தமிழ்நாடு புதிய கல்வி கொள்கைக்கான குழு: புதிய மாடலை உருவாக்குமா?

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டிற்கென ஒரு புதிய கல்விக் கொள்கையை வகுக்க, இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, சதுரங்கச் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கல்வியாளர்கள் ஆகியோரை உள்ளடக்கிய குழுவை அமைத்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்தக் குழு முன்பாக உள்ள சவால் என்ன?

தி.மு.க. கடந்த ஆண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பிறகு, 2021-22ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யும்போது, 'மாநிலத்திற்கென புதிய கல்விக் கொள்கையை உருவாக்க ஒரு குழு அமைக்கப்படும்' என்று அறிவிக்கப்பட்டது.

"தமிழ்நாட்டின் வரலாற்று மரபு, தற்போதைய நிலைமை, எதிர்காலக் குறிக்கோள்களுக்கு ஏற்ப, மாநிலத்திற்கென தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்றை இந்த அரசு நியமிக்கும்" என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.

குழுவில் உள்ளவர்கள் யார் ?

அறிவிப்பு வெளியாகி சுமார் எட்டு மாதங்களாகியிருக்கும் நிலையில் புதிய கல்விக் கொள்கைக்கான குழுவை அமைத்திருக்கிறது மாநில அரசு. தில்லி உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த. முருகேசன் தலைமையில் இந்தக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக, சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல். ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். இராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா. பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கவனம் ஈர்த்த குழு

இந்தக் குழுவானது தமிழ்நாட்டிற்கென புதிய கல்விக்கொள்கையை வடிவமைத்து, ஓராண்டு காலத்திற்குள் தனது பரிந்துரையை அரசுக்கு அளிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக இம்மாதிரிக் குழுக்களில் கல்வியாளர்களே நிறைந்திருக்கும் நிலையில், இந்த முறை விளையாட்டு வீரர்கள், இசைக் கலைஞர், எழுத்தாளர் போன்றவர்களும் இடம்பெற்றிப்பது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

இது மிக முக்கியமான விஷயம் என்கிறார் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா.

"கல்வி என்பது வெறும் மதிப்பெண்கள் இல்லை. அது ஒரு முழுமையை நோக்கிய நகர்வு. அதில் எல்லா விஷயங்களும் இடம்பெற்றிருக்க வேண்டும். அது கலையாக இருக்கலாம், விளையாட்டாக இருக்கலாம். இவையெல்லாம் கல்விக்குள் இருக்க வேண்டுமென பல கல்வியாளர்கள் நீண்ட காலமாக சொல்லி வருகிறார்கள்.

படைப்பாற்றல், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் திறன் ஆகியவை வேண்டுமென்றால், சமத்துவம், சமூகத்தை ஏற்றத்தாழ்வின்றி பார்க்கும் பார்வை ஆகியவை வேண்டுமென்றால் இம்மாதிரியான பல்வேறு தரப்பினரையும் உள்ளடக்கிய குழு முக்கியம். இந்தக் குழுவில் கலை, விளையாட்டு ஆகியவற்றுக்கு இடம் கொடுத்திருப்பது மிக முக்கியமான நகர்வு" என்கிறார் டி.எம். கிருஷ்ணா.

புதிய கல்வி மாடலை உருவாக்கும்

எல்லா மாணவர்களும் துவக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை செல்வதை உறுதிப்படுத்தும் வகையில், தமிழ்நாட்டிற்கென ஒரு புதிய கல்வி மாடலை உருவாக்கும் வகையில் இந்தக் குழு செயல்படுமென நம்புவதாகக் கூறுகிறார் மாநிலக் கல்விக்கான பொது மேடையின் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

"இந்தியா வெவ்வேறு விதமான புவியியல் அமைப்பும் வெவ்வேறு தட்பவெப்ப நிலையும் கொண்டது. இந்திய மாநிலங்கள், மொழிசார்ந்த தேசியத்தை அங்கீகரித்துத்தான் உருவாக்கப்பட்டன. ஒரு மாநிலம் தனக்கென தனியான ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க முடியாது. மற்றபடி தனக்கான எல்லாக் கொள்கைகளை உருவாக்கிக்கொள்ள முடியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சிறப்பு தேவைகள் உண்டு. அதன் அடிப்படையில் தங்களுக்கென கொள்கைகளைத் திட்டங்களை வகுக்க முடியும்.

கல்வியைப் பொறுத்தவரை, உயர் கல்வியில் தரத்தை ஒருங்கிணைத்துத் தீர்மானிப்பதைத் தவிர இந்திய அரசுக்கு கல்வி மீது வேறு எந்த அதிகாரமும் இல்லை. கல்வி என்பது பொதுப் பட்டியலில் இருந்தாலும், பல்கலைக்கழகங்களை உருவாக்குவது, ஒழுங்குபடுத்துவது என்பது மாநில அரசின் கையில்தான் உள்ளது.

இந்திய அரசுதான் முரண்படுகிறது

எல்லோருக்கும் கல்வியை அளிப்பதுதான் கல்விக் கொள்கையின் நோக்கம். அந்தக் கொள்கையில் மாநில அரசு முரண்படவில்லை. ஆனால், கல்வியை தனியாருக்கு தாரைவார்ப்பதன் மூலம் மத்திய அரசுதான் முரண்படுகிறது. 12ஆம் வகுப்பு வரை மாநில அரசே இலவசக் கல்வியைக் கொடுக்கிறது. இது போன்ற விஷயங்களை மாநிலக் கல்விக் கொள்கையில் விவாதிக்கலாம்.

தவிர, இந்திய அரசு என்பது ஒரு பொதுப் பள்ளியைக்கூட நடத்தவில்லை. வெவ்வேறு நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்ட சிறப்புப் பள்ளிகளைத்தான் நடத்துகிறது. மாநில அரசுதான் எல்லோருக்குமான பள்ளிகளை நடத்துகிறது. அந்தப் பள்ளியில் 12ஆம் வகுப்புவரை படித்து முடித்த பிறகு, தேசிய தேர்வு முகமை நடத்தும் தேர்வுகளை எழுத வேண்டுமென்று சொல்வது என்ன நியாயம்? இதுபோன்ற விவகாரங்களை மாநில அரசு அமைத்திருக்கும் புதிய குழு கவனிக்குமென எனக் கருதுகிறேன். இதுபோன்ற பல்வேறு அம்சங்களை மனதில் கொண்டு, தமிழ்நாட்டிற்கென ஒரு பிரத்யேகமான மாடலை இந்தக் குழு உருவாக்க வேண்டும்" என்கிறார் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: