மாசுபாட்டால் இறந்த லட்சக்கணக்கான இந்தியர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ரிப்போர்ட் சொல்வது என்ன?

வீசும் காற்றில் விஷம் பரவினால் வாழ்க்கை மோசமாகும் என்பது நீங்கள் அறிந்ததுதான். ஆனால், வீசும் காற்றே விஷமாக மாறினால் விளைவு எப்படி இருக்கும் என்பதை அண்மையில் வெளியான லான்செட் அறிக்கையின் தரவுகள் இதை நமக்கு புரியவைக்கின்றன.

சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடந்த 2019ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 23 லட்சம் உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில் 16 லட்சம் காற்று மாசுபாட்டாலும், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் நீர் மாசுபாட்டாலும் நிகழ்ந்தவை என்று தெரிவிக்கிறது லான்செட் அறிக்கை.

உலகம் முழுவதும் சுமார் 90 லட்சம் பேர் இறந்ததாக தெரிவிக்கும் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது என்ன? சுருக்கமாக பார்க்கலாம்.

  • சுற்றுச்சூழல் மாசுபாட்டை பொறுத்தவரை இந்தியாதான் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாகவே தொடர்கிறது. குறிப்பாக, ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் காற்று மாசுபாட்டால் உயிரிழக்கின்றனர். உலகம் முழுக்க ஆண்டுதோறும் சுமார் 90 லட்சம் உயிரிழப்புகள் நடைபெறுவதற்கு மாசுபாடுதான் காரணமாக இருக்கிறது என்று உலகளாவிய நோய்கள், காயங்கள் மற்றும் ஆபத்து காரணிகள் குறித்த ஆய்வின் (Global Burden of Diseases, Injuries and Risk Factors Study 2019) தரவுகள் தெரிவிப்பதையும் இந்த லான்செட் அறிக்கை குறிப்பிட்டது.
  • மக்களின் வீடுகளில் காற்று, நீர் ஆகியவை சுகாதாரமற்று இருப்பதால் ஏற்படும் உயிரிழப்புகள் வறுமையுடன் தொடர்புடையவை. அப்படியான உயிரிழப்புகள் இந்த முறை குறைந்துள்ளன என்றாலும், அதற்கு காரணம் தொழிற்சாலை மாசுகள், சுற்றுப்புற மாசுகள் மற்றும் நச்சு வாயு மாசு ஆகியவற்றின் அதிகரிப்புதான்.
  • 90 லட்சம் மொத்த உயிரிழப்புகளில், 67 லட்சம் உயிரிழப்புகளுக்கு காற்று மாசுபாடு காரணம் என்றால், 14 லட்சம் உயிரிழப்புகளுக்கு காரணம் நீர் மாசுபாடாக இருக்கிறது.
  • மாசுபாட்டால் நிகழும் உயிரிழப்புகளில் சுமார் 90 சதவீதம், குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உள்ள நாடுகளில்தான் நடைபெறுகிறது என்பதும் இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்த பட்டியலில் 23.6 லட்சம் உயிரிழப்புகளுள் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இதில் சீனா 21 லட்ச உயிரிழப்புகளுடன் இரண்டாம் இடம் வகிக்கிறது.
  • வழக்கமான மாசுபாட்டால் (நீர், நில, காற்று மாசுபாடுகள்) நிகழும் இழப்பைப் பொறுத்தவரை 2000 ஆம் ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.2% ஆக இருந்தது. பின்னர் இறப்புவிகிதமும் பொருளாதார இழப்புகளும் குறைந்துகொண்டே வந்தன. ஆனால், தற்போதும் கூட மாசுபாட்டால் ஏற்படும் இழப்பு என்பது இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1% ஆக தொடர்கிறது. 2000 - 2019க்கு இடைப்பட்ட காலத்தில், சுற்றுப்புற மாசுபாடுகள், வேதிப்பொருட்களால் நிகழும் மாசுபாடுகள் என புதியவிதமான நவீன மாசுபாடுகள் உருவாகின. இவற்றின் அதிகரிப்பால் தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில், 1% இழப்பு ஏற்படுகிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
  • கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விதமாக 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா மூலம் காற்று மாசுபாட்டை தடுக்க இந்தியா நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் முழுமையாக சரிசெய்ய முடியவில்லை என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
  • மேலும், "மாசுபாட்டுக்கான மூலங்களை குறைப்பதற்கான கருவிகள் மற்றும் முறைப்படுத்தல் ஆகியவற்றில் இந்தியா முன்னேறியிருக்கிறது. ஆனாலும், ஒரு மையப்படுத்தப்பட்ட முறைமை இல்லாததால், மாசுபாட்டைக் குறைக்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து பரவலாக்க முடியவில்லை.
  • "நாட்டின் 93% பகுதிகளில் மாசுபாடு, உலக சுகாதார நிறுவனத்தின் வழிமுறைகளில் குறிப்பிடப்பட்ட அளவுக்கு மேலேயே தொடர்கிறது" என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

GETTY IMAGES

  • உலகளாவிய மாசுபாட்டு தரவரிசைகளில் இந்திய நகரங்கள் முன்னிலை வகிக்கின்றன. வட இந்தியாவில் சுமார் 48 கோடிக்கும் அதிகமான மக்கள் 'உலகின் மோசமான மாசுபட்ட காற்றை' எதிர்கொள்கின்றனர் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று கடந்த ஆண்டு தெரிவித்திருந்தது.
  • அதேபோல, இந்திய தலைநகர் டெல்லியில் வாழும் மக்களின் ஆயுட்காலத்தில் இன்னும் 10 ஆண்டுகள் அதிகரிக்க வாய்ப்புண்டு. அதற்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியபடி, காற்றில் கனமீட்டருக்கு 10 மைக்ரோகிராம் நுண்துகள்கள் என்ற அளவில் இருக்க வேண்டும் என்றும் சிகாகோ பல்கலைக்கழகத்தின் ஆற்றல் கொள்கை நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவுறுத்தி இருந்தது. ஆனால், 2019இல் இந்தியாவின் சராசரி நுண்துகள்களின் அளவு கனமீட்டருக்கு 70 மைக்ரோகிராமாக இருந்தது. இதுதான் உலகிலேயே அதிகமும் கூட.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :