You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு மொழிப்போர் தியாகிகள் தினம்: இந்தித் திணிப்பை எதிர்த்து இத்தனை பேர் உயிரிழந்தது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
ஜனவரி 25ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் மொழிப் போர் தியாகிகள் தினமாக தமிழ்நாட்டில் அனுசரிக்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர், பிரதான அரசியல் கட்சிகள் ஆகியவை இந்த தினத்தில் மொழிப் போரில் இறந்த தியாகிகளை நினைவுகூர்கின்றனர். இந்த நாளின் முக்கியத்துவம் என்ன?
தமிழ்நாட்டில் பல காலகட்டங்களில் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 1937ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்த பிறகு, சி.ராஜகோபாலாச்சாரி முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்ற சில நாட்களில் நடந்த கூட்டம் ஒன்றில், கட்டாய இந்தி குறித்து அவர் பேசினார்.
இதற்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையிலும் 1938 ஏப்ரலில் பள்ளிக்கூடங்களில் கட்டாயமாக இந்தியைக் கற்பிப்பதற்கான ஆணை இடப்பட்டது. இதனை எதிர்த்து பெரும் போராட்டங்களை தனித் தமிழ் இயக்கங்களும் பெரியாரும் மேற்கொண்டனர். பெரியார் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து போராட்டங்கள் நடந்த நிலையில், 1940ஆம் ஆண்டு பிப்ரவரியில் கட்டாய இந்தியைக் கைவிடுவதாக அரசு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தின்போது நடராசன், தாளமுத்து ஆகிய இருவரும் சிறையிலேயே உயிரிழந்தனர்.
1948ஆம் ஆண்டு ஜூன் மாதம் மீண்டும் இந்தி கட்டாயமாக்கப்படுவது குறித்து சென்னை மாகாண அரசு அறிவித்தது. முதலில் சென்னை மாகாணத்தில் இருந்த (இப்போதைய) ஆந்திர, கேரள, கர்நாடகப் பகுதிகளில் இந்தி கட்டாயமென்றும் (தற்போது) தமிழ்நாடு இருக்கும் பகுதிகளில் விருப்பப் பாடமென்றும் அறிவிக்கப்பட்டது. பிறகு, தமிழ்நாட்டிலும் கட்டாயப்பாடமாக்கப்பட்டது. முடிவில் 1950ல் இந்த ஆணை விலக்கிக்கொள்ளப்பட்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது, ஆட்சி மொழியாக எதனைப் பயன்படுத்துவது என்பதில் நீண்ட விவாதம் ஏற்பட்டது. முடிவில் இந்தி பேசாத மாநிலங்களுக்கு அதனைக் கற்றுக்கொள்ள 15 ஆண்டு காலம் அவகாசம் அளிப்பது என்றும், 1965 முதல் இந்தியை ஆட்சி மொழியாக அறிவிக்கலாம் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
ஆனால், தொடர்ந்து இந்திக்கு எதிரான மன நிலை பல மாநிலங்களில் நிலவிய நிலையில், இந்தி பேசாத மாநிலங்களின் மக்களுக்கு உறுதி அளிக்கும் வகையில் 1963ல் கொண்டுவரப்பட்ட ஆட்சி மொழிச் சட்டத்தில், 1965க்குப் பிறகும் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக தொடரலாம் என்று ஒரு திருத்தம் கொண்டுவரப்பட்டது. "தொடரலாம்" என்று இருப்பதை "தொடரும்" என்று மாற்ற வேண்டுமெனக் கோரப்பட்டது.
இரண்டின் பொருளும் ஒன்றுதான் என்றார் பிரதமர் நேரு. அப்படியானால், தொடருமென மாற்றுவதில் என்ன தயக்கமெனக் கேள்வியெழுப்பினார் திமுக தலைவர் சி.என். அண்ணாதுரை. எதிர்ப்புகளை மீறி 1963 ஏப்ரல் 23ஆம் தேதி அந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்தி எதிர்ப்புக்கான குரல்கள் ஆங்காங்கே ஒலித்த நிலையில், திருச்சிராப்பள்ளி மாவட்டம் கீழப்பழுவூர் சின்னச்சாமி என்பவர் 1964ல் தீக்குளித்து உயிரிழந்தார். இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த பக்தவத்சலம் 1964 மார்ச் மாதம் மாநிலத்தில் மும்மொழிக் கொள்கை அறிமுகப்படுத்தப்படுமென அறிவித்தார். ஆட்சி மொழிச் சட்டம் செயல்படுத்தப்படும் நாளான 1965ஆம் ஆண்டின் ஜனவரி 26ஆம் தேதி நெருங்க நெருங்க பதற்றம் அதிகரித்தது.
இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒருங்கிணைக்க தமிழக மாணவர்கள் இந்தி எதிர்ப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. ஜனவரி 17ஆம் தேதி இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு திருச்சியில் கூட்டப்பட்டது. எதிர்வரும் குடியரசு தினத்தைக் கொண்டாட ஏதுவாக, மொழி மாற்ற தினத்தை ஒரு வாரம் தள்ளிவைக்கும்படி அண்ணாதுரை கோரினார். அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. ஆகவே ஜனவரி 25ஆம் தேதியை துக்க தினமாக அறிவித்தது தி.மு.க. அன்றைய தினம் சி.என். அண்ணாதுரையும் 3,000 தி.மு.கவினரும் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையில் நடந்த ஊர்வலத்தில் வடக்கு மாசி வீதியில் இருந்த காங்கிரஸ் அலுவலகம் அருகே மோதல் ஏற்பட்டது. முடிவில் அந்த அலுவலகப் பந்தல் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதையடுத்து மதுரை முழுவதும் கலவரம் பரவியது.
அடுத்தடுத்து மாநிலம் முழுவதும் கலவரம் பரவியது. ரயில்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டன. கலவரத்தைக் கட்டுப்படுத்த துணை ராணுவப் படையினர் களமிறங்கினர். ஜனவரி 26ஆம் தேதி அதிகாலை சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவலிங்கம் என்பவர் தீக்குளித்தார்.
ஜனவரி 27ஆம் தேதி அரங்கநாதன் என்பவர் தீக் குளித்து உயிரிழந்தார். மேலும் முத்து, சாரங்கபாணி, வீரப்பன் ஆகியோர் தீக்குளித்து உயிரிழந்தனர். மேலும் சிலர் விஷம் குடித்து உயிரிழந்தனர்.
ஜனவரி 28ஆம் தேதி முதல் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன. கலவரங்கள் பிப்ரவரி மாதமும் தொடர்ந்த நிலையில், இந்திய அரசில் அமைச்சர்களாக இருந்த சி. சுப்பிரமணியம், ஓ.வி. அழகேசனும் இந்தி விவகாரத்தில் தங்கள் அரசின் பிடிவாதத்தை எதிர்த்து பதவி விலகல் கடிதம் அளித்தனர்.
முடிவில், பிப்ரவரி 11ஆம் தேதியன்று உரையாற்றிய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி நேருவின் வாக்குறுதி நிறைவேற்றப்படுமென உறுதியளித்தார். இந்த வாக்குறுதியை அடுத்து பிப்ரவரி 12ஆம் தேதி போராட்டங்கள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன.
பிற்காலத்தில் அரசியலில் தீவிரமாக ஈடுபட்ட, எல். கணேசன், கா. காளிமுத்து, பெ. சீனிவாசன், துரை முருகன், சேடப்பட்டி முத்தைய்யா உள்ளிட்டவர்கள், இந்த 1965ஆம் வருட இந்தித் திணிப்புஎதிர்ப்புப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தனர்.
ஜனவரி இருபத்தி ஐந்தாம் தேதி துவங்கிய இந்தப் போராட்டம் நடுவில் சில இடைவெளிகளுடன் மார்ச் மாத நடுப்பகுதி வரை தொடர்ந்தது. போராட்டம் துவங்கிய ஜனவரி 25ஆம் தேதியே தி.மு.க. தலைவர்கள் பலர் கைதுசெய்யப்பட்டனர். தொடர்ந்து நடந்த போராட்டத்தில் பல இடங்களில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் பல மாணவர்கள் உயிரிழந்தனர். பல மாணவர்கள் தீக்குளித்து உயிரிழந்தனர். இந்தப் போராட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70 பேர் வரை இறந்ததாகச் சொல்லப்பட்டாலும் நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்துள்ளனர் என்கிறார்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்.
தமிழ்நாட்டில் 1967ல் நடந்த தேர்தலில் காங்கிரஸ் தோற்கடிக்கப்பட்டு தி.மு.க. ஆட்சியைப் பிடிப்பதற்கு இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் முக்கியக் காரணமாக அமைந்தது. தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, கீழப்பழுவூர் சின்னச்சாமி தீக்குளித்து உயிரிழந்த ஜனவரி 25ஆம் நாளை தமிழ்நாட்டில் மொழிப் போர் தியாகிகள் தினமாக அனுசரிப்பது துவங்கியது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யுடியூப்