You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒமிக்ரான் BA.4 கொரோனா: தமிழ்நாட்டில் ஒருவருக்கு உறுதி
ஹைதராபாத்தை அடுத்து தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒருவருக்கு BA.4 கொரோனா என்ற புதியவகை கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். BA.4 என்பது ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையாகும்.
ஒமிக்ரான் திரிபை 'கவலைக்குரிய திரிபு' என்று உலக சுகாதார நிறுவனம் வகைப்படுத்தியுள்ளதால் BA.4 வகை கொரோனாவும் அந்த வகைப்பாட்டில் அடங்கும்.
சென்னை கிண்டியில் கொரோனா மருத்துவமனையாக செயல்பட்டு வந்த கிங்ஸ் மருத்துவமனையை முதியோர்களுக்கான சிறப்பு மருத்துவமனையாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது.
அந்த பணிகளை ஆய்வுசெய்ய வந்த அமைச்சர் சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழ்நாட்டில் புதிய வகை கொரோனா தொற்று ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
''செங்கல்பட்டு நாவலூர் பகுதியில் ஒருவருக்கு BA.4 கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும் சோதனை செய்துள்ளோம். இந்த புதிய வகை கொரோனா ஆப்பிரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பதிவாகியுள்ளது. சமீபத்தில், ஹைதராபாத்தில் ஒருவருக்கு இருந்ததை உறுதிசெய்தார்கள்.''
''இந்த கொரோனா தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு. இதுவரை தமிழகத்தில் ஒமிக்ரான் உள்பட, நான்கு வகை கொரோனா தொற்றுகள் மட்டுமே பதிவாகியுள்ளன. பிற மாநிலங்களில் இந்த புதியவகை தொற்று பரவியுள்ளதா என மத்திய அரசு தெளிவுபடுத்தவேண்டும்,''என்றார் அமைச்சர் சுப்பிரமணியன்.
BA.4 மற்றும் BA.5 வகை ஒமிக்ரான் தென்னாபிரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் பரவி வருவது உறுதியாகியுள்ளது. இவற்றால் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறதா என்று மிகவும் நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். இதுவரை அதன் தீவிரத் தன்மையிலோ, பரவும் தன்மையிலோ எந்த மாற்றத்தையும் காணவில்லை என்று கடந்த மாதம் உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை நோய் பரவலியல் வல்லுநர் டாக்டர் மரியா வான் கெர்க்கோவ் கூறியிருந்தார்.
ஆரம்ப காலத்தில் பரவத் தொடங்கிய ஒமிக்ரான் திரிபின் அளவுக்கு BA.4 வகை பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரியவில்லை. ஆனால், ஆரம்பகால ஒமிக்ரானை விடவும் அதிகம் பரவுவது போலத் தோன்றுகிறது என்று சென்று வாரம் அவர் தெரிவித்திருந்தார்.
முந்தைய வகை கொரோனா வைரசில் இருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட மரபணு பிறழ்வுகளால் உண்டாகும்போது புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு 'திரிபு' (variant) என்று அழைக்கப்படும்.
BA.4 என்பது ஒமிக்ரான் திரிபின் ஒரு வகையாகும். இது ஆங்கிலத்தில் 'sub-variant' என்று அழைக்கப்படுகிறது.
ஒமிக்ரான் திரிபு அதற்கு முந்தைய திரிபுகளான ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா போன்றவற்றை விடவும் குறைவான பாதிப்புகளையே உலகளவில் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
யுக்ரேனில் இருந்து வந்த மருத்துவ மாணவர்கள் நிலை என்ன?
யுக்ரேன் நாட்டில் மருத்துவம் பயின்று வந்த மாணவர்கள் போர் காரணமாக தமிழ்நாடு திரும்பியுள்ளதால், அவர்கள் இங்கு படிப்பை தொடர முடியுமா என செய்தியாளர்கள் கேட்டனர்.
''தமிழகத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் யுக்ரேனில் படித்த மாணவர்கள் படிப்பைத் தொடர முடியாது. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களுக்கும் யுக்ரேனில் இருந்து மாணவர்கள் திரும்பியுள்ளனர். அவர்கள் படிப்பை தொடர்வது பற்றி, மத்திய அரசுதான் முடிவு செய்யவேண்டும். இதில் தமிழ்நாடு அரசு தலையீடு செய்யமுடியாது. அந்த மாணவர்களுக்கு சீட் வழங்குவது பற்றி முடிவு எடுப்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது,''என்றார் அமைச்சர்.
தமிழ்நாடு திரும்பிய மாணவர்களின் பெற்றோர்கள் கடந்த இரண்டு வாரங்களாக சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்