You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
"தமிழ்நாடு என் ரத்தம் கலந்த மண்" - ராகுலின் உணர்ச்சிமயத்துக்கு என்ன காரணம்?
"தமிழ்நாட்டில் என் ரத்தம் கலந்துள்ளது," என்று சென்னையில் நடைபெற்ற மாநில முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தக வெளியீட்டு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சிமயமாகப் பேசினார்.
மு.க. ஸ்டாலினின் அரசியல் வாழ்கால அனுபவங்களை விவரிக்கும் "உங்களில் ஒருவன்" என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் ராகுல் காந்தி, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா, கேரள முதல்வர் பினராயி விஜயன், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தி, நாட்டில் நமது மக்களின் குரல் திட்டமிட்டு நசுக்கப்படுகிறது என்றார்.
"இந்தியாவில் நீதித்துறை, தேர்தல் ஆணையம், ஊடகங்கள், இலக்கு வைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் இதை வைத்து எந்தவொரு மாயையிலும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி இருக்க வேண்டியதில்லை. ஆளும் ஆட்சியாளர்கள் இந்த நாட்டின் வரலாறு, பாரம்பரியத்துடன் போராடுகிறார்கள். அவர்கள் தோற்கடிக்கப்படுவார்கள்," என்று ராகுல் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பற்றி பேசிவிட்டு வெளியே வந்தபோது என்னிடம் சில நிருபர்கள் ஏன் தமிழ்நாடு பற்றி அடிக்கடி பேசுகிறீர்கள் என கேட்டனர். அதற்கு நான், "நானும் தமிழ்தான்" என்றேன். என்னை அறியாமல் அந்த வார்த்தைகள் வந்தன. காருக்குள் ஏறிய பிறகு ஏன் அப்படி பேசினேன் என சிந்தித்தேன். தமிழ்நாட்டில் நீ பிறக்கவில்லை? தமிழ் மொழியைப் பேசவில்லை. தமிழ் மூன்றாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம். பிறகு நீ எப்படி தமிழன் என்கிறாய் என எனக்குள் கேட்டுக் கொண்டேன். பிறகுதான் புரிந்தது. ஏனென்றால், எனது ரத்தம் உங்களுடைய மண்ணில் கலந்திருக்கிறது," என்றார் ராகுல் காந்தி.
மூன்றாயிரம் வருட பாரம்பரியம்
தந்தையை இழப்பதென்பது எனக்கு மிகப்பெரிய வேதனையான அனுபவம். மிகவும் சிக்கலான அனுபவம். அதில் இருந்து நான் கற்றுக் கொள்ள அந்த அனுபவம் உதவியது. அந்த வகையில் நான் என்னை தமிழன் என அழைத்துக் கொள்ள எல்லா உரிமையும் எனக்கு இருப்பதாக உணர்ந்தேன். ஒரு தமிழனாக இருப்பதற்கான பொருள் என்ன? முதலாவதாக நான் இந்த மண்ணுக்கு வரும்போது உங்களுடைய வரலாறு, பாரம்பரியம் ஆகியவற்றுக்கு தலைவணங்குகிறேன்.
உங்களுடைய எல்லா பரிமாணங்களையும் உணரும் வகையிலேயே நான் வருகிறேன். எனது நாடாளுமன்ற உரையில், இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்று குறிப்பிட்டேன். ஒரு மாநிலங்கள் என கூறும்போது அந்த வார்த்தை எங்கிருந்து வந்தது. அது மண்ணைப் பற்றியது. மண்ணிடம் இருந்து மக்கள், மக்களிடம் இருந்து அவர்களின் குரல், அந்த குரலில் இருந்து மொழி, மொழியில் இருந்து கலாசாரம், கலாசாரத்தில் இருந்து வரலாறு, அந்த வரலாற்றில் இருந்தே மாநிலம் உருவாகிறது. எனவே இந்தியா ஒரு மாநிலங்களின் ஒன்றியம் என நான் கூறுவேனானால், அது மாநிலங்களில் இருந்துதான் இந்தியா என்ற வார்த்தை வருகிறது என்பதே பொருள் என்றார் ராகுல் காந்தி.
பிரதமர் நரேந்திர மோதி அடிக்கடி தமிழ்நாடு பற்றியும் தமிழ் பற்றியும் பேசுவதையும் ராகுல் காந்தி விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், "பிரதமர் இங்கு வரும்போதெல்லாம் தமிழ்நாடு பற்றி பேசுகிறார். ஆனால், அதன் பின்னணி, பாரம்பரியம் தெரியாமல் அவர் பேசுகிறார். தமிழ்நாடு 3,000 ஆண்டுகள் பழமையான பாரம்பரியம் மிக்க இடம். பிரதமர் சொற்களைப்புரிந்து கொள்வதில்லை. வாக்கியங்களைப் புரிந்து கொள்வதில்லை. மொழியைப் புரிந்து கொள்வதில்லை. பிறகு எந்த அடிப்படையில் அவர் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசுகிறார்?" என்று கேள்வி எழுப்பினார்.
"என்னுடைய நண்பரும், சகாவுமான உமர் அப்துல்லா மிகச் சிறப்பாக உரையாற்றினார். மிக முக்கியமாக, எதை சொல்லவேண்டுமோ, அவர் அதை இந்த மன்றத்தில் சொன்னார். அதுகுறித்து நானும் சொல்ல விரும்புகிறேன். நாடு விடுதலைப் பெற்றதிலிருந்து இப்பொழுதுதான் முதன்முறையாக ஒரு மாநிலத்திலிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கு முன்பு எப்போதும் இப்படி நடந்ததில்லை."
"அந்த மக்களுடைய உரிமைகள், அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு இருக்கின்றன.ஜம்மு காஷ்மீர் மக்கள், தங்களைத் தாங்களே ஆள முடியாத ஒரு நிலை ஏற்பட்டு இருக்கிறது. குஜராத், உத்தர பிரதேசம் போன்ற பகுதியிலிருக்கின்ற அதிகாரிகள், இப்பொழுது ஜம்மு காஷ்மீரை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். இது ஜம்மு காஷ்மீருக்கு அவர்கள் அளித்திருக்கின்ற மிகப்பெரிய அநீதியாகும்," என்றார் ராகுல் காந்தி.
எச்சரித்த ஒமர் அப்துல்லா
முன்னதாக, ஜம்மு மற்றும் காஷ்மீரில் (சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தல் மற்றும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது) நடந்த மத்திய அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தாம் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதாக அதன் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கூறினார்.
ஜம்மு காஷ்மீரில் ஆரம்பித்தது அங்கு நடந்த விஷயத்துடன் முடிவடையாது என்று எச்சரித்த அவர், இந்தியாவில் வேறு எங்கும் அதுபோல நடக்கக்கூடாது என்று பேசினார்.
நாளையே தமிழகத்தை மூன்றாகப் பிரித்து ஆளுநர் ஆட்சியை கொண்டு வரலாம். அப்படி அவர்கள் (மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள்) முடிவு செய்தால். நீங்கள் என்ன செய்வீர்கள்?" என்று கேள்வி எழுப்பினார் ஒமர் அப்துல்லா.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட நடவடிக்கையின்போது பல மாதங்களாக முன்னாள் முதல்வர்களான ஒமர் அப்துல்லா, அவரது தந்தை ஃபரூக் அப்துல்லா, மெஹ்பூபா முஃப்தி போன்றோர் மவீட்டுக்காவலில் இருந்தனர்.
ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு நிகழ்வில் உள்ள தலைவர்கள், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளுக்கு எதிரான ஒத்த கருத்துக்களைக் கொண்டவர்கள்.
இது குறித்துப் பேசிய ஒமர் அப்துல்லா, "இதுபோன்ற ஒத்த கருத்துடையோர் ஒரே மேடையில் ஓரணியில் சேருவது முக்கியம். நாம் இங்கே ஒரு கட்சிக்கு எதிராக போராடவில்லை. ஒட்டுமொத்த ஆட்சியாளர்களுக்கும் எதிராக போராடுகிறோம்," என்றார்.
ஹிஜாப் சர்ச்சை
கர்நாடகாவில் வலுவடைந்து வரும் ஹிஜாப் சர்ச்சை குறித்தும் அவர் பேசினார். அப்போது, "நான் அணியும் ஆடை அடையாளம் எனக்கும் கடவுளுக்கும் இடையிலான உணர்வு தொடர்புடையது. இந்தியா என்ற எண்ணம் அதன் பன்முகத்தன்மையாகும். அதை நாம் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஒமர் அப்துல்லா.
இந்த நிகழ்ச்சியில் ஒமர் அப்துல்லாவுக்குப் பிறகு பேசிய ராகுல் காந்தி, "இப்போது, உத்தர பிரதேசம் மற்றும் குஜராத்தில் இருந்து அதிகாரிகளாக இருந்தவர்கள், ஜம்மு காஷ்மீரை ஆட்சி செய்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்று எப்போதும் பேசுகிறோம். வரலாற்று ரீதியாக, இந்தியா பன்முகத்தன்மையை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு வளர்ந்துள்ளது. நம்முடைய பார்வை வேற்றுமையிலிருந்து ஒற்றுமை மற்றும் இணக்கத்தின் மூலம் ஒற்றுமையைப்பேணுவது," என்று கூறினார்.
மதவெறி அரசியலுக்கு எதிரான முன்னோட்டம்
முன்னதாக, விழாவில் வரவேற்புரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, இந்த நிகழ்வு வெறும் புத்தக வெளியீட்டு விழா மட்டுமல்ல, மதவெறி அரசியல் மற்றும் பாசிசத்திற்கு எதிராக நிற்பவர்களின் முன்னோட்டம் என்று கூறினார்.
"பாஜக தலைமையிலான மத்திய அரசு இரண்டு இந்தியாவை உருவாக்குகிறது - ஒன்று பணக்காரர்களுக்காகவும் மற்றொன்று மக்களை ஏழைகளாக வைத்திருக்கிறது," என்று சாடினார் கனிமொழி.
இந்த நிகழ்ச்சியில் ஏற்புரையாற்றிய மு.க. ஸ்டாலின், "தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழ் கலைஞர் வகுத்த கொள்கைப் பாதையில் எனது பயணத்தை அமைத்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்காக நான் தொடர்ந்து பயணிப்பேன். நண்பா - நீ என்னை உடன்பிறந்தவனாக ஏற்றுக்கொண்டு பாசத்தைப் பொழிந்ததால் நானும் உங்களில் ஒருவன்," என்றார்.
மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு போட்டியாக வலுவான பாஜக அல்லாத கூட்டணியை கட்டியெழுப்ப பல்வேறு மாநிலங்களில் ஆளும் கட்சிகள் முயற்சி எடுத்து வருகின்றன. மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி, தெலங்கானா முதல்வரும் தெலங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான கே. சந்திரசேகர ராவ் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இதற்காக பல்வேறு அரசியல் வியூகங்களை வகுத்துச் செயல்பட்டு வருகின்றனர்.
இத்தகைய சூழலில், ஸ்டாலினின் சென்னை புத்தக வெளியீட்டு விழாவில் கேரள முதல்வர், காங்கிரஸின் ராகுல் காந்தி, பிகாரின் தேஸ்வி யாதவ், ஜம்மு காஷ்மீரின் ஒமர் அப்துல்லா பங்கெடுத்திருப்பது அரசியல் முக்கியத்துவத்தைப் பெற்றிருக்கிறது.
இன்றைய நிகழ்வில் வெளியிடப்பட்டுள்ள ஸ்டாலின் உங்களில் ஒருவன் என்ற புத்தகம், அவரது ஆரம்ப கால அரசியல் முதல் 1976இல் மிசா சட்டத்தின்கீழ் கைதாகும்வரை நடந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ளது. இதன் இரண்டாம் தொகுப்பு தயாராகி வருகிறது.
பிற செய்திகள்:
- ரஷ்ய படையெடுப்பு: யுக்ரேனின் எதிர்காலம் என்ன?
- யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி: நாடகத்தில் அதிபரானவர், நாட்டில் அதிபரான கதை
- யுக்ரேன் தலைநகர் கீயவ் தெருக்களில் கடும் சண்டை: வெடிகுண்டு சத்தம் - நேரலை செய்தி
- யுக்ரேனில் ரஷ்யாவின் நுழைவு குறித்து ரஷ்யர்களின் மனநிலை என்ன?
- யுக்ரேன்: ரஷ்யா மீது விதிக்கப்படும் தடைகள் என்ன? சர்வதேச உறவுகளில் தடைகளின் பொருள் என்ன?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்