உடல்நலமும், எடை குறைப்பும்: தொற்றுநோய் போல இந்தியாவில் அதிகரித்து வரும் உடல் பருமன் பிரச்னை

    • எழுதியவர், கீதா பாண்டே
    • பதவி, பிபிசி

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அதாவது அதிகப்படியான இந்தியர்களுக்கு உடல் பருமன் பிரச்னை உள்ளது என்கிறது புதிய அரசு ஆய்வு ஒன்று. இதனை உடனடியாக கவனிக்க வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் பிரச்னையாக கருதப்பட்ட இந்த உடல் பருமன் பிரச்னை, தற்போது குறைந்த அல்லது நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளிலும் அதிகரித்து வருகிறது.

அதிலும் இந்தியாவில் இந்த பிரச்னை மிக வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த காலங்களில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் போதிய எடையின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொண்ட இந்தியா, கடந்த சில வருடமாக உடல் எடை அதிகரிப்பு பிரச்னையை எதிர்கொள்ளும் ஐந்து நாடுகளில் ஒன்றாக உள்ளது.

2016ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவில் மொத்தம் 13.5 கோடி மக்கள் அதிக எடை உடையவர்களாக உள்ளனர் என கண்டறியப்பட்டது. அதாவது குறைந்த ஊட்டச்சத்து என்ற நிலைமை தற்போது அதிக உடல் எடை என்ற நிலைமையாக மாறி வருகிறது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீபத்திய தேசிய குடும்பநல சுகாதார கணக்கெடுப்பின்படி, சுமார் 23 சதவீத ஆண்கள் மற்றும் 24 சதவீத பெண்களின் பிஎம்ஐ (உடல் எடையையும், உயரத்தையும் கொண்டு கணக்கிடுவது) 25 ஆகவோ அல்லது அதற்கும் அதிகமாகவோ உள்ளது. இது 2015 -16 காலத்தைக் காட்டிலும் இது 4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதேபோல 3.4 சதவீத ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் அதிக உடல் எடையுடன் உள்ளனர். இது 2015-16-ல் 2.1 சதவீதமாக இருந்தது.

"இந்தியாவில் உடல் பருமன் பிரச்னை வேகமாக அதிகரித்து வருகிறது. உலக அளவில் இது அதிகரிக்கும் பிரச்னையாக உள்ளது. இதற்கு நாம் உடனடியாக தீர்வு காண வேண்டும்," என்கிறார் சென்னையில் உள்ள ஒபிசிட்டி ஃபவுண்டேஷன் நிறுவனர், மருத்துவர் ரவீந்திரன் குமரன்.

பெரிதாக உடல் உழைப்பு அற்ற வாழ்க்கை முறை, எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் நொறுக்குத் தீனிகள் இதுதான் நகரப்பகுதிகளில் பலரும் உடல் எடை அதிகரிப்பதற்கு காரணம் என்கிறார் ரவிந்திரன்.

உலக அளவில், இயல்பு, அதிக எடை, உடல் பருமன் மற்றும் உடல் நலத்தில் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய அதிக எடை, ஆகியவற்றை பிஎம் ஐ - யை கொண்டுதான் மதிப்பிடுவர். உலக சுகாதார நிறுவனம் 25 அல்லது அதற்கு மேற்பட்ட பிஎம்ஐ இருந்தால், அது உடல் பருமன் பிரச்னை என்கிறது.

தெற்காசிய மக்களுக்கு 25 என்ற அளவைவிட 23 என்ற அளவுதான் இருக்க வேண்டும் என்கிறார் ரவிந்திரன். அதாவது தெற்காசியவில் இருக்கும் மக்களுக்கு வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்தல் என்பது பொதுவான ஒரு பிரச்னையாக இருக்கும்; உடலில் வேறு எந்த இடத்தில் கொழுப்பு சேர்வதை காட்டிலும் இது உடல் நலத்திற்கு அதிக தீங்கு விளைவிக்கும். எனவே இந்தியர்களின் பிஎம் ஐ 23-ஐ தாண்டினாலே அது பருமன்தான் என்கின்றனர் நிபுணர்கள்.

அதேசமயம் 23 என்ற கணக்குபடி பார்த்தால் இந்தியாவில் நகரத்தில் வாழும் பாதி பேர் அதிக உடல் எடை கொண்டவர்களாகதான் இருப்பார்கள் என்கிறார் ரவிந்திரன்.

உடலில் அதிக கொழுப்பு சேர்வது, புற்று நோய், இதய நோய், நீரிழிவு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என்கிறது உலக சுகாதார நிறுவனம். கடந்த வருடம் சர்வதேச அளவில் 28 லட்சம் பேர் அதிக உடல் எடை தொடர்பான பிரச்னைகளால் உயிரிழந்துள்ளனர்.

உடல் பருமன் மற்றும் வளர்ச்சிதை பிரச்னைகளுக்கான சர்வதேச அறுவை சிகிச்சை கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் பிரதீப் செளபே, "ஒரு மனிதன் 10 கிலோ வரையில் உடல் எடை அதிகமாக இருந்தால் வாழ்நாளில் மூன்று வருடங்களை இழக்க நேரிடும். எனவே ஒருவர் 50 கிலோ வரை அதிகமாக இருந்தால் 15 வருடங்கள் வரை இழக்க நேரிடும். அதேபோல அதிக உடல் எடை கொண்டவர்கள் கோவிட் காலத்தில் 3 மடங்கு அதிகமாக உயிரிழப்பதை நாம் கண்டோம்" என்கிறார்

20 வருடங்களுக்கு முன்பு பேரியாட்ரிக் என்று அழைக்கப்படும் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் முன்னோடியாக விளங்கியவர் செளபே. அதாவது பிஎம்ஐ 40 அல்லது அதற்கும் மேற்பட்ட ஆபத்தான நிலையில் உள்ளவர்களுக்கு இந்த அறுவை சிகிச்சையை கடைசி வாய்ப்பாக பயன்படுத்துவர்.

உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் உடல் நல பிரச்னைகள் குறித்துதான் பலரும் பேசுவர் ஆனால் மனரீதியாக அதனால் ஏற்படும் பாதிப்பு குறித்து யாரும் பேசுவதில்லை என்கிறார் செளபே.

"மூன்று வருடங்களுக்கு முன்பு 1000 நபர்களிடம் நாங்கள் ஒரு கணக்கெடுப்பை நடத்தினோம். அதில் உடல் எடை அதிகமாக இருப்பவர்களின் பாலியல் வாழ்க்கையும் பாதிப்பிற்குள்ளானது தெரியவந்தது. இது மனதளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி, திருமண உறவையும் பாதிக்கும்." என்கிறார் செளபே.

கடந்த 2015ஆம் ஆண்டு செளபேவிடம் பாரியாட்ரிக் அறுவை சிகிச்சையை செய்து கொண்ட சித்தார்த்துக்கு உடல் பருமனால் ஏற்படக்கூடிய பிரச்னை குறித்து நன்கு தெரியும். இவருக்கு 56 வயது. இவர் ஒரு நடிகர். தடகள வீரரான இவர், சில வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தால் விளையாட்டை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. பின்பு அதிக எண்ணெய் பலகாரங்கள், துரித உணவு, மது ஆகியவற்றால் 188 கிலோ வரை எடை கூடினார்.

இதனால் நீரிழிவு, தைராய்டு, மூச்சு திணறல் பிரச்னை ஆகியவை ஏற்பட்டன.

"என்னால் படுத்தால் சுவாசிக்க முடியாது என்பதால் அமர்ந்து கொண்டே தூங்குவேன்," என்கிறார் முகர்ஜி. தற்போது அறுவை சிகிச்சைக்கு பிறகு 96 கிலோ எடையில் உள்ளார்.

இந்த உலகம் மிக அழகானது, நமது குடும்பத்தினருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம். எனவே சுயநலமாக, நான் நினைப்பதை உண்டு, உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தாமல் இருப்பதை நிறுத்த வேண்டும்." என்கிறார் முகர்ஜி.

"முகர்ஜியை போன்றோருக்கு பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை என்பது உயிர் காக்கும் சிகிச்சையாக உள்ளது. ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடல் எடை அதிகரிப்பதில் உள்ள ஆபத்து குறித்து அரசு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்." என்கிறார் செளபே.

உடல் பருமன் பிரச்னையை அரசு, நோயாக பார்க்க வேண்டும் என்ற செளபேவின் முயற்சி இன்னும் வெற்றியடையவில்லை.

அரசாங்கம் தொற்று நோய்களை கட்டுப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறது. வாழ்வியல் நோய்களுக்கு அரசாங்கத்திடம் பெரிதாக திட்டங்கள் இல்லை. அதேசமயம் இந்த உடல் எடை பிரச்னையை அரசு எதிர்கொள்ள வேண்டும் என்றால் அதற்கு அதிக செலவாகும். அது சற்று கடினமும்கூட என்கிறார் செளபே.

சில வருடங்களுக்கு முன்பு 'பாவ வரி' விதிப்பது குறித்து பேச்சுக்கள் எழுந்தன. அதாவது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களின் விலையை உயர்த்துவது ஒரு யோசனையாக முன்வைக்கப்பட்டது. எனவே மக்கள் இதனை குறைவாக வாங்குவார்கள் என்பதுதான் நோக்கம். ஆனால் இந்த திண்பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்களின் அழுத்தங்களால் இந்த வரி விதிக்கப்படவில்லை என்கின்றனர் சுகாதார நிபுணர்கள்.

புகைப்பிடித்தலை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளை போன்றே உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை உண்பதை தடுக்கவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்கிறார் ரவீந்திரன்.

முன்பு புகைப்படித்தல் பொது இடங்களில் அனுமதிக்கப்பட்டது. ஆனால் இப்போது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோல அதுகுறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்படுத்தப் படுகிறது.

அதேபோல உடல் எடை அதிகரித்தல் பிரச்னை குறித்தும் பரவலான விழிப்புணர்வு தேவை என்கிறார் ரவீந்திரன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: