You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிடிஆர். பழனிவேல் தியாகராஜன்: "பெட்ரோல், டீசல் வரி உயர்த்தும்போது ஒரு முறையாவது கேட்டீர்களா?"
பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தியபோது அது தொடர்பாக மாநிலங்களுடன் ஒரு முறை கூட கலந்தாலோசிக்காத மத்திய அரசு, இப்போது மாநிலங்கள் விதிக்கும் வரியை குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை என்று தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
21.05.2022 அன்று பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 8 மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ரூ. 6 என்ற அளவில் குறைக்கப்படும் என்று இந்திய நிதியமைச்சர் அறிவித்துள்ளார். இது தவிர சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்கும்போது ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வரை தலா ரூ. 200 மானியம் தரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநில அரசுகள் வரவேற்றாலும் அந்த கட்சி ஆட்சியிலும் கூட்டணியிலும் இல்லாத மாநில அரசுகள் ஆதரிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் மாநிலங்களின் தொடர் கோரிக்கைக்கு பிறகே மத்திய அரசு செவி சாய்த்துள்ளதாக தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார். ஆனாலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கை மக்கள் எதிர்கொண்டு வரும் சுமையை குறைக்காது என்று தெரிவித்துள்ளார் தமிழக நிதியமைச்சர். தமது நிலைப்பாட்டை விளக்கி அவர் விரிவான செய்திக்குறிப்பை பகிர்ந்திருக்கிறார். அதன் விவரம்:
2014ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை மத்திய அரசால் கடுமையாக உயர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், மத்திய அரசு இறுதியாக செவிசாய்த்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.2021ஆம் ஆண்டு நவம்பரில் இந்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியைக் குறைப்பதற்கு முன்பே, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, 2021ஆம் ஆண்டு ஆகஸ்டில் பெட்ரோல் மீதான மதிப்புக்கூட்டு வரியை குறைத்தது. அதன் மூலம் லிட்டருக்கு 3 ரூபாய் என்ற வகையில் மக்களுக்கு நிவாரணம் கிடைத்தது.
இதனால் மாநில அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 1,160 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும். இருந்தாலும் முந்தைய அரசாங்கத்தில் இருந்து வழிவழியாக வந்த நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்த வரி குறைப்பு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 2006-11 ஆண்டு ஆட்சிக் காலத்திலும் சாமானியர்களின் நலனுக்காக பெட்ரோல், டீசல் மீதான வரியை அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு குறைத்தது. மறுபுறம், கடந்த ஏழு ஆண்டுகளில் பெட்ரோல் மீதான மத்திய அரசின் வரிகள் கணிசமாக உயர்ந்துள்ளன. மத்திய அரசின் வருவாய் பன்மடங்கு அதிகரித்தாலும், அதற்கு நிகராக மாநிலங்களுக்கான வருவாய் அதிகரிப்பு ஏற்படவில்லை. ஏனென்றால், மாநிலங்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடிய அடிப்படை கலால் வரியைக் குறைத்த அதே நேரத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான செஸ் மற்றும் உப வரியை மத்திய அரசு உயர்த்தியது. 01.08.2014 அன்று மத்திய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 9.48 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 3.57 என்றும் இருந்தன.
2021ஆம் ஆண்டு நவம்பரில் மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகளைக் குறைப்பதற்கு முன்பு, பெட்ரோல் மீதான மத்திய அரசின் செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் உள்ளிட்ட வரி பெட்ரோல் மீது ரூ. 32.90 என்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 31.80 என்றும் இருந்தது. இது பெட்ரோல், டீசல் மீது முறையே ரூ. 27.90 மற்றும் ரூ. 21.80 என குறைக்கப்பட்டது. தற்போது மேலும் குறைத்து பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 19.90 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ. 15.80 ஆகியிருக்கிறது.
மத்திய அரசு வரிகளை குறைத்தாலும், 2014ஆம் ஆண்டை விட வரிகளின் தொகை பெட்ரோல் மீது லிட்டருக்கு ரூ. 10.42 மற்றும் டீசல் மீது லிட்டருக்கு ரூ 12.23 என்றே உள்ளது. எனவே, மத்திய அரசு தனது வரியை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ளது.
03.11.2021 அன்று மத்திய அரசு அறிவித்த வரி குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1,050 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. சமீபத்திய வரி குறைப்பு அறிவிப்பால் அந்த இழப்பு மேலும் ரூ. 800 கோடி ஆகப்போகிறது. இது ஏற்கெனவே கொோரனா பெருந்தொற்று நிவாரண நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள செலவினத்தை எதிர்கொண்டுள்ள மாநிலங்களின் நிதிநிலைமை மீது மிகப்பெரிய சுமையாகி அழுத்தத்தை ஏற்படுத்தும்.
இந்த அரசாங்கம் (தமிழ்நாடு அரசு) ஆட்சிக்கு வந்தபோது முந்தைய அரசாங்கத்தால் விளைந்த ஆபத்தான நிதி நிலையை எதிர்கொண்டு, கோவிட் நிவாரண நடவடிக்கைகளுக்காக கூடுதல் செலவினங்களைச் செய்த போதிலும், பதவியேற்ற சில மாதங்களிலேயே மக்களின் நலனுக்காக பெட்ரோல் மீதான வரிகளைக் குறைத்தது. வரி விதிப்பு அதிகாரங்களை குறைவாகப் பெற்றுள்ள போதும் தமிழ்நாடு மாநில மக்கள் மீதான வரிச்சுமையைக் குறைக்க முனைப்பான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.ஆனால், பெட்ரோல், டீசல் மீதான வரிகளை பலமுறை உயர்த்தியபோது, மத்திய அரசு ஒரு முறை கூட அது பற்றி மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசின் அதிகப்படியான வரி அதிகரிப்பு, தற்போது பகுதியளவு குறைக்கப்பட்டிருந்தாலும், அந்த நடவடிக்கை 2014ஆம் ஆண்டு விகிதங்களுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்தும் அதிகமாகவே உள்ளது. எனவே, மாநிலங்கள் அவற்றின் வரிகளைக் குறைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமாக இல்லை என்று பிடிஆர் பழனிவேல் ராஜன் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்