You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மதுரையில் ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களிப்பதை எதிர்த்த மதுரை பாஜக முகவர் கைது
மேலூரில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஹிஜாபை பாஜக பூத் முகவர் அகற்ற வேண்டும் எனக் கூறியதால் வாக்குப்பதிவு சற்று நேரம் நிறுத்தப்பட்டது. பிற கட்சி முகவர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்டார். பின்னர் இன்று மாலை அவரை மதுரை மாவட்ட காவல்துறை கைது செய்தது.
அரசு ஊழியரைப் பணிசெய்ய விடாமல் தடுத்தல், மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கான இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் என்ன நடந்தது? பாஜக முகவரின் விளக்கம் என்ன?
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 8வது வார்டுக்கான தேர்தல், அல்அமீன் பள்ளி வாக்குச் சாவடியில் நடந்து வந்தது. அப்போது, அங்கு வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை ஹிஜாபை அகற்றிவிட்டு வாக்களிக்குமாறு கூறி பாஜகவின் வாக்குச்சாவடி முகவர் கிரிராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு வாக்குப்பதிவு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.
"வாக்காளர் அடையாள அட்டையில் இருப்பவர்தானா என்பதைச் சரி பார்க்க முகத்தைக் காட்டாமல் வாக்களிப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ஹிஜாபை அகற்றிவிட்டு வாக்களிக்க வேண்டும். இங்கு அராஜகம் நடக்கிறது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது," என்று பாஜக முகவர் கிரிராஜன் வாக்குச்சாவடிக்குள் நின்றுகொண்டு ஹிஜாப் அணிந்த பெண்கள் வாக்களிப்பதை மறுத்துப் பேசினார்.
அவர் பேசியதைத் தொடர்ந்து, அவருக்கு மறுப்பு தெரிவித்த திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள், ஹிஜாப் அணிவது அவருடைய மத உரிமை அதைக் கேள்வி கேட்கக் கூடாது என்று கூறினார்கள்.
பின்னர் திமுக, அதிமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர், தேர்தல் அதிகாரிகள், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாக்குபதிவு மையத்தைவிட்டு வெளியேறப்போவதாக தெரிவித்தனர்.
இதனால், சிறிதுநேரம் வாக்குபதிவு நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பா.ஜ.க வாக்குச்சாவடி முகவர் வாக்குபதிவு மையத்திலிருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு வாக்குபதிவு மீண்டும் தொடங்கியது.
அல்-அமீன் பள்ளியில் செயல்பட்டு வரும் வாக்குச்சாவடியில் பதட்டமான சூழ்நிலை நிலவிய காரணத்தால் அதைத் தொடர்ந்து கூடுதல் காவல்துறையினர் அங்கு பாதுகாப்பிற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
அவருக்குப் பதிலாக பாஜக முகவராக உஷா என்பவர் நியமனம் செய்யப்பட்ட சிறிது நேரத்தில் வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
"இஸ்லாமிய வாக்காளர்கள், ஹிஜாப் அணிந்து வந்ததால் அடையாளம் காண முடியவில்லை," என, வாக்குச் சாவடியில் இருந்து வெளியேறிய பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார் கிரிராஜன்.
மேலும் இதுகுறித்துப் பேசிய அவர், "வாக்கு மையத்தில் 60 வயதுடைய வாக்காளரின் வாக்கினை 30 வயதுடைய நபர் ஹிஜாப் அணிந்து கொண்டு செலுத்துகின்றனர். இதனால் அடையாளம் காணும் வகையில், ஹிஜாபை அகற்றக் கூறினேன்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில் தேர்தல் அதிகாரிகள் ஹிஜாப் அணிந்தவரை தாங்கள் பார்த்து உறுதி செய்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரம் குறித்துப் பேசிய மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார், "வாக்குப் பதிவுக்கு என்ன ஆடை அணிந்து வர வேண்டும் என்பது அவரவருடைய விருப்பம். அதில் யாரும் தலையிட முடியாது. சம்பந்தப்பட்ட பாஜக பூத் முகவர் வெளியேற்றப்பட்டு, அந்தக் கட்சி சார்பில் வேறு ஒருவர் முகவராக அமர்த்தப்பட்டுள்ளார். இந்தப் பிரச்னை குறித்து மாவட்ட ஆட்சியரிடம் விசாரித்து அறிக்கை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. மேலூரில் ஹிஜாப் அணிந்து வாக்களிக்க வந்தவரை எதிர்த்தவர்கள் மீது விசாரித்து ஆட்சியர் நடவடிக்கை எடுப்பார்," என்று கூறினார்.
மேலும், "இந்தியா மதச் சார்பற்ற நாடு. அனைத்து வாக்காளர்களுக்கும் அவர்களுடைய மத நம்பிக்கையைப் பின்பற்ற உரிமை உள்ளது. அரசமைப்புச் சட்டப்படி, யாரும் எந்த உடையை வேண்டுமானாலும் அணிந்து வந்து வாக்களிக்கலாம்," என்றார்.
பிற செய்திகள்:
- நியூட்ரினோ திட்டத்தால் என்ன ஆபத்து? தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கூறியது என்ன?
- "தேர்தலில் வெற்றிபெற பணத்தையும் பரிசுப் பொருள்களையும் வாரியிறைக்கும் கட்சிகள்"
- திருவள்ளூர் சாமியாரின் ஆசிரமத்தில் விஷம் குடித்து இறந்த கல்லூரி மாணவி - என்ன நடந்தது?
- கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம்: கனடாவில் அவசரநிலை
- "என்னுடைய நிர்வாணப் படங்களை டெலிகிராம் நீக்காதது ஏன்?"
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்