You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரம்: கர்நாடக அமைச்சர் ஈஷ்வரப்பா மீது எஃப்.ஐ.ஆர் - பதவிக்கு சிக்கல்
- எழுதியவர், இம்ரான் குரேஷி
- பதவி, பிபிசி ஹிந்தி
கர்நாடக மாநிலத்தில் அரசு ஒப்பந்ததாரர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், அம்மாநில ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் கே.எஸ்.ஈஷ்வரப்பா மீது, குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் பசவராஜ் பொம்மை அரசாங்கத்தில் அமைச்சராக தொடர்வாரா, இல்லையா என்பது குறித்து, பாஜக தலைமை முடிவெடுக்க உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சர் ஈஷ்வரப்பா தான் தன்னுடைய தற்கொலைக்குக் காரணம் என, ஊடகத்தினர் சிலருக்கு வாட்சப்பில் தகவல் அனுப்பிவிட்டு, பெல்காவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல், ஹோட்டல் ஒன்றில் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மார்ச் மாதம் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த சந்தோஷ் பாட்டீல், பெல்காவி மாவட்டத்தில் உள்ள ஹிண்டல்கா ஊராட்சியில் சாலை பணிகளுக்கு 4 கோடி ரூபாயை விடுவிக்க அமைச்சர் ஈஷ்வரப்பா "40 சதவீத கமிஷன் கேட்டதாக" பிரதமர் நரேந்திர மோதி மற்றும் மற்ற தலைவர்களிடம் புகார் அளித்துள்ளதாக தெரிவித்தார்.
"சந்தோஷ் பாட்டீல் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பதிவுகள் எனக்குக் கிடைத்துள்ளன. அதனடிப்படையில், சந்தோஷ் பாட்டீல் மற்றும் ஒரு தொலைக்காட்சி சேனல் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்துள்ளேன். இதுதொடர்பாக, நீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியதன் காரணமாக, சந்தோஷ் பாட்டீல் பதற்றமடைந்து, தற்கொலை செய்துகொண்டிருப்பார் என நான் சந்தேகிக்கிறேன். இது என்னுடைய அனுமானம்" என ஈஷ்வரப்பா தனது சொந்த ஊரான ஷிவமோகாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த தற்கொலை வழக்கின் எஃப்.ஐ.ஆரில் அவர் பெயர் இடம்பெற்றிருந்தும், ஈஷ்வரப்பா பதவி விலக மறுத்துள்ளார். முன்னதாக, இன்று இரவு தான் பெங்களூருவுக்கு திரும்பி, முதலமைச்சர் பசவராஜ் பொம்மையை சந்திக்கவுள்ளதாக தெரிவித்த அவர், "நான் பதவி விலக வேண்டும் என, முதலமைச்சர் கூறினால் நான் அவ்வாறே செய்வேன்" என தெரிவித்தார்.
மங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, தான் பெங்களூருவுக்குத் திரும்ப உள்ளதாக தெரிவித்தார். ஈஷ்வரப்பா அமைச்சர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கை குறித்து முடிவெடுப்பதற்கு முன், தான் ஈஷ்வரப்பாவை நேரடியாக சந்திக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த வழக்கு தொடர்பாக நியாயமான விசாரணை நடத்தப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார்.
எனினும், பாஜக வட்டாரங்கள் பிபிசி இந்தியிடம் கூறுகையில், "எங்கள் கட்சியில் மற்ற வழக்குகளில் சிக்குபவர்கள் பதவி விலகுவது குறித்து தலைமை முடிவுகளை எடுப்பதுபோன்றே, இந்த விவகாரத்திலும் ஈஷ்வரப்பா பதவி விலக வேண்டுமா என்பது குறித்து பாஜக தலைமையே முடிவெடுக்கும். ஈஷ்வரப்பாவுக்கு எதிரான இந்த குற்றச்சாட்டுகள் சிறிதுகாலத்திற்கு முன்பே முன்வைக்கப்பட்டவை, சந்தோஷ் பாட்டீலுக்கு எதிராக ஈஷ்வரப்பா அவதூறு வழக்குப் பதிவு செய்தது, தற்கொலை குறிப்பு ஏதும் இல்லாதது போன்ற அனைத்து கோணங்களையும் பாஜக தலைமை கருத்தில் கொள்ளும்" என்றனர்.
இதுதவிர, 1980களில் பாஜகவை கட்டமைத்த பிற பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நால்வர் அணியில் ஒருவராக ஈஷ்வரப்பா உள்ளார். மற்ற மூவர் ஹெச்.என். ஆனந்த் குமார், பி.எஸ்.எடியூரப்பா மற்றும் டி.எஸ்.ஷங்கர் மூர்த்தி ஆகியோர்.
ஊழலே முதன்மை பிரச்னை
முக்கியமாக, அந்த ஒப்பந்ததாரர் "அரசு ஒப்புதல் வழங்காமலேயே சாலை பணிகளை மேற்கொண்டார். அவர் குற்றச்சாட்டு எழுப்பிய பிறகு அரசு மூத்த அதிகாரி இதுகுறித்து விசாரித்தார். அதில், சாலை பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது" என்று ஈஷ்வரப்பா கூறும் வாதத்தையும் பாஜக தலைமை கருத்தில் கொள்ளும்.
ஆனால், சாலை பணிகளுக்கு அனுமதிக்கான அனைத்து நடைமுறைகளையும் உறுதி செய்ததாகவும், அதனடிப்படையில் பணிகளை தொடங்கவும் அதனை நிறைவு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்பது சந்தோஷ் பாட்டீல் மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது. அதன்படி, சந்தோஷ் பாட்டீல் பைனான்சியர்களிடமிருந்து கடன் பெற்று, ஹிண்டல்கா ஊராட்சியில் 108 சாலை பணிகளை நிறைவு செய்துள்ளார். மேலும், இந்த பணிகள் முறைப்படி நடக்க அவர் "40 சதவீத கமிஷன்" வழங்க வேண்டும் என்பதும் குற்றச்சாட்டாக உள்ளது.
2021, ஜூலை மாதத்தில் கர்நாடகா அரசு ஒப்பந்ததாரர்கள் சங்கம் பிரதமர் நரேந்திர மோதிக்கு அனுப்பிய நீண்ட கடிதத்திலும், சந்தோஷ் பாட்டீல் எழுப்பிய குற்றச்சாட்டு எதிரொலித்தது. "அனைத்துப் பணிகளுக்கும் 40 சதவீத கமிஷன் வழங்க வேண்டும் என சில அமைச்சர்கள் கேட்பதாக" அச்சங்கத்தின் தலைவர் டி கெம்பன்னா பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.
இந்த புகாருக்கு பிரதமர் அலுவலகத்தில் இருந்து எந்த பதிலும் வராததால், 2021 நவம்பரில் ஊடகங்களுக்கு இக்குற்றச்சாட்டுகளை அச்சங்கம் வெளியிட்டது. "இது தொடர்பாக நாங்கள் முதலமைச்சருக்கு ஆறு கடிதங்கள் வழங்கியுள்ளோம். ஆனால், அவர் அமைதியாகவே இருக்கிறார்" என கெம்பன்னா கூறினார்.
இந்த குற்றச்சாட்டுகள், பாஜகவை விமர்சிக்க எதிர்க்கட்சியான காங்கிரஸுக்கு வாய்ப்பாக அமைந்துள்ளது. 2018 சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசாங்கத்தை "10 சதவீத கமிஷன் சர்கார் (அரசு)" என, பிரதமர் நரேந்திர மோதி விமர்சித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் சித்தராமய்யா மற்றும் கர்நாடக காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையிலான காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள், ஈஷ்வரப்பாவை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என, இன்று ஆளுநர் தவார் சந்த் கெலாட்டிடம் முறையிட்டனர்.
வாட்சப் தகவல் ஆதாரமா?
ஈஸ்வரப்பாவின் இறுதி வாதம் தெள்ளத்தெளிவாக உள்ளது. "கையெழுத்திடப்பட்ட எந்த தற்கொலை குறிப்பும் இவ்வழக்கில் கிடைக்கவில்லை. அவருடைய செல்போனிலிருந்து அனுப்பப்பட்ட வாட்சப் தகவல் தான் உள்ளது. யாருடைய செல்போனிலிருந்தும் யார் வேண்டுமானாலும் தகவல் அனுப்பலாம்," என அவர் தெரிவித்துள்ளார்.
சந்தோஷ் பாட்டீலின் செல்போனிலிருந்து அனுப்பப்பட்ட வாட்சப் தகவலையும், 2017ஆம் ஆண்டில் துணை காவல் கண்காணிப்பாளர் எம்.கே.கணபதியின் தற்கொலையில், அவரின் "கையெழுத்திடப்பட்ட" "தற்கொலைக் குறிப்பில்" அப்போதைய காங்கிரஸ் அரசின் உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜை குற்றம்சாட்டியதையும் ஈஷ்வரப்பா வேறுபடுத்திக் காட்டுகிறார்.
அப்போது பாஜக நடத்திய பிரசாரம் காரணமாக கே.ஜே.ஜார்ஜ் அமைச்சர் பதவியிலிருந்து பதவி விலகினார். பின்னர், அந்த வழக்கிலிருந்து நீதிமன்றம் மற்றும் விசாரணை ஆணையத்தால் அவர் விடுவிக்கப்பட்டதையடுத்து, 2013-2018 காங்கிரஸ் அரசில் அவர் மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.
முன்னாள் அரசு கூடுதல் வழக்கறிஞரும் காங்கிரஸ் சட்ட அணியின் தலைவருமான ஏ.எஸ்.பொன்னன்னா கூறுகையில், "வாட்சப் தகவலானது ஒரு மின்னணு சாட்சியம். மேலும் செல்லுபடியாகக்கூடிய மின்னணு சாட்சியம்" என்றார். (ஒரு நபரின் கொலை வழக்கில், அவருக்கு நிச்சயித்த பெண்ணும் அப்பெண்ணின் காதலரும் சதிசெய்த வழக்கில், எஸ்எம்எஸ் குறுந்தகவல் செல்லுபடியாகக்கூடிய சாட்சியம் என்று பெங்களூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது).
பெயர் தெரிவிக்க விரும்பாத காவல் துறை அதிகாரி ஒருவர், பிபிசி இந்தியிடம் பேசுகையில், "சந்தோஷ் பாட்டீலின் உறவினரான பிரசாந்த் அளித்த புகாரின் பேரில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முதல் நபராக ஈஷ்வரப்பா மீது பதிவு செய்யப்பட்டுள்ளது" என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்