பாஜக வரலாறு: ஜனசங்கமாக தொடங்கி, பாரதிய ஜனதா கட்சியாக தேர்தலில் வளர்ந்த கதை

    • எழுதியவர், பிரசாந்த் முத்துராமன்
    • பதவி, பிபிசி தமிழ்

அது 1952 ஆம் ஆண்டு. ஒரு மிகப்பெரிய ஜனநாயகப் பரிசோதனையை அந்த ஆண்டுதான் செய்து முடித்தது இந்தியா.

சுதந்திர இந்தியாவில் நடத்தப்பட்ட அந்த முதல் பொதுத்தேர்தலில் வெறும் 3 இடங்களில் வென்ற ஜனசங்கம், 67 ஆண்டுகளுக்குப் பின் அதே இந்தியாவில் 2019-ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 303 இடங்களை வென்று ஆட்சியமைத்தது. பாரதிய ஜனதா கட்சி என்று இன்று அழைக்கப்படும் பாஜகவின் தேர்தல் பயணம் குறித்து ஓர் எளிமையாக அறிமுகம் செய்யும் முயற்சிதான் இந்தக் கட்டுரை.

இந்திய அரசியலில் இன்றைய தேதிக்கு தவிர்க்க முடியாத அரசியல் கட்சிகளில் ஒன்று பாஜக. 1980 ஏப்ரல் 6ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் நாள், ஆண்டுதோறும் அதே நாளில் பாஜக தொண்டர்களால் கொண்டாடப்படுகிறது. கடந்த இரண்டு பொதுத்தேர்தகளில் பாஜக பெற்ற வெற்றி வெகுவாக கவனிக்கப்பட்டது என்றபோதும், முந்தைய கால தேர்தல்களில் எப்படி இருந்தது பாஜக? வெறும் 3 இடங்களில் தொடங்கி பின்னர், 303 இடங்களில் வெற்றி என்ற நிலையை எப்படி எட்டியது பாஜக?

ஆண்டு வாரியாக நடந்த சில முக்கிய நிகழ்வுகளை நினைவு கூர்வது இந்த கேள்விக்கு விடையளிக்கும். நாம் தொடங்க வேண்டிய ஆண்டு 1951. அந்த ஆண்டில்தான் ஷியாமா பிரசாத் முகர்ஜி ஜனசங்கத்தை தோற்றுவித்தார்.

முதல் தேர்தல்

1952 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் போட்டியிட்டு பாரதிய ஜனசங்கம் 3 இடங்களில் வென்றது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களில் மெல்ல மெல்ல வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. 1953 ஆம் ஆண்டு ஷியாமா பிரசாத் முகர்ஜி மரணமடைந்தார்.

அடுத்து 1957ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் 4 இடங்களை வென்றது. இதற்கிடையில், 1953-54 காலகட்டங்களில் நடந்த காஷ்மீர் கிளர்ச்சி மற்றும் கோவாவில் இருந்த போர்ச்சுகீசிய காலனி ஆதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டது.

1962 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் 14 இடங்கள் வெற்றி பெற்ற பாரதிய ஜனசங்கம், 1967 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலின்போது 35 இடங்களில் வென்றது.

1971 இல் நடந்த பொதுத்தேர்தலில் 22 இடங்கள் வென்றது பாரதிய ஜன சங்கம். இந்தத் தேர்தலில் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது.

1975இல் அவசரநிலைப் பிரகடனம் அமல்படுத்தப்பட்டு இந்தியா முழுக்க தணிக்கைகள், தலைவர்கள் கைது என அடுத்த இரு ஆண்டுகளுக்கு இந்தியா கடினமான நாள்களைக் கடந்ததாக எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி' என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார். நெருக்கடி நிலைக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கான வலுகுறைந்து மக்கள் ஒரு மாற்று அரசைத் தேடத்தொடங்கிவிட்டனர் என்று தன் ` தி வெர்டிக்ட்: டீக்கோடிங் இண்டியண் எலெக்ஷன்ஸ்` நூலில் குறிப்பிடுகிறார் பிரணாய் ராய்.

முதல் ஆட்சி

எமெர்ஜென்சிக்கு பிறகு, 1977 இல் பொதுத்தேர்தல் நடத்தப்பட்டபோது, பாரதிய ஜனசங்கமும் ஜனதா கட்சியும் இணைந்து, ஸ்தாபன காங்கிரஸ், சோசலிசக் கட்சி ஆகிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்தன. இதில், காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து, சுதந்திர இந்தியாவில் முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு அரசு அமைந்தது. மொரார்ஜி தேசாய் இந்தக் கூட்டணி அரசின் பிரதமராக பொறுப்பேற்றார். இப்படியாக ஆட்சி அதிகாரத்தில் மெல்லக் கால் வைத்தது பாரதிய ஜனசங்கம்.

இந்த நிலையில், இந்துத்துவ சித்தாந்த அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதாவது, கட்சியில் இருப்பவர்கள் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிலோ, அமைப்பில் இருப்பவர்கள் கட்சியிலோ உறுப்பினராக இருக்கக்கூடாது. இந்த இரட்டை உறுப்பினர் முறைக்கு எதிராக வந்த அறிவிப்பை முன்னிட்டு பலர் ஜனசங்கத்தை விட்டு வெளியேறினர். ஜனதா கட்சி உடைந்தது.

இந்த நிலையில், புதியதாக ஒரு அமைப்பு தேவைப்பட, ஏப்ரல் 6ஆம் தேதி 1980ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியை தோற்றுவித்து, நிறுவன தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார் அடல் பிகாரி வாஜ்பேயி. அந்த ஆண்டு நடந்த தேர்தலில் மீண்டும் வென்று இந்திய பிரதமரானார் இந்திரா காந்தி.

அடுத்த நிகழ்வு 1984 இல் நடந்தது. அக்டோபர் 31 ஆம் தேதி, சுட்டுக்கொல்லப்பட்டார் இந்திரா காந்தி. இதையடுத்து அதே ஆண்டு டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெருவெற்றி பெற்று ராஜிவ் காந்தி பிரதமரானார். இந்ததேர்தலில் போட்டியிட்ட பாஜக 2 இடங்களில் வெற்றி பெற்றது.

அடுத்த நடந்த 1989 பொதுத்தேர்தலில் பாஜக, சித்தாந்தங்களுக்கு நடவடிக்கை வடிவிலான உருவம் கொடுக்கத் தொடங்கியது. குறிப்பாக, அயோத்தி ராமஜென்ம பூமி விவாகரத்தை தீவிரமாகக் கையிலெடுத்தது. அந்த சமயம், ஜனதா தளத்துக்கு ஆதரவு அளித்து பிரதமராக வி.பி.சிங் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

இந்துத்துவ அரசியல்

1990 ஆம் ஆண்டு தனது முதல் ரத யாத்திரை பயணத்தை தொடங்கியது பாஜக. சோம்நாத்திலிருந்து அயோத்தி வரையிலான இந்த ரதயாத்திரை ஒருவழியாக வெற்றிபெற்றதைத் தொடர்ந்து 1992ஆம் ஆண்டு அடுத்த ரதயாத்திரைக்கு திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், அதிலிருந்துதான் இந்திய அரசியலின் நெடுங்கால விவகாரம் ஒன்று தொடங்கப்போகிறது என்பது அப்போது பலருக்கும் தெரியாது.

இதற்கிடையில், 1991 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ஆட்சியமைத்தது காங்கிரஸ் கூட்டணி. ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு நடந்த இந்தத்தேர்தலில், நரசிம்மராவ் பிரதமரானார்.

1992 பாபர் மசூதி விவகாரம்

1992ஆம் ஆண்டு, டிசம்பர் 6 ஆம் தேதி. விஸ்வ இந்து பரிஷத்தின் (வி.எச்.பி) ஆர்வலர்கள் மற்றும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளின் சில தலைவர்கள் சர்ச்சைக்குரிய இடத்தில் ஒரு பேரணிக்கு ஏற்பாடு செய்தனர். இதில் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் (கர சேவகர்கள்) கலந்து கொண்டனர்.

பேரணி பின்னர் வன்முறையாக மாறியது. கும்பல் அந்த பகுதியின் பாதுகாப்பை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, பாபர் மசூதியை இடித்தது.

ராம ஜென்ம பூமி பின்நாட்களில் வடஇந்திய அரசியலில் வாக்குறுதிகளாகவும் தேர்தல் அறிக்கைகளாகவும் கூட மாறியது.

1996 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் சுமார் 187 தொகுதிகளில் வெற்றி பெற்றது பாஜக. மற்றெந்த கட்சிகளுக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால், பிரதமராக பொறுப்பேற்று பின் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் ஆட்சி கவிழ்ந்தது.

பின்னர் 1998 தேர்தலில் 2004 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்தது பாஜக. மீண்டும் 2014இல் நடந்த பொதுத்தேர்தலில் வென்று பாஜக சார்பில் இந்திய பிரதமரானார் நரேந்திரமோதி.

இப்படித்தான் 3 தொகுதிகளில் தொடங்கி 303 தொகுதிகளில் வெற்றி என்ற நிலையை எட்டியிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: