You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ராமானுஜர் சிலை: இந்தியாவின் '2வது உயரமான' சிலையின் சிறப்பு என்ன?
- எழுதியவர், பல்லா சதீஷ்
- பதவி, பிபிசி தெலுங்கு
ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது.
'சமத்துவத்துக்கான ராமானுஜர் சிலை' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிலையின் பயன்பாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று மாலை 5 மணியளவில் தொடங்கவுள்ள நிகழ்வின்போது தொடங்கி வைக்கவுள்ளார்.
தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ சின்ன ஜீயர் சுவாமி தனது ஆசிரம வளாகத்தில் கட்டுகிறார். இத்திட்டத்திற்கான முன்மொழிவுகள் 2014 முதல் தொடங்கியிருந்தாலும், 2021ஆம் ஆண்டு முழு திட்டமும் நிறைவடைந்தது.
விசிஷ்டாத்வைத கோட்பாட்டாளரான ராமானுஜரின் 1000வது பிறந்தநாளை விழாவின் போது, இந்த சிலை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ராமானுஜர் இந்து பக்தி வழிபாட்டு மரபில் ஒரு முன்னோடியாவார். இவர் 1017 முதல் 1137 வரையிலான ஆண்டுகளில் வாழ்ந்தவர் என்று கூறப்படுகிறது.
இவர் விசிஷ்டாத்துவைதத்தை முன்வைத்தவர். இவரைப் பின்பற்றுபவர்கள் ஸ்ரீ வைணவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
ராமானுஜர் தமிழ்நாட்டில் உள்ள ஸ்ரீபெரும்புதூரில் பிறந்தவர். காஞ்சிபுரத்தில் கல்வி பயின்றவர் இவர். காஞ்சிபுரம் வரதராஜ சுவாமியின் பக்தர் இவர்.
இவரது சமய நடவடிக்கைகள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்தை மையமாகக் கொண்டிருந்தன. இவரது கல்லறை ஸ்ரீரங்கம் ரங்கநாத சாமி கோயிலில் உள்ளது.
சில கோயில்களில் தலித்துகள் நுழைவது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்களை கோயில் அர்ச்சகர்கள் ஆக்கியது, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்களை வைணவத்துக்குள் கொண்டு வந்தது உள்ளிட்டவற்றில் இவர் பங்காற்றியுள்ளார்.
சிலையின் சிறப்பம்சங்கள்:
இந்த ராமானுஜர் சிலையின் உயரம் 108 அடி. இதன் மேடையின் மொத்த உயரம் 54 அடி மற்றும் பத்ம பீடத்தின் உயரம் 27 அடி. அந்த இடத்திற்கு பத்ரபீடம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
கீழே உள்ள பீடத்துடன் சேர்த்து இந்த சிலை 216 அடி உயரம் உள்ளது. பீடத்தில் 54 தாமரை இதழ்கள், அவற்றின் கீழ் 36 யானை சிற்பங்கள், அல்லி இதழ்களில் 18 சங்குகள், 18 சக்கரங்கள், சிலைக்கு அருகில் ஏற 108 படிகள் ஆகியவை உள்ளன.
பல்வேறு திராவிட சாம்ராஜ்யங்களின் சிற்ப பாணிகளின் கலவையாக இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. விரல் நகங்களிலிருந்து 135 அடி உயரமுள்ள பிரமாண்டமான மந்திரக்கோல் வரை இந்த சிலையில் கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. சிலையில் ராமானுஜர் தியான நிலையில் காட்சியளிக்கிறார்.
பீடத்தின் மேலே உள்ள முக்கிய சிலை அல்லாமல், பத்ரபீடத்தில் 120 கிலோ எடையுள்ள தங்க சிலை ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. ராமானுஜாச்சாரியார் 120 ஆண்டுகள் வாழ்ந்ததாகக் கூறப்படுவதால், அதே கிலோ எடையுள்ள தங்கச் சிலையை நிறுவிவுள்ளனர்.
இந்த பிரம்மாண்ட சிலை தவிர, மேலும் 108 சிறிய கோயில்கள் அங்கு கட்டப்படுகின்றன. இந்த மொத்த 108 கோயில்களை, ஸ்ரீ வைஷ்ணவ சமூகப் பிரிவினர், இதனை விஷ்ணு மற்றும் விஷ்ணுவின் அவதாரங்களின் 108 திவ்ய தேசங்களாகக் கருதுகின்றனர்.
திவ்ய தேசங்களில் உள்ள மாதிரி கோயில்கள் இங்கு கட்டப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக, கற்களால் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டமைப்புகள் ஹோய்சாலக் (Hoyasala) கட்டடக்கலை பாணியில் உள்ளன. இங்கு மொத்தம் 468 தூண்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிற்பிகளும் வல்லுனர்களும் இதற்காகப் பணியாற்றினர்.
இந்த சிலைகள் தவிர, ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தொகுப்புகள் உள்ள இடம், வேத நூலகம், அறிஞர் கூட்டங்கள் மற்றும் கருத்தரங்குகளுக்கான அரங்கம், ஆம்னி மேக்ஸ் திரையரங்கம் ஆகியவை உள்ளன. அங்கு இசை நீரூற்று (musical fountain) அமைக்கப்பட்டு வருகிறது. ராமானுஜ சிலைக்கு அபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
ஆயிரம் கோடி மதிப்புள்ள திட்டம்
மொத்த திட்டத்திற்கும் ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டது என்று ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், இத்திட்டத்திற்கான முழு நிலமும் 45 ஏக்கர் பரப்பளவில் உள்ளது என்றும், பிரபல தொழிலதிபர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ் இந்த நிலத்தை நன்கொடையாக வழங்கியதாகவும் தெரிவித்தார்.
'மை ஹோம்ஸ்' குழுமத்தின் தலைவர் ஜூபல்லி ராமேஸ்வர ராவ் தற்போதைய தெலங்கானா அரசுக்கு மிக நெருக்கமானவர். நன்கொடைகள் மூலம் ரூ.1,000 கோடி திரட்டியுள்ளதாக கீர் ஒருங்கிணைந்த வேதிக் அகாடமி (ஜீவா) அறிவித்துள்ளது. இந்த சிலைக்கு ரூ.1,000 கோடியிலிருந்து வரி தவிர, ரூ.130 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்று 144 யாக சாலைகளில், 1035 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, 1.5 லட்சம் கிலோ பசு நெய் மூலம் 5000 அரசசகர்கள் இந்த விழாவில் லட்சுமி நாராயண யாகம் செய்ய உள்ளனர்.
சீனாவில் உருவான சிலை:
சீனாவின் நின்ஜியாங்கில் உள்ள செங்குவாங் குழுமத்தைச் சேர்ந்த எரோஜன் கார்ப்பரேஷன் (Erojan Corporation) என்ற நிறுவனம், இந்த சிலையை நிறுவ தனது பங்கை அளித்துள்ளது. உலகம் முழுவதும் பல பிரம்மாண்ட சிலைகளை இந்நிறுவனம் உருவாக்கியுள்ளனர்.
இந்த சிலை அமைப்பதற்கு 7000 டன் பாரம்பரிய ஐந்து உலோகக் கலவைகளைப் பயன்படுத்தியதாக ஒருக்கிணைப்பாளர்கள் கூறுகின்றனர். இதில், தங்கம், வெள்ளி, வெண்கலம், பித்தளை மற்றும் துத்தநாகம் பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஹைதராபாத்தின் புதிய சுற்றுலா தலம்
இந்தச் சிலை ஹைதராபாத்தில் ஒரு புதிய சுற்றுலா தலமாக உருவாக்கும். யாதாத்ரி கோயிலுடன் இந்த ராமானுஜ சிலை, விஷ்ணு பக்தர்களையும் மற்றவர்களையும் ஈர்க்கும். மேலும், அந்நகருக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கக்கூடும்.
எளிமையான வாழ்க்கை வாழ்ந்த ஒருவருக்கு 1,000 கோடி ரூபாயில் சிலை தேவைதானா என்றும், ராமானுஜர் உண்மையாகவே சமத்துவத்துக்காக பாடுபட்டவரா என்றும் தெலுங்கு சமூக ஊடக வட்டாரங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
- "நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" - அயோத்தி இளைஞர்களின் குரல்
- நடிகர் விஜய் - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி திடீர் சந்திப்பு ஏன்?
- நீட் விலக்கு மசோதா மீது ஆளுநரே இறுதி முடிவு எடுக்கலாமா? சட்டம் என்ன சொல்கிறது?
- ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றிப் பாதையில் இந்திய இளைஞர்கள் – யார் இவர்கள்?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: