பேரறிவாளன் விடுதலை: வழக்கின் திசையை மாற்றிய 3 சம்பவங்கள்

    • எழுதியவர், ஆ. விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்ததன் மூலம் தம் தாய் அற்புதம்மாள் துணையோடு அவர் நடத்திய 31 ஆண்டுகால சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. 'எங்கள் பக்கம் இருந்த நியாயம்தான் எங்களுக்கு வலிமையைக் கொடுத்தது' என்கிறார் பேரறிவாளன். இந்த வழக்கின் பல்வேறு நிலைகளில் பேரறிவாளன் தரப்பின் நியாயத்துக்கு வலு சேர்க்கும் வகையில் நீதித்துறையும் காவல்துறையும் துணை நின்றதுதான் ஆச்சரியம்.

ஸ்ரீபெரும்புதூரில் 1991 ஆம் ஆண்டு மே மாதம் 21 ஆம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 91 ஆம் ஆண்டு ஜூன் 11 ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இதற்கடுத்த மூன்று நாள்களில் அதாவது ஜூன் 14 ஆம் தேதி நளினியும் அவரது கணவர் முருகன் என்கிற ஸ்ரீகரனும் செய்யப்பட்டனர். 'விசாரித்துவிட்டு காலையில் அனுப்பிவிடுகிறோம்' என காவல்துறை கூறியதால் அதனை நம்பி பேரறிவாளனை அனுப்பிவைத்த அற்புதம் அம்மாளுக்கு அடுத்துவந்த ஆண்டுகள் மிகக் கடுமையாகவே அமைந்தன. 'தனது மகன் நிரபராதி' என்பதை எடுத்துக் கூறுவதற்கான அனைத்து மேடைகளையும் அவர் பயன்படுத்திக் கொண்டார். ஏறக்குறைய கால் நூற்றாண்டுக்கும் மேல் மகனின் விடுதலை தொடர்பான சட்டப் போராட்டத்திலேயே நாள்களைக் கடத்தி வந்தார்.

ராஜீவ்காந்தி கொலையை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கைதான 26 பேருக்கும் கடந்த 1998 ஆம் ஆண்டு தூக்கு தண்டனையை வழங்கி தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து 1999 ஆம் ஆண்டு மேல்முறையீடு செயயப்பட்டபோது சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகியோருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியது. ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரது தூக்கு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இதர 19 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டணையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு ஆளுநருக்கு கருணை மனுக்களை அனுப்பினர். இந்த வழக்கில் கடந்த 2000 ஆம் ஆண்டு அப்போதைய தி.மு.க அரசு, நளினியின் தூக்குத் தண்டனையை மட்டும் ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு ஆளுநருக்கு பரிந்துரைக்க முடிவு செய்தது. அதன்படி, நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. கடந்த 2014 ஆம் ஆண்டு மூவரின் தூக்கு தண்டைனையும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

அதேநேரம், தன்னை விடுவிக்கக் கோரி பல்வேறு காலகட்டங்களில் உச்ச நீதிமன்றத்தில் பேரறிவாளன் முறையிட்டார். அதற்கு உறுதுணையாக மூன்று சம்பவங்கள் அமைந்தன. அதைப் பற்றிப் பார்ப்போம்.

சம்பவம் :1

சிறைக்கு வந்த கடிதம்

ராஜீவை கொன்ற மனித வெடிகுண்டு தாக்குதலுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகக் கூறி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் விடுதலைப் புலிகளின் போராட்டத்துக்கு தமிழ்நாடு இளைஞர்கள் பலரும் உணர்வுரீதியாக தங்களது ஆதரவைக் காட்டி வந்தனர். அந்த வகையில் இலங்கையில் இருந்து வந்த சிவராசன் என்பவரோடு பேரறிவாளனுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆனால், 'தான் வாங்கித் தந்த பேட்டரி எதற்காகப் பயன்படப் போகிறது என்ற உண்மையை பேரறிவாளன் அறிந்திருக்கவில்லை' என்கிறார்கள் அவரது வழக்குரைஞர்கள்.

இந்த வழக்கில், பேரறிவாளனின் வாக்குமூலத்தைப் பதிவு செய்த சி.பி.ஐ அதிகாரிகளும், ராஜீவ்காந்தியை கொல்வதற்காகத்தான் பேட்டரிகள் வாங்கப்பட்டதாகப் பதிவு செய்தனர். இதன் காரணமாகவே பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைத்தது. இந்நிலையில், எட்டு வருடங்களுக்கு முன்னால் வேலூர் சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு கடிதம் ஒன்று வந்துள்ளது. அந்தக் கடிதத்தை எழுதியவர் பேரறிவாளனுக்கு தூக்குத் தண்டனை கிடைக்கக் காரணமாக இருந்த முன்னாள் சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் ஐ.பி.எஸ். அந்தக் கடிதத்தில், உங்களை மரண தண்டனையில் இருந்து விடுவிக்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக அவர் கூறியிருந்தார்.

'எனக்கு வந்த கடிதத்துக்கு நன்றிக் கடிதம் எழுதுவதற்காக அமர்ந்தபோதுதான் இந்தக் கையொப்பம் பழக்கமானதாக இருக்கிறதே என யோசித்து உடனே எனது வழக்குரைஞர்களை அனுப்பினேன்' என இந்தியா டுடே ஏட்டுக்கு அளித்த பேட்டியில் பேரறிவாளன் பதிவு செய்துள்ளார். பேரறிவாளனுக்குக் கிடைத்த தண்டனையால் மிகவும் மன உறுத்தலில் இருந்த காரணத்தாலேயே சட்ட உதவிகளை செய்ய முன்வந்ததாக தியாகராஜன் குறிப்பிடுகிறார்.

சம்பவம்: 2

திசையை மாற்றிய வாக்குமூலம்

இதையே வீடியோ பதிவிலும் தெரிவித்த தியாகராஜன் ஐ.பி.எஸ், ' ஒன்பது வோல்ட் பேட்டரியை தான் வாங்கித் தந்ததாகப் பேரறிவாளன் தெரிவித்தார். ஆனால், அது எதற்காகப் பயன்படப் போகிறது என தனக்குத் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார். எதற்காகப் பயன்படப் போகிறது எனத் தெரியாது என அவர் கூறிய பகுதியை மட்டும் நீக்கிவிட்டேன். அவ்வாறு செய்யாமல் இருந்திருந்தால் இந்த வழக்கின் போக்கே மாறியிருக்கும்' என்றார்.

'' சிறையில் பேரறிவாளன் இருந்ததற்கு முக்கியக் காரணமே அந்த வாக்குமூலம்தான். அதனை தியாகராஜன் தவறாகப் பதிவு செய்ததால் சிறையில் பேரறிவாளன் இருந்தார். இதனை பிரமாணப் பத்திரமாகவே உச்ச நீதிமன்றத்தில் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதிலும், ' ராஜீவ்காந்தி கொல்லப்படப்போவது பற்றி பேரறிவாளனுக்குத் தெரியாது' என அவர் குறிப்பிட்டிருந்தார்.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தபோது இந்த ஏழு பேர் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த நீதியரசர் கே.டி.தாமஸ், ஓய்வுபெற்ற பிறகு இந்தத் தீர்ப்பை விமர்சித்துப் பேசினார். இந்தத் தீர்ப்பை வழங்கும்போது தங்களுக்குக் கடுமையான அழுத்தம் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். 'இது பிழையான தீர்ப்பு என்பதால் அதனைச் சரிசெய்ய வேண்டியது சமூகத்தின் பொறுப்பு' எனவும் கே.டி.தாமஸ் சுட்டிக் காட்டினார். இதையெல்லாம் அப்போதைய ஆளுநரின் கவனத்துக்கும் கொண்டு சென்றிருந்தோம்'' என்கிறார் பேரறிவாளனின் வழக்குரைஞர் சிவக்குமார்.

அடுத்ததாக, ராஜீவ்காந்தி படுகொலை வழக்கு தொடர்பாகப் பேட்டி கொடுத்த ஓய்வுபெற்ற சி.பி.ஐ அதிகாரி ரகோத்தமனும், பல்வேறு சந்தேகங்களை தெரிவித்திருந்தார். குறிப்பாக, 'ராஜீவ்காந்தியை கொல்லப் பயன்படுத்திய பெல்ட் பாமை தயாரித்தது யார் எனத் தெரியவில்லை' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த வெடிகுண்டுக்கு பேட்டரி வாங்கித் தந்ததாகத்தான் பேரறிவாளன் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. அதேநேரம், தியாகராஜனின் கருத்துக்கு எதிராகவும் ரகோத்தமன் பேசியிருந்தார்.

கலங்கவைத்த மரணம்

இந்தச் சூழலில், பேரறிவாளனைக் கலங்கவைத்த சம்பவம் ஒன்றும் நடந்தது. அது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த செங்கொடி என்பவரின் மரணம். பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒன்பதாம் தேதி தூக்கிலிடுவதற்கான நேரமும் குறிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகளும் அமைப்பினரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். காஞ்சிபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற ஓரிக்கை கிராமத்தைச் சேர்ந்த செங்கொடி, திடீரென தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

'என்னுடைய உடல் மூன்று தமிழர்களின் உயிர்காக்கப் பயன்படும் என்பதால் செல்கிறேன்' என அவர் எழுதியிருந்த கடிதமும் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. செங்கொடியின் மரணத்தால் ஏற்பட்ட கொந்தளிப்பு, மூவரின் தூக்குத் தண்டனையை நிறுத்தி வைத்தது. செங்கொடியின் தியாகத்தை நினைவுகூறும் வகையில் தனது ஜோலார்பேட்டை இல்லத்துக்கு அவரது பெயரை வைத்துள்ள பேரறிவாளன், செங்கொடிக்கு தொடர்ந்து அஞ்சலி செலுத்தவும் தவறுவதில்லை.

சம்பவம்: 3

எரவாடா சிறைக்கு ஆர்.டி.ஐ

இதன் தொடர்ச்சியாக, பேரறிவாளனுக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய ஒன்றாக நடிகர் சஞ்சய் தத்தின் வழக்கு அமைந்தது. மும்பை தொடர் வெடிகுண்டு வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மும்பையில் உள்ள எரவாடா சிறையில் சஞ்சய் தத் அடைக்கப்பட்டிருந்தார். அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவர் நிராகரித்த போதும், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு அவரை விடுதலை செய்தது. அதாவது, முன்கூட்டியே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

'எந்த விதியைப் பயன்படுத்தி சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்?' என்பதை அறியும் வகையில் தகவல் உரிமைச் சட்டத்தின்கீழ் சிறை நிர்வாகத்துக்கு அவர் விண்ணப்பித்தார். 'இதற்குப் பதில் அளிக்க முடியாது' என சிறை நிர்வாகம் தெரிவித்தால் மாநில தகவல் ஆணையத்தின் மீதும் குற்றம்சுமத்தி மும்பை உயர் நீதிமன்றத்தில் பேரறிவாளன் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. 'சி.பி.ஐ அமைப்பால் விசாரிக்கப்பட்ட வழக்கில் முன்கூட்டியே சஞ்சய் தத் விடுதலை செய்யபட்டது தொடர்பான தகவல் கிடைத்தால் தனது சட்டரீதியான போராட்டத்துக்கு அது பயன்படும்' எனவும் பேரறிவாளன் நினைத்தார்.

எது எப்படியிருப்பினும், 31 ஆண்டுகாலமாக நடந்து வந்த சட்டப் போராட்டத்தின் முடிவில் பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். அவரது விடுதலைக்கு அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதற்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் அறப்போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். தனது விடுதலை தொடர்பாக ஜோலார்பேட்டையில் பேட்டியளித்த பேரறிவாளன், 'எனது குடும்ப உறவுகளின் பாசம்தான் என்னை இந்தளவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. செங்கொடியின் தியாகம், ஐ.பி.எஸ் அதிகாரி தியாகராஜனின் வாக்குமூலம், நீதியரசர்கள் கிருஷ்ணய்யர், கே.டி.தாமஸ் ஆகியோரால்தான் நான் இங்கு நிற்கிறேன்' எனக் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: