கோவேக்சின் உட்பட 2 கோவிட் தடுப்பூசிகளை 12 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு பயன்படுத்த இந்தியாவில் அனுமதி

இந்தியாவில் கொரோனா தொற்றுகள் சற்று அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு கோவிட் தடுப்பூசிகளை 12 வயதுக்கு குறைந்த சிறாருக்குப் பயன்படுத்த இந்தியா அனுமதி அளித்துள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியை, 6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கும் பயன்படுத்த அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மான்டவியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசி 12-18 வயதுடையோருக்கும், பெரியவர்களுக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமின்றி மேலும் 2 தடுப்பூசிகளுக்கும் அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 5 - 12 வயது வரையிலான சிறார்களுக்கு கோர்பிவாக்ஸ் (Corbevax) தடுப்பூசியை செலுத்தவும் 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு சைடஸ் ( Zydus) தடுப்பு மருந்தை செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதில், கோர்பிவாக்ஸ் ஏற்கெனவே 12-14 வயதுடையோருக்கு தற்போது செலுத்தப்பட்டு வருகிறது.

12 வயதுக்கு உட்பட்ட சிறாருக்கு பயன்படுத்துவதற்கு இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பதன் பொருள், உடனே இந்தியாவில் 12 வயதுக்கு உட்பட்டோருக்கு இந்த தடுப்பூசிகள் செலுத்துவது தொடங்கிவிடும் என்பது அல்ல. தடுப்பு மருந்துகளுக்கான தேசிய நுட்ப ஆலோசனை குழுவின் அனுமதி கிடைத்த பிறகே தடுப்பூசி செலுத்துவது தொடங்கும்.

இதுவரை இந்தியாவில் 187 கோடி டோஸ் கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 10 நாள்களில் இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை சிறிதளவு உயர்ந்துள்ளது. தினசரி தொற்றுகள் தற்போது ஏறத்தாழ 2,500 என்ற அளவில் உள்ளது. இதில் கிட்டத்தட்ட சரிபாதி டெல்லியில் நிகழ்கிறது.

இந்தியாவில் வயது வந்தோரில் 80 சதவீதம் பேருக்கு இரண்டு டோஸ் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுவிட்டது. 99 சதவீதம் பேருக்கு மேல் ஒரு டோஸ் தடுப்பூசியாவது செலுத்திக்கொண்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 10ம் தேதி முதல் இந்தியாவில் முன்னெச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் டோசும் குறிப்பிட்ட சிலருக்கு செலுத்தப்படுகிறது. அதுவரை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்த நிலையில் ஜனவரி மாதம் முதல் 15 வயது முடிந்தவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. பிறகு 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது.

இந்தியா இதுவரை 9 கோவிட் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதில் 5 தடுப்பூசிகள் இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டவை. ஆனால், கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள்தான் பரவலாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

எந்தெந்த தடுப்பூசிகளை இந்தியா பயன்படுத்துகிறது?

தற்போது கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக் வி, கோர்பிவேக்ஸ் ஆகியவற்றை இந்தியா பொது தடுப்பூசி நடவடிக்கைக்கு பயன்படுத்துகிறது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசிகளில் 81 சதவீதம் கோவிஷீல்டு தடுப்பூசிதான்.

பிப்ரவரி மாதம் ரஷ்யத் தயாரிப்பான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் ஒரு அங்கமான ஸ்புட்னிக் லைட்டுக்கு அவசரப் பயன்பாட்டு அனுமதி வழங்கியது இந்தியா.

டிசம்பர் மாதம் சீரம் இன்ஸ்டிடியூட்டின் கோவோவேக்ஸ் மற்றும் பயலாஜிகல் இ நிறுவனத்தின் கோர்பிவேக்ஸ் ஆகிய தடுப்பூசிகளுக்கு அவசரப் பயன்பாட்டு அனுமதி வழங்கியது.

உலகின் முதல் டி.என்.ஏ. தடுப்பூசியான சைக்கோவ்-டி தடுப்பூசிக்கும் இந்தியா அனுமதி வழங்கியது. சைடஸ் நிறுவனம் உருவாக்கிய இந்த தடுப்பு மருந்து இன்னும் பயன்பாட்டுக்கு கிடைக்கவில்லை.

ஒரே டோசில் பயன்படுத்தக்கூடிய ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசிக்கும் இந்தியா அனுமதி வழங்கியது. பயலாஜிகல் இ நிறுவனம் செய்துகொண்ட சப்ளை ஒப்பந்தம் மூலமாக இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இந்திய மருந்து நிறுவனமான சிப்லா மூலமாக மாடர்னா தடுப்பூசியை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இந்த இரண்டு தடுப்பூசியும் இந்தியாவில் எப்போது கிடைக்கும் என்பது தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :