தமிழ்நாட்டில் பாலியல் தொல்லைகளால் அதிகரிக்கும் தற்கொலைகள் - மனநல மருத்துவமும் காவல்துறையும் கூறுவது என்ன?

    • எழுதியவர், ஆ விஜயானந்த்
    • பதவி, பிபிசி தமிழ்

இந்தியாவில் வளரிளம் பருவத்தினர் மத்தியில் தற்கொலை எண்ணம் அதிகம் தலைதூக்குவதாக உளவியல் வல்லுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். `ஏதோ ஒன்று நடந்துவிட்டால் பெற்றோரிடம் குழந்தைகள் பயப்படாமல் கூறுவதற்கு முன்வர வேண்டும். அதைவிடுத்து தற்கொலை முடிவை நாடுவது என்பது தவறான விஷயம்' என்கின்றனர், உளவியல் நிபுணர்கள்.

தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக மாணவ, மாணவிகள் உள்பட வளரிளம் பருவத்தினர் மத்தியில் தற்கொலை விகிதம் கூடிக் கொண்டே போகிறது. கொரோனா தொற்றின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டதால் செல்போனிலேயே மாணவர்கள் அதிகம் மூழ்கிக் கிடந்ததால் குற்றச் சம்பவங்கள் அதிகரித்ததாகவும் கூறப்பட்டது. அதேநேரம், நீட் தேர்வு, பாலியல் வன்கொடுமை, அந்தரங்க புகைப்படங்களை வெளியிடுவதாக மிரட்டுவது, பெற்றோர் கண்டிப்பு என தற்கொலையை நாடுகிறவர்களுக்கும் பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன.

``அண்மைக்காலமாக இளம் பருவத்தினர் மத்தியில் தற்கொலைகள் அதிகரித்துள்ளதைப் பார்க்க முடிகிறது. சிறிய விஷயங்களுக்காக தற்கொலை செய்து கொள்வதற்கு உளவியல் ரீதியாக என்ன காரணம்?'' என சென்னை கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் பூர்ண சந்திரிகாவிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

`` செய்தித்தாள்கள், தொலைக்காட்சிகள் ஆகியவற்றைப் பார்த்தால் இதுபோன்ற செய்திகள் அதிகமாக வருகின்றன. இது வருத்தமளிக்கக்கூடிய விஷயம். பெற்றோரும் தங்கள் குழந்தைக்கான சிறந்த பள்ளி, சிறந்த இடம் எனத் தேடிக் கொடுக்கின்றனர். இதன் காரணமாக பல விஷயங்களை சொல்லி வளர்ப்பதில்லை. மற்றவருக்கும் பிரித்துக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஊட்டி வளர்ப்பதில்லை. `பைக் வாங்கித் தரவில்லையா.. ட்ரெஸ் வாங்கித் தரவில்லையா?' என்றால் உடனே தற்கொலை முடிவை நாடக் கூடிய தலைமுறையைத்தான் நாம் கையாண்டு வருகிறோம். பரிமாண வளர்ச்சியில் அருகில் இருப்பவர்களை நாம் அறிந்து கொள்வதில்லை. தேடுதல் காரணமாக குழந்தைகளையும் அதை நோக்கி நகர வைக்கிறோம். இது தவறானது என சொல்லிக் கொடுக்கக் கூடிய கடமையும் நமக்கு இருக்கிறது''.

தற்கொலை எண்ணம் வரும்போது மருத்துவர்களை அணுக வேண்டிய அவசியம் என்ன?

அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக 104 என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. `இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும்.

குடும்பத்தில் பெற்றோர் தங்கள் பிள்ளைகளை எந்த அளவுக்கு கவனிக்க வேண்டும்?

முன்பெல்லாம் ஒரு குழந்தை எங்கே நகர்ந்தாலும் மற்றவர்கள் கவனித்து பெற்றோருக்குத் தெரியப்படுத்துவார்கள். சுதந்திரம் கொடுத்தாலும் வெளியில் அனுப்பும்போது, உன்னை நம்பி அனுப்புகிறோம்; அங்கே யாருடைய செல்போன் எண்ணாவது கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூற வேண்டும். பள்ளிகளில் ஆசிரியரிடம் சென்று பேச வேண்டும். ஆசிரியர்கள் சொன்னால் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். கற்றல் திறன் குறைவாக இருக்கும் குழந்தைகளை மற்றவர்களோடு ஒப்பிடும்போது மனஅழுத்தம் வரும். அண்மையில் குளிப்பதை ஒருவர் வீடியோ எடுத்ததால் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். நமது குழந்தைகளின் வாழ்க்கையில் எதுவும் நடக்காமல் பாதுகாப்பாக வளர்க்க விரும்புவோம். ஏதோ ஒன்று நடந்துவிட்டால் பெற்றோரிடம் குழந்தைகள் பயப்படாமல் கூறுவதற்கு முன்வர வேண்டும். யார் மிரட்டினாலும் வீட்டில் கூற வேண்டும். எது நடந்தாலும் உதவி எண்களான 104, 100 ஆகியவற்றைத் தொடர்பு கொள்ளலாம். அதைவிடுத்து தற்கொலை முடிவை நாடுவது என்பது தவறான விஷயம்

காவல்துறை சொல்வது என்ன?

பெண்களுக்கு பாலியல்ரீதியில் மிரட்டல்கள் வந்தால், முதலில் அவர்கள் செய்ய வேண்டியது என்ன?'' என தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்புப் பிரிவின் துணை ஆணையர் சியாமளா தேவி ஐ.பி.எஸ்ஸிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டோம்.

ஒரு பெண்ணை பாலியல்ரீதியாக துன்புறுத்தக்கூடிய சூழல் என்பது அதிகமாக உள்ளது. இதுபோன்ற துன்புறுத்தல்கள் வந்தால் தனது குடும்பத்தினரிடமோ அல்லது தனக்கு நம்பிக்கையளிக்கக் கூடிய ஒருவரிடமோ கூற வேண்டும். இதுபோன்ற சம்பவங்களை பெற்றோர் ஏற்றுக் கொள்வதில்லை. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே சில பெற்றோர் குற்றம் சொல்லும் சம்பவங்களும் நடக்கின்றன. அவ்வாறு யாரிடமும் சொல்ல முடியவில்லையென்றால் காவல்துறையை அவர்கள் அணுக வேண்டும்.

இதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. 1098 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் அல்லது 9500099100 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பலாம். இதைவிட சிறந்தது காவலன் செயலி. அதை பதிவிறக்கம் செய்துவிட்டால் எந்தவிதமான ஆபத்தில் இருந்தாலோ அல்லது சந்தேகம் ஏற்பட்டால்கூட கன்ட்ரோல் அறைக்குத் தகவல் சென்றுவிடும். இதன்மூலம் அருகில் இருக்கும் காவல்நிலையத்துக்கும் தகவல் சென்றுவிடும். பெற்றோரும் தங்களுடைய ஆண் மற்றும் பெண் குழந்தைகளை எவ்வாறு கையாள வேண்டும், அவர்களின் செய்கைகளை வைத்து எவ்வாறு கண்டறிவது என்பது தொடர்பான வகுப்புகளையும் நடத்தி வருகிறோம்

புகார் சொல்ல வருகிறவர்களுக்கு சட்டரீதியாக கிடைக்கும் பாதுகாப்பு என்ன?

``எங்களிடம் புகார் சொல்ல வரும் பெண்கள் பலரும், `இந்தத் தகவல் பத்திரிகைகளில் வருமா.. என் உறவினர்களுக்குத் தெரிந்துவிடுமா?' எனக் கேட்கின்றனர். நூறு சதவீதம் யாருக்கும் தெரியப் போவதில்லை. குழந்தையின் அடையாளத்தை நாங்கள் வெளியில் சொல்லக் கூடாது. அதனை வெளியிட்டால் காவல்துறை அதிகாரிகள் மீதே நடவடிக்கை பாயும். ஊடகங்கள் வெளியிட்டாலும் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவகையிலும் பயப்பட வேண்டியதில்லை.

அடுத்ததாக, வெளியில் செல்லும்போது சம்பந்தப்பட்ட ஆண் நபரால் மீண்டும் தொல்லைக்கு ஆளாக வேண்டிய சூழல் வருமா.. என்னுடைய நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ தகவல் சொல்லிவிடுவானா எனப் பயப்படலாம். அதுபோன்ற ஒரு சூழல் நிச்சயமாக வரப் போவதில்லை. பொதுவாக பாதிக்கப்பட்ட பெண்கள் வெளியில் சொல்லாமல் இருக்கும் சூழலைத்தான் குற்றம் செய்கிறவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். அந்த நபருக்குத் தண்டனை கொடுக்கும்போது மற்றவர்களுக்கும் அச்சம் வரும். பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு வேறு எந்த ஆதரவும் இல்லாத சூழலில்தான் தற்கொலை எண்ணத்தை நோக்கிச் செல்கிறார். இதனை தொடக்கநிலையிலேயே பெற்றோர் கண்டறிய வேண்டும்''.

மேலும், ``குழந்தைகளை எந்தவிதமான குற்றத்துக்கு ஆளாக்கினாலும் போக்சோ பிரிவுகளின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பெண்கள் குளிப்பது போன்ற காட்சிகளை வெளியிட்டு மிரட்டினால் 3 முதல் 7 ஆண்டுகள் வரையில் சிறைத் தண்டனை கிடைக்கும். சிறு வயதில் ஏற்படும் பாதிப்பு என்பது அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, குற்றத்தைக் குறைப்பதற்கு கடுமையாக போராடி வருகிறோம். வீட்டில் ஆண் குழந்தை இருந்தால் பெண் குழந்தையை பாரபட்சத்துடன் நடத்துகின்றனர். இதனைக் கவனித்து வளரும் ஆண் குழந்தைகள்தான் எதிர்காலத்தில் பெண்களுக்கு துன்பத்தைக் கொடுக்கும் நிலையை ஏற்படுத்துகின்றனர். இதனை பெற்றோர் தவிர்த்தாலே போதும்'' என்கிறார் சியாமளா தேவி.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :