You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆபரேஷன் கஞ்சா வேட்டை: விற்பனை எப்படி நடக்கிறது? போலீஸ் எங்கே பாய்கிறது? எங்கே பாயவேண்டும்? பிபிசி கள ஆய்வு
- எழுதியவர், ஆ.விஜயானந்த்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் கஞ்சா பயன்பாட்டை ஒழிக்கும் வகையில் `ஆபரேஷன் கஞ்சா 2.0' என்ற பெயரில் காவல்துறை அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் காரணமாக கஞ்சா வியாபாரிகள் அச்சத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. உண்மையில் காவல்துறை நடவடிக்கையால் கஞ்சா பயன்பாடு குறைந்துவிட்டதா? களநிலவரம் என்ன?
மிளகாய் மூட்டைக்குள் கஞ்சா
சென்னை கொரட்டூரில் கடந்த வாரம் நடந்த சம்பவம் இது. கொளத்தூர், பூபதி நகரைச் சேர்ந்த மோகன்லால் என்பவர், கொரட்டூரில் மளிகைக் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார். இந்தக் கடைக்கு பள்ளி, கல்லூரி மாணவர்கள் அதிகப்படியாக வந்துள்ளனர். இதனால் சந்தேகப்பட்டு காவல்துறையினர் ரகசியமாகக் கண்காணித்துள்ளனர்.
அப்போது டோக்கன் சிஸ்டம் மூலம் மாணவர்களிடம் கஞ்சா பொட்டலங்களை அவர் விற்று வந்ததாகக் கூறப்படுகிறது. அதுவும் மிளகாய் மூட்டைக்குள் பதுக்கி வைத்து அவர் கஞ்சாவை விற்று வந்ததாக போலீஸார் கூறுகின்றனர். பொதுமக்களுக்கு சந்தேகம் வராத வகையில் அவர் இந்த வியாபாரத்தை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உள்பட்ட தாழம்பூரில் காவல்துறை நடத்திய கஞ்சா வேட்டையில் 45 கிலோ கஞ்சாவும் 1,400 போதை மாத்திரைகளும் ஊசிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டதாக தாழம்பூர் காவல்நிலைய போலீஸார் தெரிவித்துள்ளனர். ஆந்திராவில் இருந்து பெட்சீட்டை விற்பனைக்கு எடுத்து வருவதுபோலக் காட்டிவிட்டு அதன் உள்ளே கஞ்சா, போதை மாத்திரைகளை இந்தக் கும்பல் கொண்டு வந்ததாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
தங்கசாலையில் சிக்கிய மங்கராஜ்
முன்னதாக, கடந்த ஜனவரி மாதம் வண்ணாரப்பேட்டையில் உள்ள தங்கசாலையில் சந்தேகத்துக்கு இடமான முறையில் சுற்றி வந்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தியுள்ளனர். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த மங்கராஜ் என்ற அந்த நபர், ஆந்திரா, ஒடிஷா ஆகிய மாநிலங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை கொண்டு வந்து மொத்த வியாபாரிகளிடம் விற்று வந்தது தெரியவந்தது.
மங்கராஜிடம் நடத்தப்பட்ட விசாரணையில் காசிமேடு பகுதியைச் சேர்ந்த சரண், லட்சுமி, திருவொற்றியூர் கவிதா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 96 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் சிவபிரசாத் தெரிவித்துள்ளார்.
இவையெல்லாம் சிறு உதாரணங்கள்தான். கடந்த டிசம்பர் மாதம் முதல் தற்போது வரையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி 8,929 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 2,500 கிலோவுக்கும் மேல் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறையின் புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதனால் கஞ்சா வியாபாரிகள் அச்சத்தில் இருப்பதாகக் கூறப்பட்டாலும், பிபிசி தமிழ் நடத்திய கள ஆய்வில் தெரியவரும் நிலவரம் வேறாக உள்ளது.
ரூட்டை மாற்றிய வியாபாரிகள்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில் வழக்கமாக கஞ்சா விற்கப்படும் இடங்களில் எல்லாம் காவல்துறை சோதனை தீவிரமாகிவிட்டதால், பல்வேறு நூதனமான வழிகளில் எல்லாம் கஞ்சா விற்பனை நடப்பதைப் பார்க்க முடிந்தது.
அந்தவகையில், அறிமுகம் இல்லாத புதிய நபர்களுக்கு விற்காமல் ரெகுலர் கஸ்டமர்களாக இருப்பவர்களுக்கு மட்டுமே தீவிர கண்காணிப்புக்குப் பிறகு கஞ்சாவை விநியோகிக்கின்றனர். சென்னையின் பிரதான பகுதி ஒன்றில் ரெகுலர் கஸ்டமர் ஒருவரை வைத்தே 2 பாக்கெட் கஞ்சாவையும் நம்மால் வாங்க முடிந்தது.
காவல்துறை கெடுபிடி காரணமாக, முன்பு 150 ரூபாய்க்கு விற்ற 5 கிராம் கஞ்சாவை 350 ரூபாய்க்கும், முதல் தரமான கஞ்சா 10 கிராம் அளவு 2,500 ரூபாய்க்கு விற்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் நமது கேமராவை ஆன் செய்தபோது, `எதற்காக வீடியோ எடுக்கிறீர்கள்?' எனக் கேட்டு சிலர் மிரட்டல் விடுத்த சம்பவமும் நடந்தது.
போலியான வழக்குகளா?
இதையடுத்து, காவல்துறை நடத்தி வரும் `ஆபரேஷன் கஞ்சா' குறித்து, போதைப் பொருள் தொடர்பான வழக்குகளைக் கையாண்டு வரும் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆர்.சி.பால் கனகராஜிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம்.
"இளைஞர்களின் மனநிலையை பாதிக்கின்ற போதைப் பொருள்களுக்கு எதிராக காவல்துறை எடுக்கக் கூடிய நடவடிக்கைகளை வரவேற்கிறோம். காரணம், இளைஞர்களைப் பாதுகாக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், காவல்துறையினர் போலியாக வழக்குகளைப் பதிவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். சென்னையில் கஞ்சா, ஹெராயின் போன்றவை அதிகமாக பரவுகிறது எனக் கூறிக் கொண்டு கணக்குக்காக வழக்குகளைப் பதிவு செய்வது நடக்கிறது. இந்த வியாபாரத்துக்குக் காரணமான முக்கியமான முதலாளிகளை கைது செய்ய வேண்டும். அவர்களை கைது செய்யாத வரையில் விற்பனையைத் தடுப்பது என்பது சாத்தியமில்லை" என்கிறார்.
மேலும், "ஒருவருக்குப் பழக்கமான ஒன்றை உடனடியாக கைவிட முடியாது. அதனை எதாவது ஒரு வகையில் விற்கத்தான் பார்ப்பார்கள். அந்தவகையில் சப்ளை செய்யும் முதலாளிகளைக் கைது செய்ய வேண்டும். அதைவிடுத்து, `இந்த வாரம் 300 வழக்குகளைப் பதிவு செய்துள்ளோம்' என்றெல்லாம் கணக்குக் காட்டுவதை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் ஒருவரை தவறாகக் கைது செய்தாலும், அதன்பின் வருகிற காவல் அதிகாரிகளும் அந்த நபர் மீது தொடர்ந்து வழக்குப் பதிகின்றனர்" என்கிறார்.
"அப்படியானால், கஞ்சா விவகாரத்தில் போலியான வழக்குகள்தான் பதிவு செய்யப்படுகின்றனவா?" என்றோம். "கஞ்சா வழக்குகளில் `ஏ பிளஸ்' என வகைப்படுத்தப்படும் குற்றவாளிகளை எல்லாம் கைது செய்கின்றனர். இவர்களிடம் எல்லாம் ஒரே மாதிரியாக 22 கிலோ கஞ்சா கைப்பற்றியதாக வழக்குப் போடுகின்றனர். முக்கிய குற்றவாளிகள் எல்லாம் ஓடும்போது கால் முறிந்துவிட்டதாகவும் கூறுகின்றனர். 22 கிலோ கஞ்சாவில் 50 கிராம் மட்டும் மாதிரி எடுத்து சோதனைக்கு அனுப்புகின்றனர். மற்றவை சோதனைக்கே போகாது. அதனால் உண்மையிலேயே 22 கிலோ கஞ்சா இருந்ததா என்ற விவரம் தெரியப் போவதில்லை. அதில், சாதாரண இலையை கசக்கி வைத்தாலும் தெரியாது. இந்த வழக்கில் நீண்டகாலம் சிறையில் இருக்க வேண்டும். 20 கிலோ என்றால் நீதிமன்றத்தில் பிணை கிடைக்காது என்பதால் பொய்யான வழக்குகளை புனைகின்றனர் என்கிறார்.
முக்கிய புள்ளிகள் ஏன் கைதாவதில்லை?
"ஆந்திரா மாநிலம், தமிழ்நாட்டில் தேனி மாவட்டம் ஆகிய பகுதிகளில் இருந்து கஞ்சா வருவதாகச் சொல்கின்றனர். இதனை டிரைவர், கிளீனர் ஆகியோர் கொண்டு வருவார்கள். இவர்கள்தான் கைது செய்யப்படுகிறார்கள். கஞ்சாவை ஏற்றிவிட்ட நபர்களோ செடி நட்டு வளர்த்த நபர்களோ இதுவரையில் கைது செய்யப்பட்டதில்லை. 'நாம் எதற்காக ஆந்திராவில் போய் தேட வேண்டும்' என்ற மனநிலையில் காவல்துறையினர் உள்ளனர். போதைப் பொருள் வழக்குகளைக் கையாளும் என்.ஐ.பி சி.ஐ.டி துறைக்கு இதுதான் வேலை. அவர்கள் என்ன செய்கிறார்கள்?'' எனக் கேள்வியெழுப்புகிறார் பால் கனகராஜ்.
``பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை என்.டி.பி.எஸ் சட்டப் பிரிவு 52 ஏ பிரிவின்படி அதனை எரிப்பதற்கு தனி நீதிபதி உத்தரவிடுவார். வழக்கு முடிவில் அது சிதைந்து போயிருக்கும். அதனைத் தேவையில்லாமல் வைத்திருப்பதைவிட அழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். காவல்துறையும் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் முக்கியமான முதலாளிகளைக் கைது செய்வதில் முனைப்பு காட்ட வேண்டும்'' என்கிறார்.
பொதுவாக, போதைப் பொருள் குற்றம் தொடர்பான வழக்குகளை என்.ஐ.பி சிஐடி எனப்படும் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் கையாண்டு வருகின்றனர். தற்போது கஞ்சா வேட்டையில் உள்ளூர் காவல்நிலையங்களே முனைப்பு காட்டுகின்றன. என்.ஐ.பி சிஐடி பிரிவிலும் அதிகாரிகள் பற்றாக்குறை நிலவுவதாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, சென்னை வியாசர்பாடியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அலுவலகத்துக்கு நேரில் சென்றோம். தெருவின் ஓரங்களில் முழுக்க கைப்பற்றப்பட்ட வாகனங்கள் புழுதி படிந்து கிடந்தன. அங்குள்ள அலுவலகத்துக்குச் சென்றபோது ஒரே ஒரு பெண் அதிகாரி மட்டும்தான் இருந்தார். சுற்றிலும் மேஜை, நாற்காலிகள் அனைத்தும் காலியாகவே இருந்தன. அவர் நம்மிடம், "இன்னும் பத்து நிமிடம் கழித்து வந்திருந்தால் நானும் வெளியில் சென்றிருப்பேன். இதைத் தவிர வேறு எந்தத் தகவலையும் கூற முடியாது'' என்றார்.
தாம்பரம் காவல் ஆணையாளர் சொல்வது என்ன?
தமிழ்நாடு காவல்துறையின் ஆபரேஷன் கஞ்சா குறித்து தாம்பரம் காவல் ஆணையாளர் எம்.ரவியிடம் பிபிசி தமிழ் சார்பில் பேசினோம். "ஆபரேஷன் கஞ்சா 2.0 மூலம் கஞ்சா, போதை மாத்திரைகள் என தொடர்ந்து வேட்டை நடந்து வருகிறது. அனைத்து காவல் ஆணையரகங்களும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றன. இதுவரையில் கோடிக்கணக்கான மதிப்புள்ள கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை எங்கிருந்து வருகின்றன? கொண்டு வருவது யார்? இதன் மூளையாக செயல்பட்டு வருவோர் யார்? என்பதுதான் முக்கியம். அவர்களைக் கண்டறிந்து கைது செய்வது தொடர்பாக ஆந்திர மாநில போலீஸ் உயர் அதிகாரிகளுடன் இணைந்து பேசி வருகிறோம்'' என்கிறார்.
மேலும், ஆந்திராவில் இருந்து கஞ்சா வருவதாகக் குறிப்பிடும் காவல் ஆணையாளர் எம்.ரவி, "ஆந்திர மாநில போலீஸாரின் ஒத்துழைப்புடன் வாகன சோதனை நடந்து வருகிறது. இதற்காக 7 சிறப்பு சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளோம். தாம்பரம் காவல் ஆணையரகத்தில் மட்டும் கடந்த 15 நாள்களில் 105 கிலோ கஞ்சா உள்பட ஏராளமான போதை மாத்திரைகளைக் கைப்பற்றியுள்ளோம். அதுமட்டுமல்லாமல் எஸ்.பி அந்தஸ்தில் தனிப்படை ஒன்றையும் அமைத்துள்ளோம்.
அண்மையில் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் அபின் மூலமாக தயாரிக்கும் பசையை விற்பதாகத் தகவல் வந்து அதனையும் கைப்பற்றியுள்ளோம். போதை நெட்வொர்கை முழுமையாக அழிப்பதுதான் எங்களின் வேலை. இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டில் இந்தளவுக்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்ததில்லை. இதனால் கஞ்சா இல்லாமல் பலரும் தடுமாறுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது'' என்கிறார்.
இந்த விவகாரத்தில் காவல்துறை தவறாகக் கைது செய்வதாகக் கூறப்படுவது குறித்துக் கேட்டபோது, "அதுபோன்று வழக்குகள் பதிவு செய்யப்படுவதில்லை. அவ்வாறு பொய்யான வழக்குகள் பதிவு செய்தால் நாளை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாது'' என்கிறார்.
காவல்துறையின் விழிப்புணர்வு முயற்சிகள்
மேலும், "போதைப் பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது என்பது மிகவும் முக்கியமான அம்சம். அதன் விளைவுகள் தெரியாமல் வளரிளம் சிறார்கள் பயன்படுத்தி வருகின்றனர். காவல்துறை தரப்பில் இதன் தீமைகளைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறி வருகிறோம். மாணவரின் நடத்தைகளில் மாற்றம் இருந்தால் தெரிவிக்குமாறு பெற்றோர், ஆசிரியர்களிடமும் தொடர்ந்து பேசி வருகிறோம்'' என்கிறார்.
"இந்தியாவில் இளைஞர்களின் பங்கு என்பது 60 சதவீதமாக உள்ளது. அவர்கள் தன்னைத்தானே அழித்துக் கொண்டு சமூகத்தையும் அழிக்கும் வேலையில் ஈடுபடக் கூடாது. சாகசத்துக்காக தொடங்கும் இந்தப் பழக்கம் அடிமையாக்கிவிடும். அதனைத் தடுக்க வேண்டும் என்றால் மாணவர்கள் தயவு செய்து போதைப் பொருள் பழக்கத்துக்கு ஆளாகக் கூடாது. நாட்டின் எதிர்காலமும் அவர்களின நலனும் அவர்கள் கையில்தான் இருக்கிறது என்பதை உணர்ந்தாலே போதும். திறமையானவர்கள் எல்லாம் இதுபோன்ற மோசமான பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது'' எனவும் எச்சரிக்கிறார் காவல் ஆணையாளர் எம்.ரவி.
போதையால் பெருகும் குற்றங்கள்
அதேநேரம், கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் கஞ்சா உள்பட போதைப் பழக்கத்துக்கு அடிமையானதாகக் கூறி ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் புரசைவாக்கம், ஓட்டேரி, அயனாவரம், வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இதுதவிர, அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக வருகிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. `தீவிர பாதிப்பு காரணமாக வருகிறவர்களின் எண்ணிக்கையே இவ்வளவு என்றால், பாதிப்பை வெளியில் சொல்லாமல் இருக்கின்றவர்களின் எண்ணிக்கையும் அதிகம்' எனவும் மருத்துவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
இதுதொடர்பாக, பிபிசி தமிழிடம் பேசிய கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் பூர்ணசந்திரிகா, ``வளரிளம் சிறார்கள் மத்தியில் கஞ்சா பயன்பாடு அதிகரித்திருப்பதால் அதற்குரிய சிகிச்சைகளை வழங்கி வருகிறோம். வளரிளம் சிறார்கள் மத்தியில் குற்றம் அதிகரித்துள்ளது. இங்கு நிறைய பேரை கூட்டி வருகின்றனர். சிறார் மையங்களில் இருந்து வருகிறவர்களிடம் பேசும்போது, `என்னென்னு தெரியாம கஞ்சாவை பயன்படுத்தினேன்' என்கின்றனர். அந்தப் போதை காரணமாக செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு போதிய கவுன்சலிங் கொடுக்கிறோம். அவர்கள் மத்தியில் குற்றம் அதிகரித்துள்ளதைப் பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது'' என்கிறார்.
மேலும், ``பிற மாவட்டங்களில் இருந்து வரும் தகவல்களைப் பார்க்கும்போது குற்றத்தில் ஈடுபடுகிறவர்களின் எண்ணிக்கை ஓரளவு அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. காவல்துறையின் நடவடிக்கை காரணமாக கஞ்சா விற்பனை குறைந்து வருகிறது'' என்கிறார்.
ஆய்வுகள் சொல்வது என்ன?
தொடர்ந்து பேசிய மருத்துவர் பூர்ண சந்திரிகா, ``எங்கே இருந்து போதைப் பொருள் வருகிறதோ அதனைத் துண்டிக்க வேண்டும். கஞ்சாவை பயன்படுத்தவதால் வரக் கூடிய பாதிப்புகளை வளரிளம் தலைமுறையினர் உணர வைக்க வேண்டும். பெரியவர்களில் போதைக்கு அடிமையானவர்கள் தொடர்பான ஆய்வுகளைப் பார்க்கும்போது அவர்கள் வளரிளம் பருவத்தில் இருந்தே போதைப் பொருள்களைப் பயன்படுத்துவதை அறிய முடிகிறது. பெற்றோர், ஆசிரியர்களிடம் விழிப்புணர்வு கொடுக்க வேண்டும். மாணவர்களும், தங்கள் பெற்றோரிடம் மனம் திறந்து பேசக் கூடிய சூழல் உருவாக வேண்டும்'' என்கிறார்.
மேலும், `` போதைப் பொருளை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனரீதியான சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும். இவர்கள் எதையும் செய்யாமல் அமைதியாக இருப்பார்கள். பணத் தேவைக்காக குற்றங்களில் ஈடுபடுவது அதிகரிக்கும். சரியாக அவர்களால் சாப்பிட முடியாது. குழப்பம் அதிகரிக்கும். இவையெல்லாம் கஞ்சா ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள். இதனை அவர்கள் உணர்ந்தாலே போதும்'' என்கிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்