேலும் கூறினார்.
"உதாரணமாக, பெட்ரோல்-டீசல் விஷயத்தில், பல நேரங்களில் எண்ணெய் நிறுவனங்கள் அரசின் அழுத்தத்தால் தேர்தல் காரணமாக, விலை அதிகரிப்பை பொதுமக்கள் மீது சுமத்துவதில்லை. இப்போது அரசு தனது புதிய முடிவால் அளிக்கும் நிவாரணத்தை தங்கள் சொந்த லாபத்துக்காகப் பயன்படுத்துமா அல்லது பொதுமக்களுக்கு அளிக்குமா என்பது எண்ணெய் நிறுவனங்களைப் பொருத்தது.
இதேபோல், சர்க்கரை மற்றும் கோதுமை விலையும் அச்சம் காரணமாக அதிகரித்தது ," என்று சுபாஷ் சந்திர கர்க் தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்