பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: இந்தியாவில் விலைவாசி குறையுமா?

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் சரசரவென உயர்ந்துநிற்கும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த மத்திய அரசிடம் இருந்த ஒரேவழி பெட்ரோல், டீசல் விலை குறைப்புதான் என்றும் இந்த விலை குறைப்பு உடனடியாக நாடு முழுவதும் எல்லா நுகர்வோர் பொருட்களிலும் எதிரொலிக்கும் என்றும் சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ. 9.50, டீசல் விலையை லிட்டருக்கு ரூ.7, சிலிண்டர் ஒன்றின் விலையை ரூ.200 வரை குறைக்கும் அறிவிப்பை இந்திய அரசு நேற்று வெளியிட்டது.

இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் விலைவாசி கட்டுப்பாட்டை இழந்து உயர்ந்து, அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு வந்ததால், அங்கு பொருளாதார நெருக்கடி உண்டாகியுள்ளது. உலகின் பல்வேறு வளர்ந்த நாடுகளில் கூட விலைவாசி ஏற்றம் சாமானிய மக்களை சிரமப்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாக உணவுப் பொருட்கள், இதர நுகர்வோர் பொருட்கள் என எல்லா பொருட்களின் விலையும் அதிகரித்தது.

தற்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள விலை குறைப்பு ஒருபுறம் சாமானியர்களுக்கு பலன் தரும், அதேநேரம், இந்த விலை குறைப்பை ஏன் மத்திய அரசு கையில் எடுத்தது என பொருளாதார நிபுணர்களிடம் கேட்டோம்.

பிபிசி தமிழிடம் பேசிய முதலீட்டு ஆலோசகர் நாகப்பன், பெட்ரோல், டீசல் விலை குறைப்பால் உடனடியாக நுகர்வோர் பொருட்களின் விலை குறையும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார். '' தற்போது மத்திய அரசிடம் உள்ள ஒரே உடனடி தீர்வு இதுதான். கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் விலைவாசி உயர்ந்துள்ளது. cascading effect என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். பெட்ரோலின் விலை குறைவதால், காய்கறிகள், மளிகை பொருட்கள் என பல நுகர்வு பொருட்களின் விலையில் மாற்றங்கள் ஏற்படும். இந்த விலை குறைப்பு ஓரளவு விலைவாசியைக் கட்டுப்படுத்தும்,'' என்கிறார் நாகப்பன்.

மேலும், ''கடந்த முறை மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததால், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழந்ததாக கூறியிருந்தது. தற்போதும் அதேபோல விலை குறைப்பால், ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாயை இழக்கவுள்ளது. இதுபோன்ற இழப்பீடுகளை உடனடியாக சரிகட்ட முடியாது. ஆனால் சமீப காலங்களில் மத்திய அரசு பிற வரிகளை உயர்த்தியது. அந்த வரிகள் மூலம் வரும் வருவாய் ஓரளவு உதவும்,'' என்கிறார்.

பெட்ரோல் விலையை மேலும் சீரமைப்பது பற்றி மத்திய அரசு ஆலோசனை செய்யவேண்டும் என்கிறார் நாகப்பன். ''உஜ்வாலா திட்டத்தில் காஸ் சிலிண்டர் வாங்கியவர்களுக்கு ரூ.200 மானியம் தர மத்திய அரசு தீர்மானித்துள்ளது. அதேபோல, பெட்ரோல் விலையில், இருசக்கர வாகனம் வைத்துள்ளவர்களுக்கு மானியம் தருவதை பற்றி அரசு யோசிக்கலாம். நடுத்தர மக்கள்தான் விலைவாசி ஏற்றத்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதால், இந்த மானியத்தை அளித்தால், பலருக்கும் அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கு பணம் மிச்சப்படும். தற்போது பெட்ரோல் விலை குறைந்தால், அது உயர்தர வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் சென்று சேர்வதில் நியாயம் இல்லை,'' என்கிறார்.

இலங்கை போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவில் வருமா?

இலங்கையில் ஏற்பட்டுள்ளது போன்ற பொருளாதார நெருக்கடி இந்தியாவில் வருவதற்கு வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''இந்தியாவை இலங்கையுடன் ஒப்பிட முடியாது. இங்கு தொழில் செய்யும் அல்லது வேலைக்கு செல்லும் இளம் தலைமுறையினர் அதிகமுள்ளனர். அதோடு இவர்கள் பலரும் கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு தற்போது குடியேறிவருகின்றனர். இதனால், இவர்கள் பல பொருட்கள், வீடு, வாகனம் வாங்குவது என்ற சங்கிலியில் அடுத்துவரும் 15-20 ஆண்டுகளுக்கு இருப்பார்கள். இதனால், பொருளாதாரத்தில் நமக்கு பின்னடைவு ஏற்பட வாய்ப்பு குறைவு.''

கொரோனா பெருந்தொற்று மற்றும் ரஷ்யா-யுக்ரேன் போர் காரணமாக படிப்படியாக விலை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலையை குறைத்தே ஆகவேண்டிய சூழல் இந்தியாவில் நிலவுகிறது என்கிறார் சென்னைப் பொருளியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் மற்றும் பேராசிரியர் கே.ஆர். சண்முகம்.

''கடந்த எட்டு ஆண்டுகளில் இல்லாத அளவு, இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 7.7சதவீதமாக உயர்ந்தது. இதனை 6.95 சதவீதமாக குறைத்தால்தான் நாட்டின் பொருளாதார நிலை அபாய கட்டத்திற்குச் செல்வதை தடுக்கமுடியும். இதனால் தற்போது பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்திருக்கிறார்கள். இதேபோல விலை குறைப்பை எல்லா மாநிலங்களும் செய்யவேண்டும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது. அது உடனடியாக சாத்தியமா என்றால் சிரமம்தான். மத்திய அரசின் கடன் சுமை அதனை அழுத்துவதுபோல, மாநில அரசுகளும் கடனில் தவிக்கின்ற நிலைதான் இந்தியா முழுவதும் காணப்படுகிறது,''என்கிறார் சண்முகம்.

மேலும் கடன் சுமை பற்றி விவரித்த அவர், ''மத்திய அரசின் கடன் சுமை என்பது ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 40 சதவீதம்தான் இருக்கவேண்டும். ஆனால் தற்போது அது, சுமார் 60 சதவீதத்தை தாண்டியுள்ளது. அதுபோல, இந்தியாவின் மாநிலங்களின் கடன்சுமை அந்தந்த மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 20 சதவீதம்தான் இருக்கவேண்டும். ஆனால் சுமார் 30 சதவீதத்தை பல மாநிலங்கள் தொட்டுள்ளன. இதனால், விலை குறைப்பில் எல்லா மாநில அரசுகளின் பங்கு உடனே செய்யவேண்டும் என்பது சரியான யோசனை இல்லை,'' என்கிறார் சண்முகம்.

ஒட்டுமொத்தமாக நுகர்வோர் பொருட்களில் விலையை கட்டுக்குள் வைக்கவில்லை என்றால் என்ன நிலைமை ஏற்படும் என்பதற்கு இலங்கை சாட்சியாக தெரிகிறது என்று கூறும் சண்முகம், ''சாதாரண மக்களிடம் பணப்புழக்கம் இருக்கவேண்டும். அதுதான் அந்த நாட்டின் நிதிநிலையை சீராக வைத்திருக்க உதவும். தற்போது காஸ் சிலிண்டருக்கு மானியம் மத்திய அரசு தரப்போகிறது. இந்த மானியத்தை காரணமாக வைத்து, ஒரு சிலர் மீண்டும் காஸ் சிலிண்டர் வாங்குவதற்கு முன்வருவார்கள். இதுபோல ஒவ்வொரு சிறு பொருட்களிலும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்போது விலைவாசியும் கட்டுக்குள் வரும்,'' என்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: