You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை: முன்னாள் மத்தியப்பிரதேச காங்கிரஸ் முதல்வருக்கு எதிராக என்ன வழக்கு?
முன்னாள் மத்தியப் பிரதேச முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவருமான திக்விஜய் சிங்குக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து இந்தூர் மாவட்ட நீதிமன்றம் சனிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
உஜ்ஜயினி தாக்குதல் வழக்கு என்று அறியப்படும் இந்த வழக்கில் திக்விஜய் சிங், முன்னாள் எம்.பி. பிரேம்சந்த் குட்டு உட்பட 6 பேருக்கு ஓராண்டு சிறை தண்டனையும் 5,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் பின்னணி என்ன?
2011ஆம் ஆண்டு ஜூலை 17ஆம் தேதி நடந்த ஓர் அரசியல் சம்பவம்தான் இப்போது முன்னாள் முதல்வர் ஒருவருக்கு சிறைத் தண்டனையை பெற்றுத் தந்துள்ளது.
அன்றைய தினத்தில் திக்விஜய் சிங் உஜ்ஜையினியில் உள்ள ஓட்டல் ஒன்றின் திறப்பு விழாவுக்குச் சென்றிருந்தார். அவருக்கு பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்கள் அவரது வாகனத் தொடருக்கு முன்பாக கருப்புக் கொடி காட்டினார்கள்.
அதையடுத்து திக்விஜய் சிங்கின் ஆதரவாளர்களுக்கும் பாரதீய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர்களுக்கும் இடையில் சண்டை ஏற்பட்டது.
இதையடுத்து காங்கிரஸ் தலைவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, திக்விஜய் சிங், பிரேம்சந்த் குட்டு, ஹேமந்த் சௌகான், திலீப் சௌதாரி ஆகிய நான்கு காங்கிரஸ் தலைவர்களை இந்த வழக்கில் சேர்க்கவேண்டும் என்று மாநில அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா தொண்டர் ஒருவரை அறைந்ததாக திக் விஜய் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டது.
முன்னாள் முதல்வர் - காங்கிரஸ் பொதுச் செயலாளர்
தற்போது திக் விஜய் சிங், காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். நேரு குடும்பத்தின் ஆழமான விசுவாசியாகவும் திக்விஜய் சிங் அறியப்படுகிறார்.
1993 முதல் 2003 வரை மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வராக இரண்டு முறை தொடர்ந்து பதவி வகித்த திக்விஜய் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக தற்போது உள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்