You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு விவசாயம்: 1,250 பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிட்டு பாதுகாக்கும் தம்பதி
- எழுதியவர், ஜோ மகேஸ்வரன்
- பதவி, பிபிசி தமிழ்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த குரவப்புலம் கிராமத்தில் சரவணகுமார் - சிவரஞ்சனி தம்பதி இந்தியா மற்றும் பிற நாடுகளின் பாரம்பரிய நெல் ரகங்களை சாகுபடி செய்து ஆவணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சொர்ணமுகி, ராதாதிலக், போபோசால், ரப்புத்தாளி, கப்பக்கார், இலுப்பைப்பூ சம்பா, கொட்டார சம்பா, நீலஞ் சம்பா, குருவிக் கார், செங்கல்பட்டு சிறுமணி, வாழைப்பூ சம்பா, கருடன் சம்பா, கொத்தமல்லி சம்பா, கருப்புக்கவுனி.... இவை எல்லாம் தமிழ்நாடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பாரம்பரிய நெல் ரகங்கள். குறிப்பாக மணக்கத்தை உள்ளிட்ட நெல் ரகங்கள் பாரம்பரிய ரகமாக மட்டுமின்றி, மருத்துவ குணமும் கொண்டவையாக உள்ளன என்று வேளாண் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே குரவப்புலம் கிராமத்தில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் முயற்சியில் ஒரு தம்பதி ஈடுபட்டுள்ளனர். பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி, அவருடைய கணவர் தனியார் சித்த மருத்துவ கல்லூரி பேராசிரியருமான சரவணகுமார் இருவரும் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். நம்மாழ்வாரிடம் பயின்ற சிவரஞ்சனி தந்தை கருப்பம்புலம் சிவாஜி இந்த முயற்சிகளுக்கு பெரும் துணையாக இருக்கிறார் என்கின்றனர்.
பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம்
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் பயணித்துள்ளதாக கூறுகின்றனர் இருவரும். இது குறித்து சிவரஞ்சனியின் கணவர், சித்த மருத்துவர் சரவணகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வாரின் கருத்துக்களால், உந்தப்பட்டு, பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் கடந்த 2014-15ம் ஆண்டில் இருந்து ஈடுபட்டு வருகின்றோம்.
முதல் ஆண்டு 130 நெல் ரகங்களை பயிரிட்டோம். தொடர்ந்து படிப்படியாக அதிக ரகங்களை பயிரிட்டு, தற்போது 1,250 நெல் ரகங்களை பயிரிட்டுள்ளோம். இதில், 170 நெல் ரகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய ரகங்கள். பாகிஸ்தான் நாட்டின் ரகம் 1 மற்றும் இலங்கையின் கைக்கா, போரா ரகம், பர்மா 2, வங்கதேசம் ரகம் 1 ஆகியவை தவிர மற்ற ரகங்கள் கர்நாடகம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று, விவசாயிகளுடன் கலந்துரையாடி விதைகளை பெற்று வந்துள்ளோம். என் மாமனார் சிவாஜி, மனைவி சிவரஞ்சனி மற்றும் நண்பர்களுடன் சென்று நெல் விதைகளை சேகரிக்கிறோம்'' என்றார்.
சாகுபடி செய்யும் முறை
பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து வரும் பொறியியல் பட்டதாரியான சிவரஞ்சனி சரவணகுமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''மறைந்த நம்மாழ்வாருடன் என் தந்தை தொடர்பில் இருந்தார். அவர் மூலம் பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்த ஆர்வம் ஏற்பட்டது. எங்கள் பகுதி மானாவாரி, மணற்பாங்கான பகுதி. மழை நீரை மட்டும் நம்பி, சுமார் 3 ஏக்கர் பரப்பில் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம். இதற்காக 6 அடி நீளம், 5 அடி அகலத்தில் ஒரு பாத்தி என தனித்தனியாக 1, 250 பாத்திகளை அமைத்துள்ளோம். ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு நெல் ரகத்தை விதைத்துள்ளோம். கடந்த அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கினோம். இதில், 90 நாட்கள் முதல் 180 நாட்கள் வரை உள்ள நெல் ரகங்கள் உள்ளன.
வறட்சி, வெள்ளத்தை தாங்கும் வகையிலான பயிர்கள் உள்ளன. இப்பகுதியில் உப்பு நீர் என்பதால், ஆழ்துளைக் கிணறு மூலம் சாகுபடி செய்ய முடியாது. ஆகையால், பருவமழையை மட்டும் நம்பி பணிகளைத் தொடங்கியுள்ளோம். ஒரு குட்டை வெட்டி, அதில் தண்ணீரை சேமித்து, பாசனம் செய்து வருகிறோம். அறுவடைக்கு வரும் ரகங்களுக்கு ஏற்ப ஜனவரியில் இருந்து அறுவடை செய்து வருகிறோம். மொத்தம் 1250 வகையான நெல் ரகங்களையும் ஆவணப் படுத்தும் நோக்கத்தில், ஒவ்வொரு வகை நெல் கதிர்களையும் தனித்தனியாக அடையாள குறியிட்டு, ரகங்களுக்கான பெயரை உறுதிப்படுத்தி தனித்தனியே பதப்படுத்துகிறோம். பதப்படுத்தப்பட்ட நெல்மணிகளை தனித்தனி கண்ணாடி குடுவைகளில் வைத்து, காட்சிப்படுத்தி வருகிறோம். இதை லாபநோக்கமின்றி, எங்கள் ஆர்வத்தால் தொடர்கிறோம்.'' என்கிறார்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் வருகை
பாரம்பரிய நெல் ரகங்கள் பயிரிடப்பட்டுள்ள இவர்களது நிலத்திற்கு பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள், இயற்கை விவசாயிகள், விவசாயிகள் சங்கத் தலைவர்கள் நேரடியாக சென்று பார்த்து வருகின்றனர். இதன்படி, மாணவர்களுடன் பிப்ரவரி 9ம் தேதி சென்று பார்த்த பள்ளி ஆசிரியை பிரமிளா பிபிசி தமிழிடம் கூறுகையில், ''திறன்சார் கல்வித் திட்டத்தில் அடிப்படை வேளாண்மை குறித்து மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லும் வகையில் இவற்றை பார்த்தோம். ஒவ்வொரு ரகங்களையும் பார்த்து பிரமிப்பாக இருக்கிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் வசித்தாலும், இவ்வளவு ரகங்களையில் ஒரே இடத்தில் இப்போதுதான் பார்க்கிறோம். பல ரகங்களின் பெயர்களை இங்கு வந்துதான் கேட்டுத் தெரிந்து கொண்டோம். மாணவர்களுக்கும் புதிய அனுபவமாக உள்ளது. மிகவும் ஆர்வமாக கேட்டு, தெரிந்து கொண்டனர். தொடர்ந்து மற்ற மாணவர்களுக்கும் எடுத்துச் சொல்வோம்'' என்கிறார்.
மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வாரின் வழியை பின்பற்றி பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுத்த நெல் ஜெயராமன் முயற்சிகளை தமிழ்நாடு அரசு அங்கீகரித்தது. அவரது மறைவுக்குப் பின் தற்போது சிவரஞ்சனி, சரவணகுமார் தம்பதியர் இந்தியாவில் பல மாநிலங்களுக்கு சென்று 1250 வகையான நெல் ரகங்களை மீட்டெடுத்துள்ளனர். அதனை தங்களுக்கு சொந்தமான நிலத்தில், பயிரிட்டு பெரும் சாதனையை புரிந்துள்ளார்கள். இதை கின்னஸ் ரெக்கார்டாக பதிவு செய்ய வேண்டும். மத்திய, மாநில அரசுகள் உரிய அங்கீகாரம் அளித்து, ஊக்கப்படுத்த வேண்டும். வேளாண் பல்கலைக்கழக வேளாண் விஞ்ஞானிகள் குழுவை அனுப்பி வைத்து உரிய ஆய்வுகளுக்கு உட்படுத்த வேண்டும். இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளின் மகசூல் இழப்பை கருத்தில் கொண்டும்,மருத்துவ குணத்தை கவனத்தில் கொண்டும் கூடுதல் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்திடவேண்டும். அதனை மருத்துவமனைகள், ஊட்டச்சத்து மையங்கள், சத்துணவு கூடங்களில் உணவுப் பொருட்களாக பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும்.''என்றார்.
மாவட்ட நிர்வாகம் பாராட்டு
சரவணகுமார் - சிவரஞ்சனி தம்பதியின் முயற்சியை தமிழ்நாடு வேளாண் துறையும் ஊக்குவித்து வருகிறது. வேளாண்மைத்துறை துணை இயக்குநர் பன்னீர்செல்வம் பிபிசி தமிழிடம் கூறுகையில், ''பாரம்பரிய நெல் ரகங்களை மீட்கும் இவர்களது முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், கடந்த 2020ம் ஆண்டு சிறந்த பெண் விவசாயி விருது மற்றும் 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தொடர்ந்து வேளாண்ந்துறை அதிகாரிகளும் கள ஆய்வு செய்து வருகின்றனர். அதிக விளைச்சல் தரும் ரகங்களை ஊக்குவித்து வந்தாலும், இது போன்ற பாரம்பரிய ரகங்களை 10 சதவீதம் சாகுபடி செய்யலாம்'' என்றார்.
சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதியை நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், வேளாண் இணை இயக்குநர் அகண்ட ராவ் உள்ளிட்டோர் நேரில் பார்வையிட்டனர். நடப்பாண்டில் குடியரசு தின விழாவில், சிவரஞ்சனியை மாவட்ட ஆட்சியர் பாராட்டி சான்றிதழ் வழங்கியுள்ளார்.
பிற செய்திகள்:
- சசிகலா, இளவரசி மீதான லஞ்ச வழக்கு: கர்நாடக ஐபிஎஸ் அதிகாரி ரூபா வெளியிட்ட முக்கிய தகவல்
- நரேந்திர மோதி: "எது கூட்டாட்சி தெரியுமா?" - பொங்கிய பிரதமர் - ராகுல் என்ன சொன்னார்?
- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: கொங்கு மண்டலத்தில் கள நிலவரம் என்ன?
- ஹிஜாப் சர்ச்சை: வன்முறையால் கல்லூரிகள் முடக்கம் - முஸ்லிம் பெண்களுக்கு மலாலா ஆதரவு
- உலகில் முதல் முறை: தண்டுவடம் துண்டான பின்னும் எழுந்து நடக்கும் மனிதர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்