வேலூரில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை: இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது - நடந்தது என்ன?

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் நள்ளிரவில் ஆண் நண்பரை தாக்கி இளம்பெண்ணை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக, இரண்டு சிறார்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

"சத்துவாச்சாரியில் உள்ள வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நேற்று முன்தினம் இரவு இரண்டு இளைஞர்கள் மதுபோதையில் ஒருவருக்கொருவர் தாக்கிக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த சத்துவாச்சாரி காவல்துறையினர் இரண்டு பேரையும் பிடித்து விசாரணை செய்தபோது, அவர்கள் இதற்கு முன் வழிப்பறி செய்த பணத்தை பங்கிடுவதில் தகராறு ஏற்பட்டு ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டது தெரியவந்தது. இதையடுத்து, முழு போதையில் இருந்த இரண்டு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்." என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"விசாரணையில் அவர்கள் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவரை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக இளம் சிறார் உட்பட 4 பேரை கைது செய்து காவல் துறை விசாரித்து வந்த நிலையில், நேற்று வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் ஒரு புகார் மனு வரப்பெற்றுள்ளது."

காவல்துறை தரப்பில் மேலும் கூறப்பட்டுள்ள விவரம்:

பெண் அளித்த புகாரில், அந்தப் பெண் மற்றும் அவருடைய ஆண் நண்பரும் கடந்த 16.03.2022 ஆம் தேதி இரவு வேலூர் காட்பாடியில் உள்ள ஒரு திரையரங்கில் இரவுக்காட்சி பார்த்துவிட்டு, நள்ளிரவு 1 மணியளவில் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு செல்வதற்காக ஒரு ஆட்டோவை நிறுத்தி ஏறியதாவும், அந்த ஆட்டோ செல்லும் வழியில் மருத்துவமனை நோக்கி செல்லாமல் திசைமாறி சென்றதாகவும், தாங்கள் அதை கேட்டபோது அந்த ஆட்டோவில் இருந்த 5 நபர்கள் தங்களை மிரட்டி ஒரு மறைவான இடத்திற்கு கடத்திச்சென்றதாகவும், அங்கு வைத்து தங்களிடமிருந்த செல்போன்கள், பணம் சுமார் ரூ.40,000 மற்றும் 2 பவுன் தங்க நகை ஆகியவற்றை மிரட்டி அபகரித்துக் கொண்டதாகவும், மேலும் அந்த நபர்கள் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்த சம்பவம் வெளியே தெரிந்தால் அவமானம் என்று நினைத்து அந்த பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் சம்பவம் குறித்து வெளியே கூறாத நிலையில்தான் சத்துவாச்சாரியில் நேற்று முன்தினம் மதுபோதையில் சாலையில் ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்ட தகராறில் ஈடுபட்ட குற்றவாளிகளை காவல் துறையில் பிடிபட்ட பின் இது போன்ற சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இவ்வாறு காவல்துறை தெரிவித்துள்ளது.

5 பேர் கைது

இது தொடர்பாக இரண்டு இளம் சிறார் உட்பட நான்கு பேர் மீது 11 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இதனிடையே, தலைமறைவாக இருந்தவரும் இன்று மதியம் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதான இளம் சிறார் தவிர்த்த மூன்று பேர் மணிகண்டன், பார்த்திபன், பாரத்.

கைதான இளம் சிறார் உட்பட நான்கு பேரிடம் கொள்ளையடித்த பணம் மற்றும் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஆட்டோவையும் பறிமுதல் செய்து காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணண் உத்தரவின் பேரில் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

"தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும்"

குற்ற வழக்குப் பின்னணி உடையவர்கள், நேரடியாக குற்ற வழக்கில் சம்பந்தமுடையவர்கள், மது போதைக்கு அடிமையானவர்கள் யாரேனும் ஆட்டோ ஓட்டுநர்களாக இருக்கிறார்களா என்பது குறித்து கண்காணிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ்கண்ணா பிபிசி தமிழிடம் கூறினார்.

மேலும், வாடகைக்கு ஆட்டோவை கொடுத்துள்ள உரிமையாளர்களிடமும் வாடகைக்கு வாங்கி உள்ள நபர்களின் முழு பின்னணி விவரங்கள் குறித்து காவல்துறையிடம் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

இந்த வழக்கில் சம்பந்தமுடைய ஆட்டோ ஓட்டுநர்கள் நாளொன்றுக்கு ஆட்டோ உரிமையாளரிடம் 100 ரூபாய் கொடுத்து ஆட்டோவை வாடகை எடுத்திருக்கிறார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

மேலும் அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும் என்றும், அவர்களின் தனியுரிமை முற்றிலும் காக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: