You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னை ரயில் விபத்து: "சில நொடிகளில் ரயில் நடைமேடை மீது மோதியது"
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடை தண்டவாளத்தில் வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த புறநகர் மின்சார ரயில் நடைமேடை மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த ரயிலின் இரண்டு பெட்டிகள் சேதம் அடைந்தன. நல்வாய்ப்பாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
சென்னை புறநகர் ரயில் சேவை, வழக்கமாக விடுமுறை நாளில் பயணிகளின் எண்ணிக்கையை பொறுத்து இயக்கப்படும். அந்த வகையில் இன்று தாம்பரத்திலிருந்து சென்னை பீச் வரை இயங்கக் கூடிய புறநகர் மின்சார ரயில், பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து கடற்கரை ரயில் நிலையத்துக்கு மாலை 4.25 மணியளவில் வந்தது. அப்போது திடீரென அந்த ரயில் தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டு முதலாவது நடைமேடையில் ஏறி அங்குள்ள கட்டுமானம் மீது மோதி நின்றது.
இந்த சம்பவம் நடந்தபோது ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அவ்வளவாக இல்லை. இதனால், யாருக்கும் எந்த பாதிப்போ காயமோ ஏற்படவில்லை. இந்த ரயிலை இயக்கிய ஊழியரும் காயமின்றி தப்பினார். அதே சமயம், ரயிலின் இரண்டு பெட்டிகள் மற்றும் ரயில் மோதிய கட்டடத்தில் இருந்த கடைகள் சேதம் அடைந்தன.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சில பயணிகள், "ரயில் மெதுவாகத்தான் வந்தது. ஆனால், திடீரென அதன் ஓட்டுநர் நடைமேடையில் இருந்த பயணிகளை நோக்கி ஓரமாக விலகும்படி கத்திக் கொண்டிருப்பதை பார்த்தோம். நடைமேடை முடிவுக்கு வந்த வேளையில் ரயில் கட்டுப்பாட்டை இழந்ததால் ஓட்டுநர் கீழே குதித்தார். ஒரு சில நொடிகள்தான். அதற்குள்ளாக ரயில் நடைமேடை மீது ஏறி எதிரே உள்ள இடத்தில் மோதி நின்றது," என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில், ரயில் விபத்து குறித்து சென்னை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த விபத்து எதனால், எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருவதாக தெற்கு ரயில்வே மக்கள் தொடர்பு அலுவலர் ஏழுமலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக துறை ரீதியாக விசாரிக்க குழு அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் வழக்கமாக வேலை நாட்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கூட்டம் இல்லை. இதனால், அங்கு பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில் நடைமேடை மீது மோதியதால் அதை அப்புறப்படுத்தி தண்டவாளத்தை சீர்படுத்தும் பணிகள் முழு வீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளதாக மக்கள் தொடர்பு அதிகாரி ஏழுமலை கூறியுள்ளார்.
இந்த நிலையில், மின்சார ரயில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்து நடைமேடை மீது மோதியதாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஆனால், பணிமனையில் பராமரிப்பு முடிந்து பரிசோதனை செய்த பிறகே அந்த ரயில், நிலையத்துக்கு வந்திருக்க வேண்டும் என்று கூறும் ரயில்வே அதிகாரிகள், அது பிரேக் பிடிக்காமல் இருந்தது எப்படி என்பது குறித்தும் அதை இயக்கியவர் கவனக் குறைவால் இருந்தாரா என்பது குறித்தும் விசாரித்து வருவதாக தெரிவித்தனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்