You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வீர் மஹான்: WWE-ல் மிரட்டும் இந்திய வீரர் - யார் இவர்?
- எழுதியவர், ஹர்ஷல் ஆகுடே
- பதவி, பிபிசி மராத்தி செய்தியாளர்
ஒரு காலத்தில் இந்தியாவில் கிரிக்கெட்டுடன் கூடவே WWE மற்றும் WWF நிகழ்ச்சிகள் மிகவும் பிரபலமாக இருந்தன.
நீங்கள் 90ஸ் கிட்ஸாக இருந்தால் உங்களுக்கு அண்டர்டேக்கர், கேன், ஜான் சீனா, தி ராக் ஆகியோர் குறித்து எந்த அறிமுகமும் தேவையில்லை.
WWE-ன் சூப்பர் ஸ்டார்கள் இவர்கள்.
அதன்பின் இந்தியாவின் சார்பாக 'தி கிரேட் காலியும்' WWE இல் கலக்கினார்.
தி கிரேட் காலி, மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இப்போது இந்த பட்டியலில் வீர் மஹானின் பெயரும் சேர்ந்துள்ளது.
வீர் மஹான் பற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது. WWE-க்குள் நுழைந்த பிறகு வீர் மஹானின் இந்திய தோற்றம் குறித்தும் ஸ்டைல் குறித்தும் பலர் பேசி வருகின்றனர்.
யார் இந்த வீர் மஹான்? அவர் எப்படி WWE-க்குள் வந்தார்?
வீர் மஹானின் உண்மையான பெயர் ரிங்கு சிங் ராஜ்புத். அவர் உத்தரபிரதேசத்தின் ரவிதாஸ் நகர் மாவட்டத்தில் உள்ள கோபிகஞ்சில் 1988 ஆகஸ்ட் 8 ஆம் தேதி பிறந்தார்.
ரிங்கு சிங்கின் தந்தை டிரக் டிரைவராக பணிபுரிந்தார். இவருக்கு 9 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஒருவர் ரிங்கு சிங் ராஜ்புத். சிங் குடும்பம் கோபிகஞ்சில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசிக்கிறது.
சிறுவயதில் இருந்தே விளையாட்டில் ஆர்வம் கொண்ட ரிங்கு மல்யுத்தத்திலும் ஈடுபட்டார்.
பேஸ்பாலில் வேகம்
ரிங்கு சிங் பள்ளி நாட்களில் ஈட்டி எறியும் விளையாட்டிலும் ஈடுபட்டார். தேசிய அளவிலான ஜூனியர் பிரிவு ஈட்டி எறிதலில் அவர் பதக்கம் வென்றுள்ளார். அதன் பிறகு லக்னெளவில் உள்ள குரு கோவிந்த் சிங் விளையாட்டுக் கல்லூரியில் சேர்ந்தார்.
2008 இல் ரிங்கு, இந்திய ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'தி மில்லியன் டாலர் ஆர்ம்' நிகழ்ச்சியில் பங்கேற்றார். வேகமாக பேஸ்பாலை எறியும் வீரர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். இது பேஸ்பாலில் ஒரு திறமை வேட்டை நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சியில், ரிங்கு சிங்கிற்கு தனது ஈட்டி எறிதல் அனுபவம் நன்கு கை கொடுத்தது. ரிங்கு சிங் அதற்கு முன் பேஸ்பால் விளையாடியதே இல்லை. ஆயினும் தனது வலிமையான உடல் மற்றும் வேகம் காரணமாக, அவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற்றார்.
இந்த நிகழ்ச்சியில் ரிங்கு சிங் மணிக்கு 87 மைல் அதாவது 140 கிமீ வேகத்தில் பேஸ் பாலை எறிந்து முதலிடத்தை கைப்பற்றினார். இதை மையமாக வைத்து ஒரு படமும் உருவாகியுள்ளது.
இதன் பிறகு ரிங்கு சிங்கின் பேஸ்பால் மீதான ஆர்வம் அதிகரித்தது. அவர் பேஸ்பால் விளையாட்டை தொழில் ரீதியாக தொடர்வதற்காக அமெரிக்கா சென்றார். அங்கு அவர் பல்வேறு பேஸ்பால் அணிகளில் விளையாடினார். இறுதியில் அவர் அமெரிக்காவின் தொழில்முறை பேஸ்பால் அணியான பீட்டர்ஸ்பர்க் பைரேட்ஸ் உடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதில் அவருக்கு வெற்றி கிடைத்தது.
தொழில்முறை அமெரிக்க பேஸ்பால் அணியில் விளையாடிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் ரிங்கு சிங் பெற்றார். மேலும், ரிங்கு சிங் தனது பேஸ்பால் வீசும் வேகத்தை மணிக்கு 87 மைல்களில் இருந்து மணிக்கு 90 மைல்களாக உயர்த்தினார். அவர் 2009 முதல் 2016 வரை உலகெங்கிலும் பல லீக்குகளில் பங்கேற்றார். அவரது ஆட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது.
2018 இல், ரிங்கு சிங் பேஸ்பால் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்றார். அதன் பிறகு தொழில்முறை மல்யுத்தத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். 2018 இல் அவர் WWE உடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
இந்திய வீரர் செளரவ் குஜ்ஜருடன் இணைந்து 'தி இண்டஸ் ஷேர்' என்ற அணியை உருவாக்கினார். அவர்கள் ஒன்றாக WWE NXT இல் பங்கு பெற்றனர். ஆரம்ப கட்டத்தில், ரிங்கு சிங் தனது இயற்பெயரான ரிங்கு என்பதன் மூலமே WWE இல் பிரபலமானார்.
அவரது அணியில் ஜிந்தர் மஹால் என்ற மற்றொரு உறுப்பினர் சேர்ந்தார். அந்த நேரத்தில் வீர் என்ற பெயரை ஏற்றுக்கொண்டார் ரிங்கு. அதன்பிறகு அதே பெயரில் பல நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
வீர், ஷாக்கி மற்றும் ஜிந்தர் ஆகியோர் அடங்கிய அணி தொடர்ச்சியாக 12 போட்டிகளில் வெற்றி பெற்றது. ஆனால் 2021 இல் வீர், சில காரணங்களால் தனது அணியிலிருந்து பிரிந்தார். அவர் ஒரு சுயாதீன மல்யுத்த வீரராக WWE ராவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டார். இம்முறை தன் பெயரை வீர் மஹான் என்று மாற்றிக்கொண்டார்.
வீர் மஹானின் துருப்புச் சீட்டு என்ன?
ஸ்மார்ட்போன்கள் இல்லாத காலத்தில், WWE வீரர்கள் சீட்டுக் கட்டுகள் (WWE cards) மூலம் அறியப்பட்டனர். இந்த சீட்டில் WWE மல்யுத்த வீரரின் உயரம், எடை போன்ற தகவல்கள் இருக்கும்.
வீர் மஹானின் துருப்புச் சீட்டு என்ன சொல்கிறது? வீர் மஹானின் வலிமையான உடலைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம். அவரது உயரம் 6 அடி 4 அங்குலம். எடை 125 கிலோ.
WWE நிகழ்ச்சியில், வீர் மஹான் தோன்றும்போது தோள் வரை நீண்டுள்ள தலைமுடி, கருமையான கண்கள், நீண்ட தாடி, நெற்றியில் சந்தனம் என அவரது ஆளுமை இன்னும் பிரமாண்டமாகத் தெரிகிறது.
அவரது நெற்றியில் காணப்படும் பாரம்பரிய இந்திய சந்தனம், அவரது தோற்றத்தின் சிறப்பம்சமாகும். அவரது முன்னாள் கூட்டாளி செளரவ் குஜ்ஜரும் நெற்றியில் சந்தனம் பூசிக் கொள்வார்.
அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்க்கும் வகையில் வீர் மஹானின் மார்பில் 'மா' (அம்மா) என்ற வார்த்தை பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளது. அவர் கழுத்தில் ருத்ராட்ச மணிகள் அணிகிறார். கருப்பு ஆடைகளை உடுத்துகிறார். இந்த தோற்றத்தில் அவர் மிகவும் வித்தியாசமாகத் தெரிகிறார்.
வீர் மஹான் ஏப்ரல் 4 ஆம் தேதி WWE இல் தனது இலக்கை நோக்கி அடியெடுத்து வைத்தார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், WWE Raw வில் வீர் மஹான் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. அவர் குறித்து விரிவாக விளம்பரமும் செய்யப்பட்டது. இறுதியாக, ஏப்ரல் 4 ஆம் தேதி வீர், போட்டி வளையத்திற்குள் நுழைந்தார். இந்தப் போட்டியில் வீர் மஹான், தந்தை-மகன் ஜோடியான ரே மற்றும் டொமினிக் மிஸ்ட்ரியோவை தோற்கடித்தார். இந்த போட்டி குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்